Monday, June 30, 2014

கிளிநொச்சியில் வண்ணத்துப்பூச்சிகள் - ஷீலா டோமி சிறுகதை (தமிழில்: ஆசிப் மீரான்)

கேரள மாநிலம் வயநாட்டில் பிறந்த ஷீலா டோமி வசிப்பது கத்தர் நாட்டின் தோஹா நகரத்தில். மலையாள ஏடுகளில் நிறைய சிறுகதைகளும் கவிதைகளும் எழுதியிருக்கும் இவர் வானொலி நாடகங்கள், தொடர்களுக்கும் பங்காற்றியிருக்கிறார். இவரது சிறுகதைகளுக்காக புழா.காம், அரங்கு  உள்ளிட்ட இலக்கிய அமைப்புகளிடமிருந்து பரிசுகளை வென்றிருக்கிறார். - ஆசிப் மீரான்

***

கிளிநொச்சியில் வண்ணத்துப்பூச்சிகள்
மலையாளத்தில்: ஷீலா டோமி, 
தமிழில்: ஆசிப் மீரான்
----------------------------------

2009 மே மாதத்தில் ஒரு மாலைப் பொழுது இடம் துபாயில் ஒரு 20 மாடி அடுக்ககக் கட்டடத்தில் ஒரு வீடு

”அம்மா டிவியில் நியூஸ் போடலாமா?” அதைச் சொன்னது லட்சுமி

லச்சு என்றுதான் அப்பா அவளை அன்போடு அழைப்பார். அவளுக்கு அம்மா இல்லை. அவள் குழந்தையாயிருக்கும்போதே அம்மாவை இழந்து விடடாள். தன் வீட்டின் அறையில் தொங்கும் புகைப்படத்தில் மடியில் தன்னை வைத்திருக்கும் தாயின் முகத்தில் பூத்திருக்கும் புன்னகையை அவள் மனதின் ஓரத்தில் எங்கோ பத்திரமாகக் காத்து வைத்திருக்கிறாள். அப்பாவின் நெஞ்சின் சூட்டின் கதகதப்பில் படுத்துறங்கிய குளிர்கால இரவுகளில் அம்மா அவளது கனவில் வந்து அவளுக்கு முத்தம் கொடுத்ததுண்டு.

இதுபோக இருப்பது ஒரு அண்ணன். லச்சுவின் அன்பான அண்ணன். அவனையும் அப்பா கஷ்டப்பட்டுத்தான் படிக்க வைத்தார். ஆனால் என்ன செய்வது? அவனும் அப்பாவைப் போல கூலி வேலைக்குத்தான் போக வேண்டிவந்தது. படித்தவர்களுக்கு மட்டும் இலங்கையில் வேலை எங்கே கிடைக்கிறது? லட்சுமி வீட்டு பணிப்பெண் விசாவில் வளைகுடா வந்து விட்டாள். இப்போது அவள் இந்துவின் வேலைக்காரி.

அலுவலில் இருந்து வந்து வரவேற்பறையில் ஓய்வாக அமர்ந்து கொண்டு லட்சுமி தந்த தேநீரை சுவைத்துக்கொண்டே, ’ஆன் ஃப்ராங்கின் டயரிக் குறிப்புகளை’ப் புரட்டிக் கொண்டிருந்தாள் இந்து.

”அம்மா டிவியில் நியூஸ் போடலாமா?”
லட்சுமி இரண்டாம் முறையும் கேட்டதும் புத்தகத்திலிருந்து தலையுயர்த்தினாள் இந்து. தொலைக் காட்சியில் யுத்தக் காட்சிகள். லட்சுமியின் முகம் வாடியது. இலங்கையில் யுத்தம் தீவிரமான நாளில் இருந்தே அவள் அப்படித்தான். எதிலும் உற்சாகமில்லை. எப்பொழுதும் ஒரே சிந்தனைமயம்தான். இந்து வீடு திரும்பினால் காணக் கிடைப்பது அடுக்களையில் கழுவாமல் குவிந்து கிடக்கும் பாத்திரங்களும், துடைத்து கழுவப்படாமல் அழுக்காகவே இருக்கும் தரையும்தான் - லட்சுமியின் மனதைப் போல.

”எனக்கு ஒரு வேலையும் ஓடலம்மா. எனக்கு ரொம்பப் பயமா இருக்கு. எங்கப்பாவும் அண்ணனும் கிளிநொச்சியில் இருக்காங்க” அவளது மனது நெறிகட்டியிருந்தது.
“ஒண்ணும் ஆகாதும்மா. கவலைப்படாதே. எல்லாம் அந்த கடவுள் காப்பாத்துவார்”

மனதை மரக்கச் செய்யும் காட்சிகள். நூல் பாலங்கள் வழியாக அகதிகளின் பிரவாகம். வெயிலிலும் யுத்தத்திலுமாக காய்ந்து கிடக்கும் மனிதச் சடலங்கள். தெருவோரங்களில் கூட்டியிட்டிருப்பது ஜீவனுள்ளவர்களா? ஜீவனற்றவர்களா? மீதியிருப்பவர்கள் கதறி அழுகின்றனர். வேறு சிலர் மரத்துப் போய் அமர்ந்திருக்கின்றனர். அவர்களுக்கிடையில் தேம்பி அழுது கொண்டு காலை இழுத்து நடந்து செல்லும் ஒரு பெண் குழந்தை. பாவம்! காலில் காயம்பட்டிருப்பது போலத் தோன்றுகிறது.

அருகிலிருந்த மகள் மீனுக்குட்டியை தன் மார்போடிழுத்து அணைத்துக் கொண்டாள் இந்து ஒரு நடுக்கத்துடன்.

“அம்மா, அந்த பாப்பா ஏம்மா அழுவுது?”  தொலைக்காட்சியை நோக்கிக் கையைக் காட்டி மீனுக்குட்டியின் கேள்வி. என்ன சொல்வது? என்ன சொல்லாமலிருப்பது? குழந்தைகளுக்கு இதுபோன்ற காட்சிகளைக் காட்டாமலிருப்பதுதான் நல்லது.

“அந்த பாப்பா அவங்க அம்மாவைத் தேடுதுடா செல்லம்”
“நோ.நோ.நோ. இல்ல. அந்த பாப்பாவோட அம்மா அங்க இருக்காங்க. பாருங்க” - சரிதான். மீனுக்குட்டியின் யூகம் சரியென்றால் அங்கே இறந்து கிடக்கும் தனது பிரியப்பட்டவனின் மார்பில் சாய்ந்து அழும் எலும்பும் தோலுமான அந்தப் பெண் தான் அந்தக் குழந்தையின்  அம்மாவாக இருக்கும். அப்படியானால் இறந்து கிடப்பது அந்தக் குழந்தையின் தகப்பனாக இருக்கலாம். கஷ்டம்! எந்தப் போராட்டத்தின் மீதியும் இப்படித்தானோ?

”அவங்க கொன்னுடுவாங்க. எல்லாரையும் கொன்னுடுவாங்க.. கொலைகாரப் பாவிங்க எல்லாரையும் கொன்னுடுவாங்க” லட்சுமியிடமிருந்து அலறல் வெளிப்பட்டது. ஒருபொழுதும் மழைபெய்யாத பாலைவனத்தின் சூடான காற்றாக மாறினாள் லட்சுமி

“லட்சுமி, ராணுவமா அல்லது புலிகளா யார் அவங்களைக் கொன்னதுன்னு நமக்கெப்படி தெரியும்? புலிகளும் பொதுமக்களோடு சேர்ந்து ஒளிஞ்சிருக்காங்க இல்லையா? தப்பிக்க நினைக்குறவங்களை அவங்களும்தான்  சுடுவாங்க”

இந்து பேசுவதைக் கேட்டு லட்சுமியின் முகம் சிவந்து விரிந்தது. கண்களில் தெரிந்த முகபாவனை வெளிப்படுத்துவது கோபமா அல்லது சங்கடமா என்பது இந்துவால் வாசிக்க முடியாததாக இருந்தது. அடக்கி வைத்த தெல்லாம் அணை உடைந்து ஒழுகுவது போலானது

“சோஸலிஸ்டுகள்ம்மா அவங்கள்லாம். புரட்சிக்காரரகள். நீங்க புலிகள்ன்னு சொல்லி அவங்களை  பயங்கரவாதிகளாக்குறீங்க. அடக்கியாண்டதும், தொடர் இம்சைகளும் தொந்தரவும் தாங்காமதான் அவங்க இயக்கமானாங்க. அடிமையாக்கப் பட்டதாலத்தான அவங்க ஒண்ணா சேர்ந்தாங்க. அவங்களைக் கொன்னு ஒழிச்சுட்டா தீர்ந்திடுமா தமிழங்க பிரச்னை?”

இந்து அப்படியே ஆடிப் போனாள். யாரிவள்? சோஸலிசத்தையும், புரட்சியையும் பற்றிப் பேசுகிறவள்? லட்சுமியின் இந்த முகம் இந்துவுக்குப் புதிதாக இருந்தது. லட்சுமிக்குத் தேவையானஅளவு படிப்பும், புத்திசாலித்தனமும் இருக்கிறதென்பதை அவள் ஏற்கெனவே அறிவாள். இல்லாவிட்டால் இந்தச் சில மாதங்களுக்கிடையில் இந்தப் பெண்ணால் இப்படி சரளமாக மலையாளம் பேச முடியுமா? மட்டுமில்லாமல் ஆங்கிலப் பத்திரிகைகளை அவள் வாசிப்பதையும் காணலாம். ஒரு பாடலை முணுமுணுத்துக் கொண்டு கறுப்பு வண்ணத்துப்பூச்சியாக சிறகடித்த அவளை எல்லாருக்கும் பிடித்திருந்தது.

என்றாலும், சொந்த லாபங்களுக்காக நிரபராதிகளான மக்களைச் சுட்டுக் கொல்லும் புலிகளை இவள் நியாயப்படுத்துவது ஏன்? ராஜீவையும் இன்னும் சில இலங்கைக்காரர்களையும் கொன்றவர்களை அங்கீகரிக்கும் மனதில்லை இந்துவுக்கு. ஆயுதப் புரட்சிகளேதும் தலையிலேறாத பெரும் காந்தி பக்தையாயிருந்தாள் இந்து. தன்னால எடுத்தெறிய முடியாதபடி என்னவோ லட்சுமியின் மனதில் ஆழ வேரூன்றியிருக்கிறது என்று தோன்றியது அவளுக்கு.அல்லது திருத்தப்பட வேண்டியது தன்னுடைய முடிவுகளா?

சாப்பாட்டு வண்டி வரும்போது ஒரு துண்டு ரொட்டிக்காக போட்டி போட்டுக் கொண்டு ஓடுபவர்கள். தாகம் நீக்க குடிநீர் கூட இல்லாமல்... மருந்தில்லாமல்... துணிகள் இல்லாமல்.... பாவப்பட்டவர்கள்!!

உண்மையில் சொல்வதென்றால் சாத்தானுக்கும் கடலுக்கும் நடுவில்.. உயிரைப் பணயம் வைத்து அவர்கள் நடமாடுகிறார்கள். இந்துவுக்கு ஒரு பைபிள் கதை நினைவுக்கு வந்தது. இஸ்ரேல்காரர்களின் கதை. தெய்வத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள். முன்பக்கம் செங்கடல். பின்பக்கம் ஃபிர் அவுணின் படைகள். அன்று செங்கடல் பிளந்து அவர்களைக் காப்பாற்ற தெய்வம் அவர்களோடிருந்தது. இன்று?!

“இன்று ரகசியமா தப்பிக்க நினைக்குறவங்களுக்கு உதவாம, யார் அடிக்கிறாங்களோ அவங்களுக்குத்தான் கடவுள் துணையா இருக்கிறாரென்று தோன்றுகிறது லட்சுமி.. ஆகாயத்திலிருந்து ’மன்னா’ இறங்குவதற்குப் பதிலாக ‘ஷெல்கள்’ அல்லவா வீழுகின்றன?”

இந்து சொல்லி முடிக்குமுன்னரே லட்சுமி புகையத் துவங்கினாள்

“அம்பத்தெட்டில் தமிழர்களைச் சிங்களவர்கள் சுட்டுக் கொன்றபோது தெய்வம் எங்கேயிருந்தது? தூங்கிட்டு இருந்ததா? அன்னைக்கு அனாதையானவர்தான் எங்கப்பா” லட்சுமி ஒரு பேரழுகைக்குத் தயாரானாள். ஒருபோதும் உறங்காத தெய்வத்தைப் பற்றிப் பேசி இனி அவளுக்கு ஆறுதல் சொல்ல முடியாதென்று இந்துவுக்குத் தோன்றியது. அவளுடைய சங்கடங்களையெல்லாம் கொட்டித் தீர்க்கட்டும். இந்து கேட்டுக் கொண்டிருந்தாள்

"முன்னால.. ரொம்ப வருசங்களுக்கு முன்னால.. பற்றியெரியும் நெருப்புக்கு இடையிலிருந்து ஒரு பத்து வயசுப் பையன் இறங்கி ஓடினான். கொளுந்து விட்டெரியும் வீட்டுக்குள் அகப்பட்டுக்கொண்ட தந்தையையும் தாயையும் அழைத்துக் கதறினான் அவன். அக்கிரமக்காரர்களின் அட்டகாசங்களுக்கு இடையில் தனது தங்கையின் கையைப் பற்றிக் கொண்டு அவன் ஓடினான். பின்னாலேயே துரத்தி வந்தவர்கள் அவனது கையிலிருந்தும் அவனது தங்கையைப் பறித்தெடுத்தார்கள். அவளது பிஞ்சு உடலில் செய்யக் கூடாததையெல்லாம் அவர்கள் செய்தபோது அவன் பயந்து உறைந்து ஒளிந்து கொண்டான். பாதி உயிர் போன நிலையில் தனது தங்கையை கொதிக்கும் தாரில் அவர்கள் வீசியெறிந்ததைக் காண நேர்ந்தபோது  அவன் சுயநினைவை இழந்தான்.

பின்னர் அவன் கண்விழித்தது ஒரு சிங்களப் பெண்ணின்  மடியில். அந்த விதவைப் பெண் அவனுக்கு மறு உயிர் கொடுத்தாள். உறக்கத்தில் அவன் அம்மாவை நினைத்துக் கதறும்போது, ’நான் உன் அம்மாதான்’ என்று சொல்லி அவனைக் கட்டியணைத்துக் கொள்வாள். ஆனால், அங்கேயும் அவனுக்குப் பாதுகாப்பில்லை. தன்னால் அந்த சிநேகவதியின் உயிருக்கும்  ஆபத்து என்பதை உணர்ந்து கொண்ட அவன் ஒரு இரவில் அவளது கால்களைத் தொட்டு வணங்கி அங்கிருந்தும் ஓடினான். தூரமான இடத்திற்கு. ரத்த தாகம் கொண்டவர்களின் கண்களுக்கு அகப்படாத தூரத்திற்கு. அப்படித்தான் லட்சுமியின் தகப்பனும் தெருமக்களில் ஒருவனானான்”

லட்சுமியின் கண்கள் நிறைந்து ஒழுகியது. பாசத்தை அள்ளி நிறைத்து தன்னை வளர்த்த அப்பாவின் நினைவுகள் அந்தக் கண்ணீரால் நிறைந்தது. தொலைவில், கிளிநொச்சியில் ஒரு துண்டு நிலத்தை வைத்துக்கொண்டு மகள் திரும்பி வரும் நாளையெண்ணி அப்பா காத்துக்கொண்டிருப்பாராக இருக்கும். பல சமயங்களிலும் அவள் தன்னருகில் இல்லாத அப்பாவோடு கதைத்தும் பேசியும் நடப்பதைக் காணலாம். தவிப்பாள். பிணங்குவாள். அதைக் கண்டு மீனுக்குட்டி கேலி செய்வாள் “ லச்சுவுக்கு பைத்தியம் பிடிச்சிருக்கு. தன்னால பேசிக்கிட்டு நடக்குறா”

”அம்மா.. சானல் மாத்தலாமா? இன்னைக்கு ஐ.பி.எல் மேட்ச். சச்சினும் ஜெயசூர்யாவும் அடிச்சு கலக்குவாங்க. நீங்க வேணா பாருங்க” - அது இந்துவின் மகன். எட்டாம் வகுப்பு படிப்பவன். காயமேற்றவர்களின் துடிப்போ எல்லாம் இழந்தவர்களின் கண்ணீரோ அவனுக்குப் பொருட்டில்லை அவனை அழ வைப்பதுமில்லை. போர், புரட்சி எதுவும் தெரியாமல் அவன் கம்ப்யூட்டரில் நண்பர்களோடு ‘சாட்’ செய்து கொண்டிருப்பான். அவனுக்கும் நண்பர்களுக்கும் பாலிவுட்டும், கிரிக்கெட்டும் மட்டுமே தாராளம். அதற்கிடையில் என்ன இலங்கை பிரச்சனை?

“மகனே, இந்த செய்தியைக் கொஞ்சம் பாருடா. இலங்கையிலே பிரச்னைகள்”
“ஓ.. லங்காவா? ஒரு காலத்துல ராவணன் சீதையை கடத்திக்கொண்டு போய் வச்சிருந்த இடம்தானேம்மா? அங்கே இன்னமும் யுத்தம் முடியலியா? வானர சேனை ஜெயிச்ச நாட்டுல புலிகள் சேனை ஜெயிக்குமா இல்லை  ..” அவன் வாய்விட்டுச் சிரித்தான். அவன் சிரித்தபோது அவன் கன்னத்தில் விழுந்த குழியைப் பார்த்தாள் இந்து

“சரித்திர புஸ்தகத்தில் இருக்கும்மா. அசோக சக்கரவர்த்தியோட மகள் சங்கமித்ரா போதி மரக்கம்பு நட்டு வச்ச நாடு... எனிவே.. ட்ரபுள் அண்ட் பெய்ன் எவ்ரிவேர்! ஐ டோண்ட் வாண்டு வேஸ்ட் மை டைம் ஆன் திஸ் அக்ளி மேட்டர்ஸ். ஸோ, லெட் அஸ் திங் ஆஃப் ஸம்திங் ப்ளெசண்ட். நல்ல பிள்ளையா சானலை மாத்துங்கம்மா” அவனிடம் என்ன சொல்வது?  கரிந்து விழுந்த நூறாயிரம் போதிமரக் கம்புகள் இந்துவின் மனதில் இற்று வீழ்ந்தன. எங்கேயோ நஷ்டப்பட்டுப்போன  அறிவுரைகள்!!

ஜெயசூர்யாவின் சிக்ஸ்ர்கள் உயரத்தில் பறக்கின்றன. மும்பை இந்தியர்கள் வெற்றி பெறப் போகிறார்கள். மகன் கை தட்டினான். உயர்ந்து எழுந்த பந்தோடு அவனும் குதித்துத் துள்ளினான்.
“சிக்ஸ்.. சிக்ஸ்” அவன் உரக்கச் சப்தமிட்டான்
லட்சுமியின் செல்பேசி சிணுங்கியது. “ஹலோ அண்ணா” பேசிக் கொண்டே அவள் உள்ளே சென்றாள். முகம் பார்த்தாலே தெரிந்தது அவள் காத்திருந்த அழைப்பு என்று

இந்து மீண்டும் ’ஆன் ஃபிராங்கின் டயரிக்குறிப்புகளோ’டு பயணம் துவங்கினாள். வெஸ்ட்போர்க், ஓஷ்விட்ஸ், ஜெர்மன் கான்செண்ட்ரேஷன் கேம்ப்கள். கேம்புகளுக்குள் நுழையும் அடைத்து நிறைக்கப்பட்ட கால்நடை வண்டிகள். அந்த வண்டிகளில் ஒன்றில் ஆன்ஃபிராங்க் என்ற சிறுமியும் இருந்தாள். ஜெர்மன் பட்டாளத்தின் பிடியில் அகப்படுவதற்கு முன்பாக ஒளிந்திருந்த இடத்திலிருந்து அவள் எழுதிய டயரிக் குறிப்புகள். வேட்டையாடப்பட்ட ஒரு சமூகத்தின் வேதனை. இந்த கான்செண்ட்ரேஷன் கேம்புகளுக்கும் அகதி முகாம்களுக்குமிடையில் என்ன வித்தியாசம்? சிந்தனைகள் தடைப்பட்டது.

மீனுக்குட்டி அழுது கொண்டு ஓடி வந்தாள். ”அம்மா.. வாங்கம்மா சீக்கிரம் வாங்கம்மா. லச்சு கதவைத் திறக்க மாட்டேங்குறா. அவ அழுதுக்கிட்டிருக்கா”

கதவுக்கு இந்தப் புறத்திலிருந்து லட்சுமியின் தேம்பல்களைக் கேட்க முடிந்தது. ஊரிலிருந்து ஏதோ துக்க செய்தி வந்திருக்க வேண்டும். ’கடவுளே! அவளுடைய அப்பாவுக்கேதாவது?’. அவளால் அதை சகித்துக்கொள்ள முடியாது. சங்கடத்தில் அவள் ஏதாவது அவிவேகமான செயலைச் செய்துவிட்டால்?? பூட்டிய கதவுக்கு இந்தப் பக்கம் இந்து பதறிப்போய் நின்றாள்.. அரபு நாடுகளின் சட்டங்கள் கடுமையானவை. வீட்டை விட்டு ஓடிப்போன பணிப்பெண்ணின் உடல் அனாதைப் பிரேதமாகக் கண்டெடுக்கப்பட்டதும், அந்தப் பெண்ணுக்கு வேலை கொடுத்தவர்கள் செய்யாத குற்றத்துக்காக ஜெயிலுக்கு அனுப்பப்பட்டதும் நடந்து அதிக நாட்களாகி விடவில்லை.

நடுங்கும் குரலுடன் இந்து அழைத்தாள்
 “லட்சுமி கதவைத் திற”
கதவு திறக்கப்படவில்லை
இந்துவின் சப்தம் உயர்ந்தது. ” கதவைத் திறன்னு சொன்னேன்”
“வேண்டாம்மா. லச்சுவை திட்டாதீங்கம்மா. லச்சு பாவம்தானே?” அம்மாவின் குரல் மாற்றத்தைக் கண்டு மீனுக்குட்டி அழத் தொடங்கினாள்

அழுகைக்கிடையில் அவள் அழைத்துக் கொண்டிருந்தாள் “லச்சு.. வெளில வா லச்சு.. இல்லேன்னா மீனுக்குட்டி உன்கூட பேசமாட்டேன்.. லச்சு வெளில வந்து எனக்கு வானம்பாடி கத சொல்லித்தா லச்சு” மீனுக்குட்டியின் அழுகையைத் தாங்க முடியாமல் லட்சுமி கதவைத் திறந்தாள். அந்தக் கண்களில் துக்கத்தின் கடலலை வீசிக் கொண்டிருந்தது - கடல் அலைகளில் ஆடி அலையும் தோணி. நிலைகுத்திய பார்வையுடன் அவள் நின்று கொண்டிருந்தாள்

“என்னாச்சு லட்சுமி, உங்க அண்ணன் போன்தானே வந்தது?”
“அவங்க கொன்னுட்டாங்க. என்னுடைய செல்வத்தை அவங்க கொன்னுட்டாங்க” சூறாவளிக் காற்று இதயத்திலிருந்தெழுந்து வந்தது போன்ற அலறலாக இருந்தது அவளது குரல். கடல் பொங்கியெழுகிறது. தோணி மூழ்கத் துவங்குகிறது. தோணிக்காரனும் கூடவே.. காப்பாற்றச் சொல்லி முறையிடும் கைகள் மேலெழுந்தும் கீழ் விழுந்தும்.. மேலெழுந்தும் கீழ் விழுந்தும்..

”செல்வம் யாரு? யாரு அவனைக் கொன்னது? புலிகளா?  அல்லது அவனே புலியாயிருந்தானா?” தெரியாமல் இந்து ஏதேதோ கேட்டு விட்டாள். லட்சுமிக்குள்ளிருந்த நெருப்பு பெரும் அனலாய் மாற அது போதுமானதாக இருந்தது

”பேசாதீங்க. நீங்க பேசாதீங்க. செல்வம் புலிதான். ஏன் நானும் புலிதான். ஏன் என்னைக் கொல்லணும்னு தோணுதா உங்களுக்கு?”

”லச்சு..சண்டை போடாதே லச்சு” மீனுக்குட்டி சிணுங்கத் துவங்கினாள். அவளைக் கட்டிப்பிடித்து லட்சுமி அழுதாள். அழுது முடித்ததும் அவள் ஒரு கதை சொன்னாள். வானம்பாடியின் கதை அல்ல. என்றைக்காவதொரு நாள் சுதந்திரத்தின் பொழுது விடியும்போது அவளருகில் வந்து சேருவதாகச் சொல்லிப் போனவனின் கதை. கடைசியில் ராணுவத்தின் குண்டு துளைத்த படகிலிருந்து கரையொதுங்கிய சவங்களில் ஒன்றாக மாறிப் போன அவளது செல்வத்தின் கதை..

கடல் பொங்கிப் பெருக்கெடுத்துக் கொண்டிருந்தது மீண்டும்.. மீண்டும்..
லட்சுமியின் கண்ணீரில் இலங்கை மூழ்கிவிடுமோவென்று இந்துவுக்குத் தோன்றியது. இங்கே ஜெயிப்பவர்கள் யார்? தோற்பவர்கள் யார்?

கண்ணீரில் மூழ்கியவாறே தனது நாட்குறிப்பில் லட்சுமி எழுதினாள். “இன்று மே 20. என் செல்வம்....”
அதை எழுதி முடிக்க அவளால் முடியவில்லை. அதற்கு முன்னரே இந்த பூவுலகப் பந்தங்களையெல்லாம் கடந்து போகும் ஏதோ ஒரு அகதிக் கூட்டத்தில் ஒருவளாக அவள் மாறிப் போயிருந்தாள் மண்ணில்லாதவளாக, மனதும் மரத்துப் போனவளாக.

இந்துவின் மகன் அப்போதும் துள்ளிக்குதித்துக் கொண்டிருந்தான். அதோ ஜெயசூர்யா அடித்த சிக்ஸர் பறந்து பறந்து உயர்கிறது. அப்போதும் கிளிநொச்சியில் வண்ணத்துப்பூச்சிகளின் ரகசியப் பயணம் தொடர்ந்து கொண்டேயிருந்தது.
***

நன்றி : ஷீலா டோமி, ஆசிப் மீரான்

1 comment:

  1. Don't know Tamil.Still Thank u so much for translating ths story. So proud of you Sheela Chechi.

    ReplyDelete