Thursday, March 17, 2016

முட்டாள்களின் பட்டியல் :))

'மனிதனுக்குச் சிறப்பாக இருப்பது அறிவுதான் என்றாலும் மக்கட் பிறவி எடுத்த அனைவருக்குமே அறிவு இருக்க வேண்டும் என்று சட்டம் கிடையாது. சிலருக்கு அறிவு இருக்கும். பலருக்கு இருக்காது. அறிவு இல்லாதவர்கள் வருத்தப்படக் கூடாது. நமக்கு எத்தனையோ இல்லை - அதுபோல் இதுவும் இல்லை என்று ஆறுதல் அடைந்து கொள்ள வேண்டும்!' என்று ஐயா திருக்குறள் வீ. முனிசாமி தன் சிந்தனைக் களஞ்சியத்தில் சொல்லியிருந்தார். சிரித்துக்கொண்டே அதை தாண்டியபோது இந்தப் பட்டியல் கதை வந்தது (பக். 119 - 120) . 'கண்டிப்பா அதுல ஒங்க பேரு இரிக்கும். பாருங்க' என்று அஸ்மா சொல்லியதால் பார்த்தேன். கொட்டை எழுத்தில் இருந்தது! பகிர்கிறேன் :)
*
பழைய காலத்திலே ராஜா ஒருத்தர் இருந்தார். அவர் தன் மந்திரியிடம், 'இன்றைய தினம் எல்லா அலுவலகங்களையும் சுற்றிப் பார்க்கணும்..' என்று சொன்னாராம். உடனே மந்திரி சரி என்று சொல்லி ராஜாவை அழைத்துக்கொண்டு போனார். கணக்குப் புத்தகங்களையெல்லாம் ராஜா பார்த்தார். அப்போது ஒரு பெரிய நோட்டுப் புத்தகத்தைப் பார்த்தவுடனே ராஜாவுக்குத் திகைப்பும் கோபமும் ஆச்சரியமும் ஏற்பட்டன. அந்தப் புத்தகத்திலே 'முட்டாள்களின் பட்டியல்'னு போட்டிருந்தது. 'என்னய்யா நம்ம ராஜ்யத்திலே இப்படி எழுதி வச்சிருக்கியே?'ன்னு ராஜா கேட்க, மந்திரி, 'பின்னே என்னங்க ராஜா?' இதுபோல் ஒரு பட்டியல் இருக்க வேண்டாமா? எல்லோருமா அறிவாளியா இருக்காக? முட்டாள்களும் இருப்பாங்களே'ன்னு சொன்னார். ராஜா அந்த புத்தகத்தைப் புரட்டிப் பார்த்தபோது முதல் முதல்லே ராஜா பெயர்தான் எழுதப்பட்டிருந்தது! ராஜாவுக்குக் கோபம். 'முட்டாள்கள் பட்டியல்'னு வைத்திருக்கிறதே ரொம்ப தப்பு.. அதுலே என் பேரை முதலில் எழுதியிருக்கியே.. இது என்ன அநியாயம்?' என்று கடிந்துகொண்டார். 'இல்லே மகாராஜா! காரணமாத்தான் எழுதியிருக்கேன்' என்றார் மந்திரி.

'என்ன காரணம்?'

'இல்லே.. போனமாதம் வெளிநாட்டிலேயிருந்து ஒருத்தன் வந்தான். உங்களுக்குக் குதிரைமேல் ரொம்ப ஆசை. 'ஒரு குதிரை வாங்கிட்டு வா'ன்னு அவன்கிட்ட சொன்னீங்க.. உங்க ஆசையை அவன் புரிஞ்சிக்கிட்டு 'பத்தாயிரம் பொன் கொடுங்க. நான் வாங்கிட்டு வரேன்'னான். உடனே உங்களுக்கிருந்த உணர்ச்சி வேகத்திலே பத்தாயிரம் பொன்னை எடுத்து அவன் கையில் கொடுத்துட்டீங்க.. அவன் எந்த ஊர்க்காரன்னு தெரியாது. வாங்கிட்டு வர்ற சக்தி அவனுக்கு இருக்கான்னும் உங்களுக்குத் தெரியாது. உங்க ஆசையிலே எதையும் விசாரிக்காமல் இப்படிச் செய்துட்டீங்க. இப்படிச் செய்யலாமா? ராஜா செய்தால் நாமெல்லாம் என்ன செய்யறதுன்னு பேசாம இருந்துட்டோம். அதனால்தான் உங்க பேரை முட்டாள் பட்டியல்லே முதல்லே சேர்த்துட்டோம்..' என்றார்.

ராஜாவுக்குக் கோபம் வந்துவிட்டது. 'அப்படியா நீ நினைக்கிறே? அவன் குதிரையை வாங்கி வந்து தந்துவிட்டான் என்றால்.. நீ என்ன பண்ணுவே?' என்று கேட்டார்..

உடனே மந்திரி சொன்னார், 'முட்டாள் பட்டியலில் உங்க பேரை அடிச்சிட்டு அவன் பேரை எழுதிக் கொள்வேன்! அந்த இடம் காலியாக இருக்காது...!'

*
நன்றி : வானதி பதிப்பகம்

No comments:

Post a Comment