Tuesday, March 29, 2016

'பறவை மனிதர்' - ஹமீது ஜாஃபர்

ஈராண்டுகளுக்கு முன் ஷார்ஜா பழைய ஏர்போர்ட் அருங்காட்சியகம் சென்றிருந்தபோது அங்கே ஒரு மனிதன் இறக்கைகளைக் கட்டிக்கொண்டு பறப்பதுபோல் ஓர் வடிவம் தொங்கவிடப்பட்டிருந்தது. அதன்கூட முழுஅளவிலான பழைய விமானங்களும் தொங்கவிடப்பட்டிருந்தன. அவற்றை பார்த்தேனே ஒழிய குறிப்பு எடுக்கவில்லை, இருந்தாலல்லவா எடுக்க?

நாட்கள் நகர்ந்து வருடங்களாயின. அருட்கொடையாளர்களை எழுதி முடித்துவிட்டு இது போதும் என்றவனாக கவனம் கொள்ளவில்லை. அதன் பிறகு முகநூல்.. அதில் குப்பையைக் கொட்டிக்கொண்டிருக்கவே நேரம் சரியாக இருந்தது. (சில நல்ல நட்புகள் கிடைத்தன என்பது வேறு விஷயம்.)

திடீரென்று ஒரு நாள் ‘நானா கையெ அரிக்கிது’ என்றார் ஆபிதீன். ‘பணம் வரப்போவுது’ என்றேன். வந்துகிந்துடப்போவுது...! என்று சொல்லிவிட்டு அது இல்லை நானா ரொம்ப நாளாச்சு உங்க எழுத்து வந்து. எழுதுங்க என்றார். ஆசை இருக்கு ஆனா அலுப்பு தட்டுது, ஆகட்டும் பார்க்கலாம் என்றேன்.

ஒரு வாரம் ஓடியது என் கண்முன்னே இருந்த காலண்டரில் ஆயிரமாண்டுகளுக்கு முன் முதலில் பறந்த மனிதரைப் பற்றிய சிறு குறிப்பைத் தவிர வேறொன்றுமில்லை. சரி, ஆபிதீன் சொல்லிட்டாரே இவரை பற்றி எழுதுவோம் என அவரை தேடுகின்ற முயற்சியில் கிடைத்த தகவல்கள் சில இங்கே....

மனிதன் நடக்க ஓடத் தெரிந்தபிறகு பறக்கவேண்டும் என்ற ஆசை வாட்டி எடுத்திருக்கவேண்டும். முயற்சிகள் பல்லாண்டுகள் நடந்தன. என்றாலும் கி.மு 5 ம் நூற்றாண்டில்தான் சீனர்கள் பறக்க முயன்று முடிவில் பட்டத்தைக் கண்டுபிடித்தனர். பட்டத்தின் நூலை ஒருவர் பிடித்துக்கொள்ள புத்த பிக்குகள் அதில் பறந்ததாக சில தகவல்கள் சொல்கின்றன ஆனால் உறுதி இல்லை. ஆனால் நம் தமிழன் பறந்திருக்கிறான். ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சீவக சிந்தாமணியில்..

 “கல்லார் மணிப் பூண் அவள் காமம் அனைத்து கன்றிச்
 சொல்லாது கேளான் நனி சூழ்ச்சியில் தோற்ற வாறும்
 புல்லார் புகலப் பொறி மஞ்ஞையில் தேவி போகிச்
 செல் ஆறு இழுக்கிச் சுடுகாடு அவள் சேர்ந்த வாறும்”    

அரசியல் சூழ்ச்சியால் ஏமாங்கத நாட்டு மன்னன் சச்சந்தன் தன் மனைவி விசையை காப்பற்றவேண்டி மயிற்பொறி இயந்திரத்தில் வைத்து பறக்க செய்து தப்பிக்க வைத்தான். அப்பொறி ஒரு சுடுகாட்டில் இறங்கியது, அங்கேதான் சீவகன் பிறந்தான் என்று 9 ம் நூற்றாண்டின் நூலான சீவக சிந்தாமணியில் சொல்கிறார் திருத்தக்கத்தேவர். ஆக ஒன்பதாம் நூற்றாண்டில் தமிழன் பறந்திருக்கிறான். அதே காலக்கட்டத்தில்தான் அரபியும் இறக்கையைக் கட்டிக்கொண்டு பறந்திருக்கிறார். (ஒருவேலை அந்த மயில் விமான டெக்னாலஜியை ரகசியமாக சுட்டிருப்பாரோ?)

முதலில் விமானத்தைக் கண்டுபிடித்தவர் பெயரை சொல்லும் அறிவியல் முதலில் யார் பறந்தார் என்பதை சொல்ல மறந்துவிட்டது. சொல்ல மறந்துவிட்டதா? இல்லை சொல்லத் தெரியவில்லையா? இல்லை தெரிந்தும் மனமில்லையா?

வரலாற்றின் பின்னோக்கிச் சென்றால் விமானத்தைக் கண்டுபிடித்த ரைட் சகோதரர்களுக்கு முன்னோடியாக இருந்தவர் 15ம் நூற்றாண்டின் லியனார்டோ டாவின்சி   புகழ்பெற்ற ஓவியமான மோனொலிசாவை வரைந்த இவர், சிறந்த ஓவியர் மட்டுமல்ல விஞ்ஞானியும் வடிவமைப்பாளருமாவார்.  பாராசூட், ஹெலிகாப்டர் ஆகியவற்றை உருவாக முன்னோடியானவர், வடிவமைத்தவர். ஆனால் பறக்கவில்லை.

அதற்கும் முன்பாக 11 ம் நூற்றாண்டில் மல்மேஸ்பரி மடத்தில் வாழ்ந்த ஈல்மெர்  என்ற இளம் பாதிரியார் 200 மீட்டர் பறந்தார். அதன்பின் டாவின்ஸியின் கண்டுபிடிப்பால் ஆர்வம்கொண்ட அஹமத் செலபி சில மாற்றங்கள் செய்து 1638 ல் 183 அடி உயரமுள்ள கோபுரத்திலிருந்து கழுகு பறப்பது போல் பறந்ததாக நேரில் பார்த்த வரலாற்றாசிரியர் இவிலியா செலபி குறிப்பிடுகிறார்.

இப்படி ஒன்றிரண்டுபேர் பறந்தாலும் இவர்களுக்கு முன்னோடியாக இருந்தவர் , முதன்முதலில் பறந்தவர் இப்னு ஃபிர்நாஸ்.


அப்பாஸ் இப்னு அல் ஃபிர்நாஸ் (கி.பி 810 – 887)

இவரின் முழுப் பெயர் அப்பாஸ் அபு அல்காஸிம் இப்னு ஃபிர்நாஸ் இப்னு விர்தாஸ் அல் தக்குரினி. அராபியர்கள் தங்கள் குலம், தங்கள் குடும்பப்பிரிவு அனைத்தையும் பெயருடன் இனைத்திருப்பார்கள். அதை வைத்து அவர் யார், தகப்பனார் யார், பாட்டனார் யார் என்பதை கண்டுபிடித்துவிடலாம். அல்தக்குரினி குலத்தை சார்ந்த விர்தாஸின் மகன் பிர்நாஸின் மகன் அப்பாஸ் என்பது இவர் பெயர். இவருக்கு காஸிம் என்ற மகன் இருந்ததும் இப்பெயரில் தெரியவருகிறது.

இன்றைய ஸ்பெயினாகிய அந்துலூசியாவில் உமையா கலிஃபா ஆட்சி நடந்துக்கொண்டிருந்த காலத்தில் பெர்பர் பழங்குடி இனத்தில் ரோண்டா அருகிலுள்ள கோரா தக்ர்னா என்ற சிற்றூரில் பிறந்தார். கல்வி கற்றது, வாழ்ந்தது, மறைந்தது எல்லாம் கொர்தோபாவில், அந்துலூசியாதான். பிலிப் ஹிட்டியின் கூற்றுபடி இவர் வேதியல், மருந்தியல், இயற்பியல், பொறியியல், வான்இயல், இசை என பல்வேறு துறைகளின் கல்விகளைப் பயின்றுள்ளார்.

சாதனைகள்

பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்றிருந்த இவர் அல் மக்காதிதா என்ற பெயரிடப்பட்ட நீர் கடிகாரத்தைப் படைத்து தொழுகைக்கான நேரத்தை அறியும்படி செய்தார். கிரேக்க, ரோமேனியர்களின் காலத்திலிருந்து செய்யப்படும் கண்ணாடிப் பொருட்கள் எதோ ஒரு நிறம் கொண்டதாகவே இருந்துவந்தது. முதன் முதலில் நிறமற்ற crystal clear
கண்ணாடியை உருவாக்கினார். படிப்பதற்காக கண்ணாடி சில்லை (Reading Stone) உருவாக்கினார். தவிர காண்டாக்ட் லென்ஸ்போன்றுதெளிவாகவும் நுணுக்கமான வகையில் மூக்குக் கண்ணாடியையும் உருவாக்கினார்.

அந்துலூசியாவிலிருந்து எகிப்துக்கு பளிங்கு கற்களை அனுப்பி அவற்றை அறுத்து மெருகேற்றி கொண்டுவந்தார்கள். இது காலவிரயத்தையும், செலவையும் ஏற்படுத்தியது. எனவே அதற்கான கருவியைக் கண்டுபிடித்து உள்நாட்டிலேயே அத்தொழிலை செய்யவைத்தார்.

மருந்தியல் படித்திருந்தாலும் மருத்துவம் செய்யவில்லை. மாறாக மருத்துவர்களையும், மருந்து விற்பவர்களையும் சந்தித்து, தான் வகைப்படுத்திய மூலிகை மற்றும் செடிகளின் தன்மைகளையும் அதன் மருத்துவ குணங்களையும் அவற்றிலிருந்து உண்டாக்கிய மருந்துகளையும் விளக்கி வருவது இவரது பணிகளில் ஒன்றாக இருந்தது. இவருடைய திறனையும் துடிப்பையும் கண்ட அரசு, உமையா இளவரசர்களின் உணவுப் பரிசோதகராக இவரை நியமித்தது.

அந்துலூசியக் கவிதை புணைவதிலும், அணி இலக்கணத்திலும் திறன் பெற்றிருந்த இவர்,  கொர்தோபாவில் ஜிரியாப் இசைக் கல்லூரியில் முதன்மை ஆசிரியராக பணியில் அமர்த்தப்பட்டார். எல்லா துறைகளிலும் தொழில்நுட்பம் அசுர வேகத்தில் வளர்ந்துகொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் லேசர் ஒளிக்கற்றை மூலம் ஒரு புது உலகின் தோற்றத்தை கண்முன் நிறுத்தமுடியும். ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் மின்னணு போன்ற தொழில் நுட்பம் இல்லாத காலத்தில் தன் வீட்டின் ஓர் அறையில் பிரபஞ்சத்தின் மாதிரி வடிவை அமைத்து அதில் கோளங்கள், தாரகைகள், மேகங்கள் இருப்பதுபோன்று அமைத்து பொதுமக்கள் பார்வைக்கு வைத்தார். நிலவறையில் மறைத்துவைக்கப்பட்டிருந்த ஓர் இயந்திரத்தின் மூலம் பார்வையாளர்கள் வியக்கும்வண்ணம் கோளங்கள் எப்படி சுழல்கின்றன இடி மின்னல் எப்படி உருவாகின்றன என்பதை தத்ரூபமாக விளக்கினார். இது பொறியியல் துறையில் இவரது அறிவுக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.

முதலில் பறந்தவர்?

இவர் பறந்ததைப் பற்றி சொல்வதற்குமுன் இருவேறு தகவல்களை இங்கு கூறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ARMEN FIRMAN என்பவர் கி.பி.852ம் ஆண்டில் பறந்ததாகவும் அது தோல்வியில் முடிந்ததாகவும் ஒரு கருத்து நிலவுகிறது. அர்மென் ஃபிர்மன் ஓர் விஞ்ஞானியோ அல்லது அறிவாளியோ அல்ல. அவர் ஓர் சாதாரண மனிதர், ஆனால் எதையும் உற்றுநோக்கும் திறனுள்ளவர். இயற்கை நிகழ்வுகளையும் சூழலையும் உன்னிப்பாகக் கவனிக்கும் பழக்கமுள்ளவர். பறவைகள் பறப்பதை கவனித்த இவர்,  தான் அதுபோல் பறக்க முடியுமா என்ற ஆவலில் உறுதிவாய்ந்த மூங்கில் மரக்குச்சிகளையும் பட்டுத்துணியையும் கொண்டு இறக்கைபோல் வடிவமைத்து கொர்தோபாவின் பெரிய பள்ளிவாசல் மினாரா உச்சியிலிருந்து குதித்து பறக்க முயற்சித்ததாகவும் மாறாக நினைத்தபடி பறக்க முடியாமல் சரிந்தவாறு தரையில் விழுந்தாகவும், தளர்ச்சியான ஆடை போல் வடிவமைக்கப்பட்ட இறக்கையின் விரிவாலும் காற்றின் அழுத்தத்தாலும் வீழ்ச்சி வேகமாக இல்லாமல் மெதுவாக இருந்ததால் லேசான காயங்களுடன் தப்பித்தார் என்றும், அப்போது வேடிக்கைப் பார்த்த கூட்டத்தில் அப்பாஸ் பின் ஃபிர்நாஸும் இருந்ததாகவும் இதுவே பிற்காலத்தில் ஃபிர்நாஸ் பறப்பதற்கு தூண்டுகோலாக இருந்ததாகவும் சில தகவல் தளங்கள் கூறுகின்றன. ஆனால் இவரைப் பற்றிய வேறு தகவல்களோ, பிறப்பு இறப்பு பற்றிய குறிப்போ அல்லது பின்புலமோ அல்லது மீண்டும் பறந்தாரா என்பதற்கான ஆதாரம் எதுவும் காணக் கிடைக்கவில்லை. மேலும் இருவரும் வேறுபட்டவர்கள் என்பதற்கான சரித்திரப்பூர்வமான ஆதாரமும் வலுவானதாக இல்லை.

ஃபிர்நாஸ்

அப்பாஸ் இப்னு ஃபிர்நாஸின் லத்தினிய பெயர் அர்மன் ஃபிர்மன் என்கிறது சில தளங்கள். இவரின் பிறப்பு, கல்வி, கண்டுபிடிப்புகள், சாதனைகள் இவற்றை வைத்து பார்க்கும்போது இருவரும் ஒருவர்தான் என்பது நம்பகத்தன்மை வாய்ந்ததாக உள்ளது. எனவே 852ல் எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது இவருடையதாகவே இருந்திருக்கவேண்டும். இதன் பிறகு இவர் மீண்டும் முயற்சித்திருக்கவேண்டும் ஆனால் அதற்கான செய்திகள் இல்லை.

அதன்பின் 23 ஆண்டுகள் கழித்து கி.பி. 875 ல் தனது 65ம் வயதில் ருஸாஃபா பகுதியிலுள்ள ஜபல் அல் அருஸ் என்ற மலையிலிருந்து பறந்து சாதனைப் படைத்தார். பறப்பதற்குமுன் மக்கள் அனைவரையும் அங்கு வரவழைத்து நான் வடிவமைத்துள்ள இவ்விரு இறக்கைகளும் மேலும் கீழும் அசையக்கூடியது, பறவைப்போல் உயரவும் தாழவும் செய்வேன், உங்களைவிட்டு பிறிந்து சென்று பின் பாதுகாப்பாக தரை இறங்குவேன் என்றார். அதற்காக பறவைகளின் இறகுகளைக்கொண்டு தயாரித்த பிரத்தியேக உடையை அணிந்துக்கொண்டார், நீண்ட பெரிய இறக்கைகளை தன் உடம்பில் பொருத்திக்கொண்டு அவற்றை அசைத்தவாறு நீண்ட தூரம் பறந்தார். ஆனால் தரை இறங்கியது மிக மோசமாகிவிட்டது. நினைத்தபடி நடக்காமல் வேகமாக தரையில் விழுந்து முதுகில் பலமான அடிபட்டது. ஏன் நினைத்தபடி பாதுகாப்பாக தரை இறங்க முடியவில்லை? ஏன் விழுந்தோம்? என தீர யோசித்தபோது தெரியவந்தது பறவை உயரம் போவதற்கும் தாழ்வதற்கும் தரைக்கு வருவதற்கும் அதன் வால் முக்கிய பங்கு வகுக்கிறது, அதை அமைக்கத் தவறிவிட்டோம் என்பதை உணர்ந்தார்,

இவர் பறப்பதை பார்த்துக்கொண்டிருந்த மக்கள் சிலர் வியந்தனர், சிலர் இவருக்கு பைத்தியம் பிடித்துவிட்டது, இவர் வீழ்ந்ததைப் பார்த்து அவருடைய வாழ்வு என்னவாகுமோ என நாங்கள் கவலைகொண்டோம் என்றனர் வேறுசிலர். ஃபோனிக்ஸ் பறவையைவிட வேகமாகப் பறந்தார் என்றார் புலவர் முஃமின் பின் சஅது என்பவர்.

வீழ்ச்சியின் ஏற்பட்ட அடியினாலும் வயதின் முதற்சியாலும் மீண்டும் அவர் முயற்சிக்கவில்லை. அதன்பின் பண்ணிரண்டு வருடம் கழித்து 887ல் தன்னுடைய 77ம் வயதில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.

இவரின் ஆய்வுகள், சாதனைகள் பற்றி பல நூல்கள் எழுதியுள்ளார். ஆனால் ஸ்பெயினில் ஏற்பட்ட புரட்சியில் அவை அனைத்தும் தீக்கிரையாகிவிட்டன - பறத்தல் பற்றிய செய்முறை விளக்க நூலைத் தவிர.

முதன்முதலில் பறந்து சாதனைப் படைத்த இப்னு ஃபிர்நாஸை உலகம் மறக்கவில்லை. அரபுலகம் இவரைப் பெருமைப் படுத்தும் வகையில் பாக்தாதில் ஏர்போர்ட் சாலையில் இவருடைய சிலை நிறுவப்பட்டுள்ளது, 2011ல் கொர்தோபாவில் திறக்கப்பட்ட பாலம் ஒன்றுக்கு இவரின் பெயர் சூட்டப்பட்டது. சந்திரனிலுள்ள பள்ளம் ஒன்றுக்கு FIRNAS CRATER என நாஸா பெயர் சூட்டியுள்ளது.

இஸ்லாமிய அருட்கொடையாளர்களில் இவரும் ஒரு மைல்கல்.
*

நன்றி : ஹமீது ஜாஃபர் ( http://hameedjaffer.blogspot.com/ ) | E-Mail : manjaijaffer@gmail.com
Sources :

1 comment:

  1. Was Abbas Ibn Firnas the first man to successfully attempt flight? - Watch:
    http://www.aljazeera.com/programmes/science-in-a-golden-age/2015/10/pioneers-engineering-al-jazari-banu-musa-151020101726900.html

    ReplyDelete