Tuesday, September 2, 2014

லூகி பிராண்டெலோவின் 'யுத்தம்' (தமிழில் : நாகூர் ரூமி)

அரும்பு இதழில் 1988-ம் ஆண்டு வெளியான நாகூர் ரூமியின் மொழிபெயர்ப்பு இது. அங்கே ஒன்றும் பிரச்சனையில்லை. 2004 திண்ணை இதழில் வெளியானபோது - எழுத்துரு மாற்றம் காரணமாக - நிறைய பெயர்ப்புடன் இருந்தது (அவர் எல்லாம்  ''வர்' ஆகியிருக்கும்; அசிங்கமான உலகம் 'சிங்கமாகியிருக்கும்) . இன்னும் 'ப்படியேதான் இருக்கிறது. தேவையான இடங்களில் 'அ' சேர்த்து இப்போது மாற்றியிருக்கிறேன். சிறந்த கதை. சிரத்தையோடு அவாசியுங்கள்!. - ஆபிதீன்.
***

தமிழில் : நாகூர் ரூமி


ரோம் நகரிலிருந்து இரவு எக்ஸ்பிரஸில் வந்த பிரயாணிகள் சுல்மானாவுடன் மெயின்லைனில் இணையும் அந்தக் காலத்து பாணி சின்ன லோக்கல் ரயிலில் தங்கள் பிரயாணத்தைத் தொடர்வதற்கு சின்ன ஸ்டேஷனான பாப்ரியானோவில் விடியும் வரை தங்க வேண்டியிருந்தது.

விடியலில், அடைசலும் புகையுமாக இருந்த, ஏற்கனவே ஐந்து பேர் தங்கள் இரவைக் கழித்திருந்த ஒரு இரண்டாம் வகுப்புப் பெட்டிக்குள் ஏற்றப்பட்டாள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த ஒரு தடித்த பெண்மணி. ஏறக்குறைய வடிவமற்ற கட்டு ஒன்றைப்போல. அவளுக்குப் பின்னால் மூச்சிறைத்துக் கொண்டும், முனகிக் கொண்டும், சிறிய, மெல்லிய, பலவீனமான, மரண வெளுப்புக் கொண்ட முகத்துடன், சிறிய ஒளி பொருந்திய கண்களுடன் சங்கடப்பட்ட்டுக் கொண்டும் கூச்சமுள்ளவன் போன்ற தோற்றத்துடன் அவள் கணவன் பின் தொடர்ந்தான். கடைசியாக ஒரு மாதிரி இடம் பிடித்துக்கொண்டு, உதவியதற்காக சக பிரயாணிகளுக்கு நன்றி கூறினான் பணிவாக. தன் கோட்டுக் காலரை கீழே இழுத்துவிட முயற்சித்துக்கொண்டிருந்தாள் அவன் மனைவி. அவள் பக்கம் திரும்பி பணிவாக விசாரித்தான்.

' இப்பொழுது உனக்கு எப்படி இருக்கிறது ? '

அவனுக்கு பதில் சொல்வதற்கு பதிலாக தனது முகத்தை மறைக்கும் விதமாய் காலரை மேலிழுத்து விட்டுக்கொண்டாள். ' அசிங்கமான உலகம் ' என்று சோகமான புன்னகையோடு லேசான குரலில் சொல்லிக் கொண்டான் அவன். மேலும் தனது பாவப்பட்ட மனைவி ஏன் இரக்கப்பட வேண்டியவள் என்று தன் சக பிரயாணிகளுக்கு விளக்க வேண்டியது தனது கடமை என்று நினைத்தான்.

அவளது ஒரே மகனை யுத்தம் அவளிடமிருந்து எடுத்துக் கொண்டிருந்தது. அவள் மகனுக்கு இருபது வயது. அவனுக்காக தங்கள் முழு வாழ்வையும் அவர்களிருவரும் அர்ப்பணித்திருந்தனர்.

அவனுக்காக சுல்மானாவில் இருந்த தங்கள் வீட்டைவிட்டு அவனைத் தொடர்ந்து ரோம் நகருக்கு வந்திருந்தனர். அங்குதான் அவன் மாணவனாகவும் குறைந்த பட்சம் ஆறு மாதத்திற்காவது போர்க்களத்திற்கு அனுப்பப்பட மாட்டான் என்ற உத்தரவாதத்தோடு அவனுக்கே விருப்ப மிருந்தால் மட்டும் போருக்குச் செல்லக்கூடியவனாகவும் இருந்தான். திடீரென்று இப்போது மூன்று நாட்களுக்குள் போருக்குச் செல்ல வேண்டும் என்றும் அவர்கள் சென்று அவனை வழியனுப்பும் படியாகவும் தந்தி வருகிறது.

தனது பெரிய கோட்டுக்குள் அந்த அம்மாள் உடலை திருகிக் கொண்டும் வேதனையில் முணுமுணுத்துக் கொண்டும், சமயங்களில் ஒரு மிருகத்தைப்போல் கோபமாக முனகிக்கொண்டும் இருந்தாள். தனது கணவனின் விளக்கங்கள் எல்லாம் இரக்கத்தின் நிழலை இவர்களிடமிருந்து எடுக்க முடியாது ஏனென்றால் அவர்களும் தன்னைப் போன்ற ஒரு நினைவிலேதான் இருப்பார்கள் என்று நிச்சயமாக உணர்ந்தாள்.

அவள் கணவன் தந்த விளக்கங்களை எல்லாம் கவனமாக கேட்டுக் கொண்டிருந்த ஒருவர் சொன்னார் :

'உங்கள் மகன் இப்போதுதானே போர்க்களத்துக்குப் போகிறான். நீங்கள் இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும். என் மகன் முதல் நாள் போருக்கே அனுப்பப்பட்டு விட்டான். இரண்டு தடவை காயத்தோடு திரும்பி வந்தான். மறுபடியும் போயிருக்கிறான். '

'எனக்கு மட்டும் என்ன ? இரண்டு மகன்களும் மூன்று சகோதர மக்களும் களத்தில் இருக்கின்றார்கள். ' என்றார் இன்னொரு பிரயாணி.

'இருக்கலாம். ஆனால் என்னுடைய விஷயத்தில் எனக்கு ஒரே ஒரு மகன்தான் ' என்றார் கணவர்.

'அதனால் என்ன வித்தியாசம் ஏற்பட முடியும் ? ஒரே மகன் என்றால் செல்லம் கொடுத்துக் கெடுத்துவிடுவீர்கள். நிறைய குழந்தைகள் இருந்தால் ஒரே மாதிரி நேசிக்க முடியும். பெற்றோரின் அன்பு என்ன ரொட்டித் துண்டா, எல்லோருக்கும் சரிசமமாக பங்கிட்டுக் கொடுக்க ? ஒரு தகப்பன் என்பவன் வித்தியாசமில்லாமல் தன் எல்லா குழந்தைகளுக்கும் அன்பை முழுமையாகத்தான் தருகிறான். ஒரு பிள்ளையானால் என்ன, பத்து பிள்ளையானால் என்ன ? இப்போது என் இரண்டு மகன்களுக்காக வேதனைப் படுகிறேன் என்றால் ஒவ்வொருத்தனுக்கும் பாதிபாதியாகப் படவில்லை.. '

'உண்மைதான்..உண்மைதான் ' பெருமூச்சு விட்டார் சங்கடப்பட்ட கணவர். ஆனால் ஒரு வேளை - நிச்சயமாக உங்கள் விஷயத்தில் நடக்காது என்றே வைத்துக்கொள்வோம் - ஒரு தந்தை தன் இரண்டு மகன்களை களத்தில் விட்டு, ஒருவன் இறந்து போனால், அந்த தந்தையைத் தேற்ற ஒரு மகனாவது மிஞ்சுவானல்லவா.. ஆனால்.. '

'ஆமாம்.. ' இடையில் புகுந்தார் ஒருவர். ' தேற்றுவதற்கு ஒரு மகனிருப்பான்தான். ஆனால் அந்த ஒரு மகனுக்காக அந்த தந்தை உயிர் வாழ வேண்டுமல்லவா..ஒரே மகன் என்றால் மகன் போனதும் தந்தையும் இறந்து தனது துக்கத்துக்கு முடிவு கட்டலாம் அல்லவா ? இந்த இரு நிலைகளில் மிகவும் மோசமானது எது ? என் நிலை உங்களதை விட மோசமானது என்று உங்களுக்கு இன்னும் படவில்லையா ? '

' நான்சென்ஸ் '. இடையில் புகுந்தார் வெளுத்த பழுப்பு நிறமும் ரத்தச் சிவப்புக் கண்களும் சிவந்த முகமும் கொண்ட தடித்த இன்னொரு பிரயாணி.

'அவருக்கு மூச்சு வாங்கியது. பலவீனப்பட்ட அவரின் உடம்பு தாங்கிக்கொள்ள முடியாத கட்டுக்கடங்காத வலிமை கொண்ட அகவன்மை அவரின் உப்பிக்கொண்டிருந்த கண்கள் வழியாக உடைந்து படர்வதுபோல் தோன்றியது.

' நான்சென்ஸ் ' என்றார் மறுபடியும். இரண்டு இல்லாத பற்களை மறைப்பதுபோல் வாயைப் பொத்திக்கொண்டு. ' நான்சென்ஸ், நம்முடைய நலனுக்காகவா பிள்ளை பெறுகிறோம் ? '

சங்கடத்துடன் மற்ற பிரயாணிகள் அவரைப் பார்த்தார்கள். போரின் முதல் நாளில் இருந்தே மகனை அனுப்பியிருந்த தந்தை பெருமூச்செறிந்தார். ' நீங்கள் சொல்வது சரிதான். பிள்ளைகள் நமக்குச் சொந்தமானவர்கள் அல்ல. நாட்டுக்குச் சொந்தமானவர்கள்தான். '

தடித்த பிரயாணி அப்படியா என்பது போலப் பதில் கொடுத்தார்.

'பிள்ளை பெறும்போது நாம் நாட்டைப் பற்றி நினைக்கிறோமா ? நம் மகன்கள் பிறக்கிறார்கள் ஏனெனில்..சரி..ஏனெனில் அவர்கள் பிறக்க வேண்டும்.. அவர்கள் பிறக்கும்போது நமது உயிரையும் அவர்களோடு எடுத்துக் கொண்டல்லவா பிறக்கிறார்கள்.. இதுதான் உண்மை. அவர்களுக்கு இருவது வயது வரும்போது நாம் அந்த வயதில் எப்படி இருந்தோமோ அப்படித்தான் அவர்களும் இருக்கிறார்கள். நமக்கும் தாய் தந்தை இருந்தார்கள். ஆனால் அது மட்டும் அல்லவே.. மற்ற விஷயங்களும் இருக்கத்தானே செய்தன ? பெண்கள்.. சிகரெட்..மாயை..புதிய உறவுகள்.. அப்புறம் நாடு..ஆமாம் அதன் அழைப்புக்கும் நாம் பதில் சொல்லித்தானே இருப்போம் - நம் இருபதுகளில் - நம் தாய் தந்தை வேண்டாம் என்று சொல்லி இருந்தாலும் ? இப்போ இந்த வயதில் நாட்டுப்பற்று இன்னும் அதிகமாக உள்ளது. நம் பிள்ளைகள் மீது வைத்துள்ள அன்பைவிட அதிகமாக உள்ளது. இப்போ நம் மகன்களுக்காக நாம் போகலாம் என்றால் மகிழ்ச்சியாக அதை ஏற்றுக்கொள்ள யாராவது இருக்கிறீர்களா ? '

சுற்றிலும் அமைதியாய் இருந்தது. எல்லோரும் ஆமோதிப்பதுபோல் தலையாட்டிக் கொண்டிருந்தார்கள்.

' ஏன், நம் இருபது வயது மகன்களின் உணர்வுகளை நாம் ஏன் மதிக்கக் கூடாது ? தங்களுடைய இந்த வயதில் பெற்றோர் பற்றைவிட நாட்டுப்பற்று பெரிது என்று அவர்கள் நினைப்பது இயற்கைதானே ? ( நான் நாகரீகமான பையன்களைப் பற்றித்தான் பேசுகிறேன்.) வீட்டைவிட்டு நகர முடியாத கிழப்பையன்களாக நம்மை அவர்கள் நினைப்பதும் இயற்கைதானே ? நாடு என்று ஒன்றிருந்தால், பசியால் சாகாதிருக்க எல்லோரும் ரொட்டித்துண்டு சாப்பிடுவது போல, நாடு என்பது ஒரு இயற்கையான அவசியம் என்றிருக்குமானால், யராவது ஒருவர் அதைக் காக்கப் போய்த்தான் ஆக வேண்டும். நம் மகன்கள் போகிறார்கள் இருபதுகளில், அவர்களுக்குத் தேவை கண்ணீரல்ல ஏனெனில் அவர்கள் இறந்தால் உணர்ச்சிப் பெருக்கிலும் மகிழ்ச்சியாகவும் இறக்கிறார்கள். நாகரீகமான இளைஞர்களைப் பற்றித்தான் மறுபடியும் குறிப்பிடுகின்றேன் வாழ்வின் அசிங்கமான பகுதிகளைப் பார்க்காமல், அதன் களைப்பூட்டும் தன்மையை, சின்னத்தனத்தை, மாயையின் கசப்பை உணராமல் ஒருவன் இளமையாகவும் சந்தோஷமாகவும் இறக்கின்றானென்றால், அதைவிட நாம் அவனுக்காக வேறென்ன கேட்க முடியும் ?

'எல்லாரும் அழுவதை நிறுத்த வேண்டும். சிரிக்க வேண்டும் என்னைப்போல. அல்லது குறைந்த பட்சம் என்னைப்போல இறைவனுக்கு நன்றியாவது செலுத்த வேண்டும். ஏனென்றால் என் மகன் இறப்பதற்கு முன் எப்படி தான் விரும்பியிருக்க முடியுமோ அப்படித் தன் வாழ்வை முடித்துக்கொண்டதாக, திருப்திகரமாக இறந்தபோது எனக்குச் செய்தி அனுப்பினார்கள். அதனால்தான் நான் துக்க உடைகூட அணியவில்லை தெரிகிறதா ? '

தன் லேசான மஞ்சள் கலந்த பழுப்புக்கோட்டை ...காட்டினார். அவர் சிவந்த இதழ் இருந்த இடத்திற்கு மேல் நடுங்கியது. கண்கள் அசைவற்றும் வெளுத்தும் இருந்தன. தேம்பலைப் போன்றதொரு மெல்லிய சிரிப்பில் அவர் தன் பேச்சை முடித்துக் கொண்டார்.

'நிச்சயமா, நிச்சயமா ' என்று ஆமோதித்தனர் மற்றவர்கள். ஒரு மூலையில் தன் கோட்டுக்குக் கீழே ஒரு கட்டாகத் கிடந்த அந்த அம்மாள் அமர்ந்து அவர் சொன்னதயெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தாள். தன் ஆழ்ந்த துயரத்தை மாற்றும் ஏதாவதொன்றை தன் நண்பர்களின், கணவனின் வார்த்தைகளில் காண, கடந்த மூன்று மாதங்களாக முயன்று வந்தாள். ஒரு தாய் தன் மகனை மரணத்துக்கோ அல்லது ஒரு அபாயகரமான வாழ்வுக்கோ எப்படி அனுப்பிவிட்டுஅமர்வது என்று கற்றுத்தருகின்ற ஏதாவதொன்றுக்காக. ஆனால் இது வரை சொல்லப்பட்ட வார்த்தைகளில் ஒன்றுகூட அப்படிப்பட்டதாக அவள் காணவில்லை. அவள் நினைத்தவாறு யாரும் தன் உணர்வுகளைப் பங்கிடமுடியாது என்பதைக்காண அவளின் துக்கம் அதிகமாகத்தான் ஆக்கியது.

ஆனால் இப்போது அந்த பிரயாணியின் வார்த்தைகள் அவளை ஆச்சரியப்படுத்தின. ஏன், ஸ்தம்பிக்க வைத்தன. தன் மகன்களின் புறப்பாட்டுக்கு மட்டுமல்ல, அவர்களின் மரணத்துக்குக்கூட அழாமல், எந்தக் குற்றமும் சொல்லாமல், வரும் வேதனையை அப்படியே ஏற்றுக்கொள்ளும் தந்தைகளின், தாய்களின் உயரத்துக்குத் தன்னால் எழ முடியவில்லையே என்பதையும், அவர்களல்ல, தான்தான் தவறு செய்துவிட்டோம் என்பதையும் திடீரென்று உணர்ந்தாள்.

தலையை உயர்த்தினாள் தனது மூலையிலிருந்து. சற்று முன்னால் வந்து தன் மகன் எப்படி மகிழ்ச்சியாகவும் வருத்தங்களின்றியும் அவனது அரசனுக்கும் நாட்டுக்கும் ஒரு ஹீரோவாக இருந்து வீழ்ந்தான் என்ற விபரங்களைத் தன் நண்பர்களுக்கு  அவர் விளக்கிக் கொண்டிருந்ததை உன்னிப்பாகக் கேட்டாள். இதுவரை கனவுகண்டிராத உலகினுள் தடுக்கி விழுந்துவிட்டதைப் போலிருந்தது அவளுக்கு. இதுவரை அவள் அறியாத உலகம். தன்மகனின் மரணம் பற்றி எதையும் தாங்கும் இதயத்தோடு பேசிய துணிச்சலான அந்த தந்தையை எல்லோரும் பாராட்டியதைக் கேட்க அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

பின் திடீரென்று இதுவரை சொல்லப்பட்டது எதையும் கேட்காதது போல, கனவிலிருந்து விழிப்பது போல அந்த கிழவன் பக்கம் திரும்பிக் கேட்டாள்:

'அப்படீன்னா, உங்க மகன் உண்மையிலேயே இறந்துவிட்டானா ? '

எல்லோரும் அவளையே பார்த்தனர். தனது பெரிய, உப்பிக்கொண்டிருந்த, பயங்கர வெளுப்பாயிருந்த, பழுப்புள்ள கண்களை அவள் முகத்தில் ஆழமாகப் பொருத்தி அந்தக் கிழவரும் அவளைப் பார்க்கத் திரும்பினார். கொஞ்ச நேரம் அவர் பதில் சொல்ல முயன்று கொண்டிருந்தார். திரும்ப அவளையே பார்த்தார். ஏதோ அப்போதுதான் அந்த அபத்தமான, சம்பந்தமற்ற கேள்வியில்தான் தன் மகன் உண்மையிலே இறந்துவிட்டதையும் அவன் இனி எப்போதும் திரும்பி வரமாட்டான் என்பதையும் திடீரென்று உணர்ந்து கொண்டமாதிரி அவர் முகம் சுருங்கியது. பயங்கரமாகச் சிதைந்தது வடிவம். பின்பு அவசரமாக தன் பாக்கெட்டிலிருந்து ஒரு கைக்குட்டையை எடுத்தார். எல்லோரும் ஆச்சரியமாகப் பார்க்க, கட்டுக்கடங்காமல், நெஞ்சுடைக்கும் வகையில் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தார்.

***

அரும்பு, அக்டோபர், '88.

லூகி பிராண்டெலோ பற்றிய குறிப்பு :

லூகி பிராண்டெலோ ஒரு இத்தாலிய எழுத்தாளர். இத்தாலியின் சிஸிலியின் 'க்ரிகெண்டோ என்ற ஊரில் ஜுன் 28, 1867 ல் பிறந்து, டிசம்பர் 10, 1936 ரோம் நகரில் இறந்தார். 1934 ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசைப் பெற்றவர். ரோம் மற்றும் ஜெர்மனியின் பான் பல்கலைக் கழகங்களில் படித்தவர். தான் பிறந்த ஊரின் வட்டார வழக்கு பற்றி ஆய்வு செய்து டாக்டர் பட்டமும் பெற்றவர்.

முதலில் கவிதைகளும் பின் சிறுகதைகளும் எழுதிய இவர் பின்னர் நாடகம்தான் தனக்கான களம் என்று அறிந்து கொண்டார். இவர் எழுத்தில் உண்மைக்கும் உண்மை என நாம் நம்பிக்கொண்டிருப்பவைகளுக்கும் இடையேயான போராட்டத்தைக் காண முடியும். அவர் மனைவி பிற்காலத்தில் மன நோய்க்கு ஆளானது, வறுமை, உளவியலில் இவருக்கு இருந்த ஆழமான ஆர்வம் ஆகியவை காரணமா என்று தெரியவில்லை. அவரே கூறுகிறார் :

'நம் வாழ்க்கை ஒரு சோகமான விதூசகமாக உள்ளது. நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கின்ற தேவைகொண்டவர்களாக நாம் இருக்கிறோம். ஒவ்வொருவரும் தமக்கான நிஜங்களை உருவாக்கிக் கொள்கின்றனர். ஆனால் காலம் அவற்றை மாயை என நிரூபித்து விடுகிறது. அப்படிப்பட்ட ஏமாளிகளை நோக்கிய ஒரு பரிவே எனது கலை '. 1920 ல் அவர் கூறிய இந்த கருத்துக்கள் இந்த சிறுகதையையும் புரிந்து கொள்ள உதவும்.
***
***
நன்றி : நாகூர் ரூமி , திண்ணை  & 'அ'

1 comment:

  1. ’அ’(து) இல்லாமலேயே நன்றாக கதையினூடாக பயணப்பட்டேன்.
    பிடித்த இடம் ....

    'அதனால் என்ன வித்தியாசம் ஏற்பட முடியும் ? ஒரே மகன் என்றால் செல்லம் கொடுத்துக் கெடுத்துவிடுவீர்கள். நிறைய குழந்தைகள் இருந்தால் ஒரே மாதிரி நேசிக்க முடியும். பெற்றோரின் அன்பு என்ன ரொட்டித் துண்டா, எல்லோருக்கும் சரிசமமாக பங்கிட்டுக் கொடுக்க ? ஒரு தகப்பன் என்பவன் வித்தியாசமில்லாமல் தன் எல்லா குழந்தைகளுக்கும் அன்பை முழுமையாகத்தான் தருகிறான். ஒரு பிள்ளையானால் என்ன, பத்து பிள்ளையானால் என்ன ? இப்போது என் இரண்டு மகன்களுக்காக வேதனைப் படுகிறேன் என்றால் ஒவ்வொருத்தனுக்கும் பாதிபாதியாகப் படவில்லை.. '

    போர்..’அ’போர் ஆகவில்லை.

    - சு.மு.அகமது

    ReplyDelete