Wednesday, August 6, 2014

தாரிக் அலியின் 'அடிப்படை வாதங்களின் மோதல்' - நூல் விமர்சனம் : கொள்ளு நதீம்

இந்த மாத 'சமநிலைச் சமுதாயம்' இதழில் வெளியான கட்டுரை. 
***
நூல் : அடிப்படை வாதங்களின் மோதல் (சிலுவைப் போர், ஜிகாத், நவீனத்துவம்) . ஆங்கில மூலம் :தாரிக் அலி , மொழிபெயர்ப்பு: கி. ரமேஷ்
**
தாரிக் அலி பிரிவினைக்கு முன்பு பாகிஸ்தானில் பிறந்து தற்பொழுது இலண்டன் நகரில் வசித்து வரும் பிரபல எழுத்தாளர். 2001 செப்டம்பர் 11 அமெரிக்காவில் இரட்டைக் கோபுரங்கள் தீவிரவாத தாக்குதலால் நொறுங்கிய போது மனிதத்தன்மை கடுமையாக ஒடுக்கப்பட்டது. ஆனால் உலகெங்கும் பல நாட்டு மக்கள் நேரடியாக இத்தாக்குதலை ஆதரித்தனர். அல்லது மறைமுகமாக மகிழ்ந்தனர். இது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. அமெரிக்காவின் பல தவறான செயல்பாடுகள் தான் இப்படியான எதிர்வினை புரிந்தது என்றால் மிகையல்ல. தாரிக் அலி அதற்கான காரணங்கள் குறித்தும் இஸ்லாமின் வரலாறு, பண்பாடு அதன் செல்வங்கள் குறித்தும் ஒரு விவாதத்தை உருவாக்கும் நோக்கத்துடன் இந்நூலை எழுதியுள்ளார்.
***

நூல் விமர்சனம் : ஆம்பூர் நதீம் 

நான் பணியாற்றிக் கொண்டிருந்த பன்னாட்டு நிறுவனத்தில் “வெள்ளைக்கார  சதாம்” என அழைக்கப்பட்ட Samuel Dickson, கட்டுமான மேலாளர், நம்ம கிராமத்து பெரிசுகள் இன்றும் வியந்து கொண்டிருக்கும் “துரை” போன்ற கரிசனம் அவருடையது. இரட்டை கோபுர கட்டிடம் தாக்கப்பட்ட பயங்கர செய்தி வந்த போது என்னிடம் அமர்ந்து தனக்கான ஆண்டு விடுமுறை விமான பயணத்தை இறுதி செய்து கொண்டிருந்தார். அதே போல் திருமணத்திற்காக நாடு திரும்ப எனக்கான அனுமதியும் உறுதியாகி இருந்தது. அதனால் பதிமூன்று ஆண்டுகள் கடந்த பின்பும் அந்த செப் 11, 2001 இன்றும் நினைவில் உள்ளது. அவரிடம் பரப்பரப்பு, பீதி, குழப்பம். உலகமெல்லாம் இது ஒன்றை மட்டுமே இனி அடுத்து வரப்போகும் பல்லாண்டுகள் பேசப்போகிறது என்பதை உணர்ந்தேன். உடனடியாக தோன்றிய எண்ணம் பியர்ல் துறைமுகம் தாக்கப்பட்ட சம்பவம் பற்றிய பாலகுமாரனின் நாவலொன்றில், ஒரு தமிழரின் அனுபவம் பதிவாகி இருப்பது நினைவுக்கு வந்தது. குறுக்கு வெட்டாக அப்படியொரு கோடு விழும் என திட்டவட்டமான முடிவுக்கு நான் எப்படி வந்து சேர்ந்தேன்? இன்றைக்கும் அதிர்ச்சியாக இருக்கிறது. 

இதை பகிர்ந்து கொண்ட போது தன் இளம் வயதில் பத்திரிக்கை செய்திகளில் படித்ததையும், ரேடியோவில் கேட்டு அறிந்ததையும், அமெரிக்காவின் பழி தீர்க்கும் வஞ்சகுணம் பற்றியும் நிறைய வம்பளந்து கொண்டிருந்தார். எப்பொழுதும் விவாதமாக நீடிக்கும் உரையாடல் அன்று ஒரு வழிப்பாதையாக அவர் பேசுவதை மட்டும் உன்னிப்பாக கேட்டுக் கொண்டிருந்தேன். அப்பொழுது தான் முதன் முதலாக Samuel Huntington என்கிற பெயரை கேள்விப்பட்டேன். (தனிப்பட்ட முறையிலும், பரந்துபட்ட சமுக தாக்கம் என்கிற வகையில் பின் தொடரும் நிழலின் குரலாக நான் கேட்டறிந்த இரண்டாவது சாம் அவர்!) பிரிட்டிஷ் விமான பயணங்களில் போது  இலவசமாக தரும் தினசரிகளையும், விடுமுறையில் அவர் வாங்கும் பத்திரிக்கைகளையும் எனக்கு நிறைய கொண்டு வந்து கொடுத்து இருக்கிறார். 

ஆகவே 1996-ல் வெளியிடப்பட்ட “The Clash of Civilizations and the Remaking of World Order – பண்பாட்டு மோதலும், புது உலக ஒழுங்கொன்றை உருவாக்குதலும்” என்ற நூலை நிச்சயம் படிக்க வேண்டும், அதை கொண்டு வந்து தருவதாகவும் கூறினார். என் வாசிப்பு பழக்கம் மீது அவருக்கு அபார பெருமிதம். காடுகளை திருத்தி குடியிருப்பு பகுதிகளாக்குதல், காலனிய நாட்டு பிரஜைகளை “நல்வழிப்படுத்தல்” மனோபாவத்தின் எச்சம் அவரிடம். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு 
செய்தி மின்னஞ்சல் செய்து விட்டு நாடு திரும்பினேன். எனக்கான புதுமனை வீடு, திருமண களை கட்டி இருந்தது. எங்கள் அப்பா அந்த காலத்து பியுஸி, கரடு முரடாக இருந்தாலும், விடாமல் ஆங்கிலம் பேசியவர், சாம் டிக்ஸன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்தியதை எங்கள் முஹல்லா (பேட்டை) முழக்க பரப்பி விட்டார். 

அதே போல், புது மாப்பிள்ளையாக ஜெத்தா விமான நிலையத்தில் இறங்கிய போது பூங்கொத்தும், வாக்களித்தபடி இலண்டனில் இருந்து எடுத்து வந்திருந்த நூலையும் காரோட்டியிடம் கொடுத்து அனுப்பி இருந்தார். (காரணம், அவர் வேறொரு ஊருக்கு மாற்றலாகி சென்று இருந்தார்.) கீழைத்தேசிய சிந்தனை கண்ணோட்டம் எனக்கு அறிமுகப்படுத்தியவர்களில் அவரை  முதன்மையானவராக சொல்லலாம். அவ்வாறு தான் மாக்சிம் ரோடின்சன், எட்வர்ட் ஸெய்த், ஜான் மெடோஸ் ரொட்வெல் என பிற்பாடு பலரையும் கண்டு அடைந்தேன். இன்றைய சூழலில் இச்சொல்லாட்சி வேறு பரிமாணத்தில் பேசப்படுகிறது. கீழைத்தேசியவியல் துறையில் தமிழ் மீதான கவன ஈர்ப்பை செய்து வைத்தவர் வீரமாமுனிவர் (1680-1746). அதன் நீட்சியில் தமிழின் வகிபாகம் குறித்து நமது ஒரு தலைமுறைக்கு முன்தைய பேராசிரியர் சேவிய தனிநாயகம் அடிகள் (1913-80) முக்கியமான பங்களிப்பை செய்து இருக்கிறார். கிறிஸ்துவ சமய உறவு இவர்களுக்கு உலகளாவிய ஒரு தொடர்பை உருவாக்கி கொடுத்து இருக்கிறது. 

அறிவியலின் பயணம் அந்தந்த கால கட்டத்தின் சமுக அமைப்பை பல முறை மீறியதாக இருந்த போதிலும் அது சில நேரங்களிலேனும் கற்பிதங்களாலும், புனைவுகளாலும் கலந்து கறைபடிந்து போகின்றன என்பதையும் மறுக்க முடியாது. 

இதில் இரண்டாம் வகையிலானது தான் The Clash of Civilizations என்பதை உடனடியாக புரிந்துக் கொண்டேன். “நவீன மேற்கத்திய நாகரீகம் பொதுவான கீழைநாடுகளின் வாழ்க்கை முறையை விட மேன்மையானது, குறிப்பாக இஸ்லாம் இன்னும் 6-ம் நூற்றாண்டில் தேங்கி கிடக்கிறது, அதனால் அதன் மனப்போக்கு சமகால சமூக இயங்கியலுக்கு பொருத்தமற்றது” என்பது தான் “பண்பாட்டு மோதல் கொள்கை”யின் மையக்கரு. இது நிற/நில/வர்ண பேதம் கொண்ட 
சகிப்பின்மையின் உச்சம். முன்முடிவுகளுடன் தனிப்பட்ட அரசியல், சமூக காரணங்களுடன் அதை நியாயப்படுத்த வேண்டுமென்ற உள்நோக்கத்துடன் எழுதப்பட்ட புத்தகம் இது. சுவாரசியமான உட்குறிப்பு ஒன்று, உதாரணமாக (The Place of Tolerance in Islam) 'இஸ்லாத்தில் சகிப்புத்தன்மைக்கு உள்ள இடம் ' என்னும் சமீபத்திய நூலொன்றில் காலெத் அபெள எல் ஃபத்ல் என்ற இஸ்லாமிய சட்ட வல்லுனருடன் பல முஸ்லிம் சிந்தனையாளர்கள் நடத்திய வாதம் தொகுக்கப்பட்டுள்ளது. இதில் தாரிக் அலியும் பங்கெடுத்துள்ளார். இந்த இடத்தில் தான் “பங்கேற்பு ஜனநாயகம்” என்பதன் அவசியம் குறித்து நம் இந்திய சூழலில் சிந்தித்த முன்னோடியான அம்பேத்காரின் நினைவு தவிர்க்க முடியாததாகிறது.

செப்டெம்பர் 11, 2001 தாக்குதல்களுக்குப் பிறகு அடிப்படைவாதம், தீவிரவாதம் பற்றிய விவாதங்கள் உலகம் முழுவதிலும் அதிகரித்துள்ளன. அமெரிக்காவின் பாதிப்பு, உலகின் பாதிப்பாக மாறியது. அமெரிக்காவின் எதிரிகள் உலகின் எதிரிகளாக மாறிப் போயினர். அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் இதனைத் தெள்ளத்தெளிவான ஓர் சித்தாந்தமாகவே முன்னெடுத்தார். அதற்கு அமெரிக்காவுக்குத் தேவைப்படும் ஒரே விஷயம், எதிரி. வரலாறு முழுவதிலும் அமெரிக்கா பல புதிய எதிரிகளை இப்படி அடையாளப்படுத்திக் கொண்டே வருவதையும் தொடர்ந்து அந்த எதிரிகள் மீது போர் தொடுத்து அழித்துக் கொண்டே போவதையும் நாம் காணலாம். சிவப்பு அபாயம் என்று முத்திரை குத்தி கம்யூனிஸ்டுகள் மீதும் இஸ்லாமிய அடிப்படைவாதம் என்று சொல்லி முஸ்லிம்கள் மீதும் அமெரிக்கா இப்படித் தான் போர் தொடுத்தது.

எந்த ஒரு புத்தகம் படித்தாலும், அதற்கான மாற்று கருத்துக்களையும் சேர்த்தே வாசிப்பது என் வழக்கம். அந்த வகையில் இதற்கான எதிர்நிலை நூல் (உண்மையில் நியாயமாக) ஏதேனும் எழுதப்பட்டுள்ளதா என தேட ஆரம்பித்தேன். அப்படி தான் செப்,11-2001 நிகழ்வுக்கு பிறகு 2002-ல் தாரிக் அலி எழுதிய (The Clash of Fundamentalism : Crusade, Jihad and Modernity) பற்றி அறிய நேர்ந்தது. பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட ஷௌவ்கத் ரஷீத் மேலைநாடொன்றின் குடியுரிமை பெற்றவர், எங்கள் நிறுவனத்துடன் தொழிலுறவு கூட்டு வைத்திருந்த எண்ணெய் கட்டுமான அமைப்பின் மூத்த நிர்வாகி, தாரிக் அலியுடன் நட்பு கொண்டிருக்கும் நேரடி வாசகர் என்கிற விதத்தில் அலியின் மொத்தம் 35/40 நூல்களை 
பட்டியலிடுகிறார்.

1968 and after : Inside the revolution  - 1968  மற்றும் அதன் பிறகு : புரட்சியின் உள்ளே
Bush in Babylon - பாபிலோனில் புஷ்
Can Pakistan survive : Death of a State - பாகிஸ்தான் இருப்பு சாத்தியமா : ஒரு நாட்டின் மரணம்
The Obama Syndrome - ஒபாமா : தொற்றுநோயின் அறிகுறிகள்
Shadow of Pomegranate Tree - மாதுளை  மரத்தின் நிழலில்
Book of Saladin - சலாஹுத்தீன் (அய்யுபி) வரலாறு
Stone woman - கல் பெண்

போன்ற பெரிய நாவல்களையும், கட்டுரை தொகுப்புகளையும் அவரிடம் இருந்து தான் இரவல் வாங்கி படித்தேன். இப்பொழுதெல்லாம் அதிகமதிகமாக ஆங்கில நூல்கள் உடனடியாக தமிழாக்கம் செய்யப்பட்டு விடுகின்றன. பத்து வருடங்களுக்கு முன் காப்மேயரின் வெறும் சுயமுன்னேற்ற நூல்கள் மட்டும் அப்படி கிடைத்து வந்தன. இவ்வளவு அருமையான நூல்களை எந்த காலத்தில் தமிழில் படிக்க போகிறோம் என ஏக்கமாக இருக்கும். கேரளா இதில் முன்னோடி. 

சமீபத்தில் கோழிகோடு போகும் வழியில் திரூர் ரயில்நிலைய நடைமேடை கடையில் “I am Malala” மலையாள மொ.பெ. காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்ததை கண்டு பொறாமையாக கூட இருந்தது. தமிழ் பதிப்புலகம் அதை நோக்கி மெல்ல அடியெடுத்து வைத்து விட்டதை சமீபகால தமிழக புத்தக சந்தைகளில் பார்க்க முடிவது ஆறுதல்.

மேற்கத்திய அரசுத்தலைவர்களின் (Islamic phobia) “இஸ்லாமிய வெறுப்பு” சுயநலம் மிக்கது. வெறுமனே தேர்தல் பலன்களை மட்டுமே இலக்காக கொண்டது. எடுத்துக்காட்டாக வியட்நாம், ஆப்கான், ஈராக், சூடான், சிரியா மீதான ஒவ்வொரு அமெரிக்க படையெடுப்புகளுக்கு பின்பும் ஒரு தேர்தல் வெற்றி / தோல்வியுடன் தொடர்புடையதாக அமைந்த நிகழ்வுகள் ஒன்றும் தற்செயலானதாக இருக்க முடியாது என்கிறார். (அதை நம்மூர் அவாள்களும் அங்கிருந்து இரவல் பெற்றுதான் பெரும்பான்மை வாக்கு வங்கி அணிதிரட்டல், வலதுசாரி குவியமும் ஏற்பட்டு இருப்பதை பொருத்திப் பார்க்க வேண்டும்.) தாரிக் அலி தன்னுடைய நூலின் ஒவ்வொரு தகவல்களையும் சரி பார்க்க இந்தோனேசியாவிலிருந்து 
மொராக்கோ வரை முஸ்லிம் பாரம்பரிய நிலப்பரப்பிலும், ஸ்பெயின், இந்தியா போன்ற ஆட்சி கைமாறிப் போன நாடுகளில் மிச்சம் மீதி இருக்கும் முஸ்லிம் சிறுபான்மை தொகுப்புக்குள்ளும் அலைந்து திரிந்து இருக்கிறார். 

உள்ளூர்வாசிகளுடன் நேரடியாக பேசி போதிய தரவுகளை திரட்டியிருக்கிறார். செப்டெம்பர் 11 தாக்குதல்களை எப்படி அமெரிக்கா தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது என்பதை இந்தப் புத்தகம் மிகத் தெளிவாக விவரிக்கிறது.

தனது புத்தக தலைப்பின் மையக் கருத்தை பக்கசார்பற்று அவர் ஆய்வு செய்கிறார். இஸ்லாம் எப்படி உருப்பெற்றது? அதன் வரலாறு என்ன? பண்பாட்டு விழுமியங்கள் எவ்வாறு உருவாயின? இஸ்லாமுடன் தீவிரவாதம் பிணைக்கப்பட்டது எப்போது? இஸ்லாம் என்றால் அடிப்படைவாதம் என்று பொதுப்புத்தியில் ஒரு வலுவான சிந்தனை தோன்றியது ஏன்? தாடி வைத்தவனையும் பர்தா அணிந்தவளையும் உலகம் சந்தேகக் கண் கொண்டு இன்று பார்க்க வைத்தது யார்? 

“அடிப்படைவாதங்களின் மோதல்” இந்தக் கேள்விகளை எதிர்கொண்டு உரையாடுகிறது. ஆன்மிக நெறியாக தோன்றி ஒரு விடுதலை கருத்தாக்கமாக இஸ்லாம் விரிவடைந்த கதையும் இதில் பதிவாகிறது. ஒரு பக்கம் இஸ்லாம் இன்னொரு பக்கம் மேற்குலகம் என்று மட்டும் இதனைச் சுருக்கிப் பார்த்து விட முடியாது. உலகம் தழுவிய அளவில் நடைபெறும் இந்த மோதலில் பல நாடுகளின் பங்களிப்பு உள்ளது. இஸ்லாத்தை உலகம் எப்படி எதிர்கொண்டது என்பதையும், எதனால் அது எதிர்க்கப்பட்டது என்பதையும் தகுந்த வரலாற்றுப் பின்னணியில் புரிந்து கொண்டால் தான் இந்த மோதலைப் புரிந்து கொள்ள முடியும். சந்தைப் பொருளாதாரத்தை விரிவாக்குவதற்காக மேற்கொள்ளப்படும் ஏகாதிபத்தியப் போர் என்று இதனை தாரிக் அலி அழைக்கிறார். 

அரேபியா, சிரியா, எகிப்து, வட ஆப்பிரிக்கா, துருக்கி, பாகிஸ்தான், பங்களாதேஷ், மலேசியா, என்று இஸ்லாம் விரிந்து பரவிய வரலாறு இந்தப் புத்தகத்தில் காணலாம். அமெரிக்கா மட்டுமல்ல பின்லேடன் போன்றோரும் கூட இஸ்லாத்தைத் தமக்குச் சாதகமாக வளைத்துக் கொண்டதை தாரிக் அலி சுட்டிக்காட்டுகிறார். இஸ்லாத்தை எதிர்த்து நிற்கும் ஏகாதிபத்தியத்தின் வேர்களை மட்டுமின்றி தீவிரவாத அம்சங்களை இணைத்துக் கொண்டு உருப்பெற்ற பிற்போக்கின் சிக்கல்களையும் தாரிக் அலி அவிழ்க்க முயற்சிக்கிறார்.. இந்தத் தேடல் சமகால உலகின் சமூக, அரசியல் மற்றும் சித்தாந்த வரலாறாகவும் விரிவடைகிறது.

அமெரிக்கா ஆப்கான், ஈராக், சிரியா, மேலும் இஸ்ரேல் - பாலஸ்தீனிலும் ஆளில்லா டிரோன் விமானங்களுடன் மேலிருந்து கச்சிதமாக குண்டு வீசும் Push Button காலத்தில், வெறுமனே சாதாரண ரைஃபில் துப்பாக்கியுடன் நிற்கும் போராளி(ஜிஹாதி)களை தொலைக்காட்சியில் பார்த்து இருப்போம். (இதில் அச்சப்படத்தக்கது அவர்கள் தரித்திருக்கும் ஆயுதங்கள் என்பதை விட மற்றமை மீதான தத்துவார்த்த வெறுப்பே அதீத தீங்கினை செய்தது / அது காலம் செல்ல செல்ல வடிவிலும், தொகையிலும் கூடி வருவது தான் கவலைக்குரிய விஷயம்.) அதே போல் சமூக வலைதள  விவாதங்களை முஸ்லிம்(இளைஞர்)கள் எதிர்கொள்ளும் விதம் கூட எந்த ஒரு பொருத்தப்பாடும் இல்லாத தோற்கடிப்படுதல் எப்படி சாத்தியமாகிறது என யோசித்து இருக்கிறேன். அறிவதிகார சமநிலையின்மையே இதற்கு காரணமாக இருக்க கூடும். முஸ்லிம்களிடம் வாசிப்பு பழக்கம் இல்லை. தரமான நூல்கள் எழுதவும், பதிப்பிக்கவும் ஆளில்லை. (இதை வெறுமனே போகிற போக்கில் சொல்லவில்லை, அதுவே 25 ஆண்டுகால தீவிர வாசிப்பு அனுபவத்தில் கண்ட உண்மை, சமீப காலங்களில் தான் இலங்கையிலிருந்து வரும் முஸ்லிம் எழுத்துக்கள் ஓரளவுக்கு காத்திரமான பன்னாட்டு தரத்தை எட்டும் முயற்சிகளை தொடும் போல் உள்ளது  என்கிறார் காலச்சுவடு கண்ணன்) இப்பொழுது தமிழில் நடந்திருக்கும் மாற்றங்களும் கூட மதச்சார்பற்ற, நடுநிலையான, இடதுசாரி, அறிவியக்க செயல்பாட்டாளர்களின் முயற்சிகளே தவிர முஸ்லிம் சமுதாய பங்களிப்பு வெகு குறைவு. “வாசிக்கும் தலைமுறையை வளர்த்தெடுக்க” என பத்தாண்டுகளாக வரலாற்று சாதனை செய்து கொண்டிருக்கும் நமது “சமநிலை சமுதாயம்” கூட எவ்வளவு பெரிய சிரமத்தில் இருக்கிறது. ஆகவே தாரிக் அலி போன்ற அறிவுஜீவிகளின் எழுத்தை நம்பி இருக்க வேண்டியது மட்டுமே இப்போதைக்கு நம்முன் எஞ்சி நிற்கும் தேர்வு. அவ்வாறு தான் வலதுசாரிகள் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என ஓட்டம் பிடிப்பார்கள். அதை விட்டு விட்டு வெறுமனே கிணற்று தவளைகளாக ஃபஸாயில், மஸாயில், தலாயில் என பேசிக் கொண்டிருக்கும் இரண்டெழுத்து, மூன்றெழுத்து “பெரியண்ணன்”களை நம்பி பயனில்லை. இதில் “மௌலவி”களும் “பேராசிரியர்”களும் ஒரே நேர்க்கோட்டு சமன்பாடாக நிற்பது அதிசயமே. ஒரு சாதாரண பொது தேர்தலில் கூட சரியான, உறுதியான நிலைப்பாடு எடுக்காதவர்களை இனியும் நம்ப வேண்டுமா என்பதை சிந்திக்க வேண்டும்.  ஒவ்வொரு 
வெள்ளிக்கிழமை சொற்பொழிவிலும் வெவ்வேறு விதமாக மாற்றி மாற்றி பேசக் கூடியவர்களுக்கு தொலைநோக்கு திட்டம் உள்ளதா? 

இந்த தலைப்பையொட்டிய சிந்தனையில் என் நினைவுக்கு வரும் அடுத்து முக்கியமான நூல்  “Children of Abraham at War : the Clash of Messianic Militarisms - போரில் ஆப்ரஹாமின் பிள்ளைகள் : மீட்பர்களின் இராணுவ மோதல்கள்” என்பதாகும். 

சவுதி அரேபியாவுக்கான இந்திய தூதராக (2000 – 2003) இருந்த தல்மீஸ் அஹ்மத் 2010-ல் வெளியிட்டார். (இவருக்கு பிறகு நம் பாண்டிச்சேரி ஃபரூக் மரைக்காயர் அந்த பொறுப்புக்கு வந்தார்.) இந்திய வெளியுறவுத் துறையிலேயே “மத்திய கிழக்கு பற்றிய வாழும் கலைக்களஞ்சியம்” என கருதப்படும் அவர், அரசு(கள்) செயல்படும் தன்மை, தலைவர்களின் நடத்தை, வரலாற்று அறிவு, புனிதப்பிரதிகளில் இருந்து மேற்கோள்கள் என சுயஅனுபவம் ஊடாக இப்பிரச்சனையை ஆராய்கிறார். வாசித்த போது உண்மையிலேயே அது கனமான நூல் தான் என சொல்லி விட முடியும். விலையும் அப்படியே. இந்திய அரசின் அதிகாரபூர்வ கொள்கையை மீறியும், மறுத்தும் பணியில் இருந்த போதே எழுதப்பட்ட நூல் என்று சிறப்பித்து சொல்லப்பட்டு இருந்தாலும் தன்னளவில் சில போதாமைகளை கொண்டிருப்பதாகவே நினைக்கிறேன். குறிப்பாக பல்கலைக்கழக கல்வி புலத்திற்கு ஏற்ற சட்டகத்தில் மாணவரொருவர் தயாரித்த ஆய்வேடாகவும், பணிக்கால நினைவுகளை பதிவு செய்த உயரதிகாரியொருவரின் குறிப்புகளாகவுமே அவையெனக்கு படுகின்றன. 

அந்த வகையில் பார்ப்பதற்குத் தடிமனாக இருப்பதாலேயே ஒரு புத்தகம் கடினமாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை என்பதற்கு தாரிக் அலியின் இந்தப் புத்தகம் ஒரு உதாரணம். இதில் பாரிய வெற்றியையும் அவர் ஈட்டியதற்கு அவரிடம் எப்பொழுதும் இருந்து கொண்டிருக்கும் மரபு மீறிய பார்வையே காரணமாக இருக்கலாம். ஆகவே “அடிப்படை வாதங்களின் மோதல் : சிலுவைப்போர், ஜிகாத், நவீனத்துவம்” நம்பகத்தன்மையுடன் வெளிவந்திருப்பதால் ஒரு நவீன செவ்வியலாக மாறிக் கொண்டிருக்கிறது. கி. ரமேஷ் சிறந்த முறையில் மொழிபெயர்த்திருக்கும் இந்நூல் தமிழ்ச்சூழலில் ஆழமான விவாதங்களை ஏற்படுத்தப்போவது உறுதி.
***
நன்றி : கொள்ளு நதீம் (kollunadeemahmed@gmail.com) , சமநிலைச் சமுதாயம்
**
நூல் பதிப்பாளர் பாரதி புத்தகாலயம் , 7, இளங்கோ சாலை , தேனாம்பேட்டை , சென்னை - 600 018
தொலைபேசி : 044-24332924 044-24332424 thamizhbooks@gmail.com
**
தொடர்புடைய சுட்டிகள் :
அடிப்படைவாத மோதல்கள் - தாரிக் அலி பற்றிய குறிப்புகள் - ஹெச். பீர் முஹம்மது (உயிர்மை 2009)
தாரிக் அலி : சுதந்தரம் – அச்சுறுத்தல் – ஜனநாயகம் : மருதன் (தமிழ் பேப்பர்)

2 comments:

  1. அருமையான அறிமுக உரை!! புத்தகம் பற்றியும் பேசியுள்ளீர்கள்.தாரிக்
    அலியின் எண்ணங்களை மீளாய்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில்
    உள்ளோம்.வாசிப்பின் உள்ளார்த்தம் அறிவின் பகுத்தறிவின் வளர்ச்சியாய்
    பரிணமிக்க வேண்டும்.நல்ல முயற்சி. ஆர்வத்தை தூண்டும் விதமான
    அறிமுகம்.வாய்த்திருக்கிறது உங்களுக்கு அறிவாளிகளுடனான
    ஜீவிதம்.தொடருங்கள்.வாழ்த்துக்கள்.

    அன்புடன்,
    சு.மு.அகமது

    ReplyDelete
  2. அருமையான அறிமுக உரை!! புத்தகம் பற்றியும் பேசியுள்ளீர்கள்.தாரிக்
    அலியின் எண்ணங்களை மீளாய்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில்
    உள்ளோம்.வாசிப்பின் உள்ளார்த்தம் அறிவின் பகுத்தறிவின் வளர்ச்சியாய்
    பரிணமிக்க வேண்டும்.நல்ல முயற்சி. ஆர்வத்தை தூண்டும் விதமான
    அறிமுகம்.வாய்த்திருக்கிறது உங்களுக்கு அறிவாளிகளுடனான
    ஜீவிதம்.தொடருங்கள்.வாழ்த்துக்கள்.

    அன்புடன்,
    சு.மு.அகமது

    ReplyDelete