Tuesday, November 5, 2013

ஏழையின் சாபம் - பிரேம்சந்த் சிறுகதை (தமிழாக்கம் : மஜீத்)


Image Courtesy : mvnu
***
ஏழையின் சாபம்
(Garib Ki Hai)

சாந்த்பூர் கிராமத்தின் பெரிய பணக்காரர் முன்ஷி ராம்சேவக். கிராமத்தின் சிறுமுறையீடுகளை விசாரித்துத் தீர்ப்பளிக்கும் கோர்ட்டான  வெட்டவெளிப் பொட்டலில், ஒரு வேப்பமரத்தடியில் கிடந்த உடைந்த பெஞ்சில்தான் அவர் தினமும் உட்கார்ந்திருப்பார். எந்தக் கோர்ட்டிலும் அவர் வாதாடுவதையோ அல்லது பிரமானப்பத்திரங்கள் தாக்கல் செய்வதையோ யாரும் பார்த்ததில்லை. ஆனாலும் எல்லோரும் அவரை வக்கீல் என்று அழைத்தனர். எப்போது அவர் அந்தப் பஞ்சாயத்துப் பொட்டலுக்கு போனாலும் கிராமத்தினர் கூட்டமாக அவரைப் பின் தொடர்ந்தனர். அனைவரும் அவர் மீது மிகுந்த மரியாதையும் நம்பிக்கையும் வைத்திருந்தனர். சரஸ்வதிதேவியின் முழுகடாட்சமமும் பெற்ற பேச்சாற்றல் கொண்டவர் என்று அவரைப் புகழ்ந்தனர். ஆனால் இவை எல்லாமே குடும்ப பாரம்பர்யம்பற்றி வெற்றுப்பெருமைபேச மட்டுமே உதவியது. அவருக்கென்று பெரிய வருமானம் ஒன்றும் வரவில்லை. அவரது வாழ்வாதாரமே கிராமத்தின் ஆதரவற்ற விதவைப்பெண்களும் மற்றும் விபரம்போதாத பணக்காரக் கிழவர்களும்தான். விதவைப்பெண்கள் அவர்களிடமிருந்த பணத்தை, பாதுகாப்புக்காக அவரிடம் கொடுத்துவைத்தனர்; கிழவர்களோ தங்களது உதவாக்கரை மகன்களுக்குப் பயந்து தங்களது சொத்துக்களை அவரிடம் ஒப்படைத்திருந்தனர். ஆனால், அவரது கைக்குப் போன பணம் போனதுதான்; திரும்பி வரும் வழியை மறந்துவிடும்!

அதே கிராமத்தில் முங்கா என்ற பிராமண விதவைப்பெண் வாழ்ந்து வந்தாள். அவளது கணவன் இந்திய ராணுவத்தின் சுதேசிப்படைப் பிரிவில் சார்ஜன்ட்டாக இருந்து அங்கேயே போரில் இறந்துவிட்டான். அவனது சிறப்பான சேவைக்காக அரசாங்கம் வெகுமதியாக 500 ரூபாய் அளித்திருந்தது. விதவை என்பதாலேயே மிகுந்த கஷ்டத்திலிருந்த அந்த பாவப்பட்ட சீவன், தன்னிடமிருந்த முழுத்தொகையையும் ராம்சேவக்கிடம் ஒப்படைத்து விட்டு மாதாமாதம் மிகச்சிறிய தொகையை பிச்சைவாங்குவது போலப் பெற்று வயிற்றைக் கழுவி வந்தாள். முன்ஷிஜியும் தனது கடமையை பலவருஷங்கள் மிக நேர்மையாகவே செய்து வந்தார். ஆனால் முங்காவுக்கு நிறைய வயதாகிவிட்டாலும் சாவதற்கான அறிகுறியே இல்லாததைக் கண்ட அவர், அவளது ஈமக்கிரியைக்கான செலவில் பாதியைக்கூட மிச்சம் விட்டுவைக்க மாட்டாள் என்று உணர்ந்தார்.

ஒருநாள் அவளிடம், “நீ சாகப்போகிறாயா, இல்லை சாகவே மாட்டாயா? உனது ஈமக்கிரியை செலவை நீயே பார்த்துக் கொள்வதாக ஒப்புக்கொள்” என்று சொல்லவும், அவளுக்கு விஷயம் புரிந்துவிட்டது. அவரிடம் மீதமிருக்கும் முழுத்தொகையையும் தன்னிடம் திருப்பித் தந்துவிடும்படி சொன்னாள். முன்ஷியின் கணக்குப் புத்தகம் தயாராக இருந்தது. அதன்படி ஒரு பைசாக்கூட மீதம் இல்லை! உடனே அவள் முரட்டுத்தனமாக அவரது கையைப்பற்றி, “நீ எனது  250 ரூபாயை அபகரித்துவிட்டாய்; ஆனால் அதில் ஒருபைசாவைக்கூட நீ வைத்துக்கொள்ள நான் விடமாட்டேன்” என்று கத்தினாள். ஆனால் அந்த பாவப்பட்ட விதவையின் கோபத்தினால் பெரிய பலன் ஒன்றும் கிடைக்கவில்லை. அவளுக்கு எந்த நீதிமன்றத்திலும் யாரையும் தெரியாது; எழுதப்படிக்கவும் தெரியாது. அவளிடம் கணக்குவழக்கும் கிடையாது; இருந்தாலும் கிராமசபை பஞ்சாயத்தில் அவளுக்குக் கொஞ்சம் நம்பிக்கை நிச்சயமாக இருந்தது. பஞ்சாயத்தும் கூடியது; சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து மக்கள் வந்திருந்தனர். முன்ஷியும் அசத்தலான தோரணையுடன் தயாராக இருந்தார். அவர் எழுந்து நின்று சபையோரிடம் பேச ஆரம்பித்தார்: “நண்பர்களே! நீங்கள் எல்லோரும் உன்னதமானவர்கள். உண்மைக்கு உங்களை அர்ப்பணித்து விட்டவர்கள். உங்கள் அனைவருக்கும் தலைவணங்குகிறேன். உங்களது பெருந்தன்மைக்கும் கருணைக்கும், உங்கள் தொண்டுக்கும் அன்புக்கும் நான் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன். இந்த துரதிருஷ்டசாலியான கைம்பெண்ணின் பணத்தை நான் நிஜமாகவே எடுத்துக்கொண்டதாக நீங்கள் நினைக்கிறீர்களா?”

சபையோர்கள் ஒருமித்த குரலில், “இல்லை, இல்லை! நீங்கள் அந்தமாதிரி ஒரு செயலை செய்திருக்க முடியாது” என்று கூறினர்.

முன்ஷிஜி, “அப்படி நான் அவளது பணத்தைத் திருடிவிட்டதாக நீங்கள் அனைவரும் ஒப்புக்கொண்டால், ஆற்றிலோ குளத்திலோ மூழ்குவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. நான் பணக்காரனுமில்லை. பெரிய பரோபகாரி என்று பெருமைபட்டுக்கொள்ளவும் என்னால் முடியாது.  ஏதோ என் பேனாவாலும் உங்கள் பேரன்பாலும் நான் ஏழையும் இல்லை. ஒரு விதவையின் பணத்தைத் திருடும் அளவுக்கா நான் கீழானவன்?” என்றார். சபையோர்கள் மீண்டும் ஒருமித்தனர். “இல்லை, இல்லை! அந்தமாதிரி ஒரு செயலை செய்திருக்க முடியாது”.

சபை அவரை விடுவித்துவிட்டது.

முங்கா ஒரு ஆழ்ந்த பெருமூச்சுவிட்டபடி, “இங்கே என் பணத்தைப் பெற என்னால் முடியவில்லை; இருக்கட்டும். இங்கே அது எனக்குக் கிடைக்காமல் இருக்கலாம்; ஆனால் மேலுலகில் அதைத் திரும்பப் பெறுவேன்” என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள். அங்கே முங்காவுக்கு உதவவோ அவளது சோகத்தைக் கேட்கவோ யாரும் இல்லை. வறுமை அளித்த துயரங்கள் அத்தனையையும் அவள் ஒருசேர சகித்துக்கொண்டாள். அவளுக்கு நல்ல உடல் வலிமை இருந்தது. அவள் நினைத்திருந்தால் அவளால் கடுமையாக உழைக்க முடிந்திருக்கும். ஆனால் அந்தப் பஞ்சாயத்துத் தீர்ப்பு வந்த நாளிலிருந்து இனி வேலைக்குப் போவதில்லை என்று உறுதிகொண்டாள். தனது பணத்தைப் பற்றிய நினைப்பே இப்போது அவளை முழுதுமாக ஆட்கொண்டிருந்தது. பகலிலும் இரவிலும், நடக்கும்போதும் உட்காந்திருக்கும்போதும் அவள் மனதில் ஒரே எண்ண ஓட்டம் தான் ; அது முன்ஷி ராம்சேவக்கைத் திட்டித்தீர்ப்பது.

படிப்படியாக அவள் மனம் பேதலித்தது. தலையிலும் உடம்பிலும் ஒட்டுத் துணியில்லாமல் கையில் ஒரு சிறிய கத்தியுடன் ஆள்நடமாட்டமில்லாத இடங்களில் உட்கார்ந்திருப்பாள். அவளது குடிசைக்குப் போவதுமில்லை. ஆற்றோரத்தில், பிணங்களைத் தகனம் செய்யும் எரிமேடைப் பக்கமாக பரட்டைத்தலையுடனும், சிவந்த கண்களுடனும் மெலிந்த கை,கால்களுடனும் வெறித்த பார்வையோடு அவள் சுற்றித்திரிந்தாள். இந்தக்கோலத்தில் அவளைப் பார்த்தவர்கள் பயந்து நடுங்கினர். யாரும் வேடிக்கைக்காகக்கூட அவளைக் கிண்டல் செய்யவில்லை. எப்போது அவள் கிராமத்துக்குள் வந்தாலும் பெண்கள் தங்கள் வீடுகளின் கதவுகளை மூடிக்கொண்டனர். ஆண்களும் நழுவி ஒதுங்கிக்கொண்டனர். குழந்தைகள் அலறி ஓடினர். ஆனால் ஒரே ஒரு குழந்தை மட்டும் பயந்து ஓடுவதில்லை – அது முன்ஷிஜியின் மகனான ராம்குலம். கிராமத்தின் மாறுகண்காரர்கள் மற்றும் ஊனமுற்ற மனிதர்கள் அவனை மிகவும் வெறுத்தொதுக்கினர். பரிதாபமாக குழம்பித்தவிக்கும் முங்காவை அவன், கிராமத்து நாய்களைவிட்டு துரத்தவிட்டு, முங்கா குடியிருப்புப்பகுதியை விட்டு வெளியேறும்வரை கைகளைத்தட்டிக்கொண்டு விரட்டிச் செல்வான்.

தன் பணத்தோடு புத்திசுவாதீனத்தையும் சேர்த்து இழந்த முங்கா உள்ளூரில் பைத்தியம் என்ற பட்டத்தைப் பெற்றாள். தனிமையில் அமர்ந்து ராம்சேவக்கைத் தாக்கி அழிக்கும் தனது அடங்காத ஆசையை வெளியிட்டபடி மணிக்கணக்கில் தனக்குள் பேசிக்கொள்வாள். அவளது வெறுப்பு உச்சக்கட்டம் அடையும்போது, தனது முகத்தை ராம்சேவக்கின் வீடு இருக்கும் பக்கமாத் திருப்பி, ஆக்ரோஷத்துடன், “உன் ரத்தத்தைக் குடிப்பேன்டா” என்று பயங்கரமாகக் கூச்சலிடுவாள்

முன்ஷிஜி ஒரு தைரியமான உறுதியான மனிதர்தான். ஆனாலும் முங்காவின் அந்த கொடூரமான வார்த்தைகளைக் கேட்டதும் பயந்துவிட்டார். மனிதர்கள் வழங்கும் தீர்ப்புக்கு வேண்டுமானால் நாம் அச்சப்படாமலிருக்கலாம், ஆனால் கடவுள் வழங்கும் தீர்ப்புக்கான அச்சம் மனிதர்களின் மனதில் எப்போதும் இருக்கும். முங்காவின் இரவுநேர நடமாட்டங்களால் ஈர்க்கப்பட்ட அந்த மாதிரியான பயம், சிலசமயங்களின் அவர் மனதிலும் பிரதிபலித்தது. அவர் மனைவி நாகினின் மனதில் இன்னும் அதிகமாகவே பிரதிபலித்தது. நாகின் மிகவும் புத்திசாலியான பெண்மணிதான். அவள் அடிக்கடி அவரது தொழில் நடவடிக்கைகளில் ஆலோசனை கூறுவாள். அவளது பேச்சு அவரது எழுத்துபோலவே ஜொலிக்கும். ஒருநாள் நடுராத்திரியில் முன்ஷிஜி தூங்கியபிறகு முங்கா திடீரென்று அவரது வீட்டுவாசலில் நின்று கூச்சலிட்டு, உன் ரத்தத்தைக் குடிக்கப் போறேன்டா என்று கத்தினாள். அவளது கொடூரச்சிரிப்பைக் கேட்ட அவர் அதிர்ச்சியில் துணுக்குற்றார். கால்கள் பயத்தால் நடுங்கின. இதயம் படபடத்தது. தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கதவைத் திறந்தார்; நாகினையும் எழுப்பினார்  இருவரும் சத்தமில்லாமல் வாசலுக்கு வந்து எட்டிப்பார்த்தனர். முங்காவின் மங்கலான உருவம் தரையில் கிடந்தது. அவள் மூச்சிரைப்பதும் அவர்களுக்குக் கேட்டது, இப்படியே இரவும் கடந்துவிட்டது. வாசற்கதவை மூடிவிட்டாலும் ராம்சேவக்கும் நாகினும் மணிக்கணக்கில் உட்கார்ந்தே இருந்தனர். முங்கா வீட்டுக்குள் வரமுடியாது, ஆனாலும் அவளது குரலை யார் தடுத்து நிறுத்தமுடியும்? முங்காவின்  குரல்தான் அவள் குணாதிசயங்களிலேயே மிகவும் கொடூரமானது.

முங்கா முன்ஷிஜியின் வீட்டுவாசலில் கிடக்கும் செய்தி கிராமம் முழுதும் பரவியது. கிராமத்தினர் முன்ஷிஜி அவமானப்பட்டதையும் மதிப்பிழந்ததையும் கண்டு பெருமகிழ்ச்சி கொண்டனர். எல்லோரும் ஒரே நேரத்தில் குழுமினர். சிறுவன் ராம்குலம் இந்தக் கூட்டத்தை விரும்பவில்லை; அவனுக்கிருந்த கோபத்தில் அவனுக்கு சக்தி இருந்தால் முங்காவைக் கிணற்றில் தூக்கிவீசி இருப்பான். ஒரு வாளியில் மாட்டுச்சாணத்தைக் கொண்டுவந்து பாவப்பட்ட முங்காமீது கொட்டினான். வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவர்கள் மீதும் கொஞ்சம் சாணம் தெரித்தது. முங்கா முற்றிலும் சாணத்தால் மூடப்பட்டாள். வேடிக்கை பார்த்தவர்கள் சட்டென்று பின்வாங்கி, முன்ஷி ராம்குலத்தின் வாசலில்தான் இப்படியான நல்ல நிகழ்ச்சிகளைக் காணமுடியும் என்று தங்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டனர்.

முன்ஷிஜி தன் மகனின் புத்திசாலித்தனதையும், ஒன்றுக்கும் உதவாத கூட்டத்தை இப்படி நயதந்திரமாக விரட்டியதையும் வெகுவாகப் பாராட்டினார். ஒருவழியாக கூட்டம் முழுமையும் கலைந்து சென்றுவிட்டது. ஆனால் முங்கா இன்னும்  அப்படியே கிடந்தாள். அன்று இரவு அவள் முழுவதும் அன்னம் தண்ணீரின்றிக் கிடந்தாள். முன்ஷிஜியும் நாகினும் முன்னிரவுபோலவே மீண்டும் தூங்காமல் விடியும்வரை விழித்திருந்தனர். இன்று முங்காவின் கூச்சலும் சிரிப்பும் முன்பைவிடக் குறைவான தடவைகளே கேட்டதால், வீட்டிலிருந்தவர்கள் தொல்லைவிட்டது என்றுதான் நினைத்தனர். விடிந்தவுடன் முன்ஷிஜி கதவைத் திறந்ததும் முங்கா அசைவில்லாமல் கிடந்ததைப் பார்த்தார். அப்போது அந்த கிராமம் கண்ட பரபரப்பையும் ராம்சேவக்கிற்கு ஏற்பட்ட அவமானத்தையும் வார்த்தையால் விவரிக்க முடியாது. அவர் சேர்த்துவைத்திருந்த கௌரவம் எல்லாம் நொடியில் மறைந்துவிட்டது. ஆம், முங்கா அவரது வீட்டு வாசலில் உயிரை விட்டிருந்தாள்.  உயிரோடு இருக்கும் போது அவளால் பெரிதாக ஒன்றும் சாதிக்கமுடியாது என்பதையும் செத்தபின் தன்னால் சாதிக்கமுடியும் என்பதையும் அவள் அறிந்தேயிருந்தாள்.

முன்ஷி சட்டம் நன்கறிந்தவர். சட்டப்படி அவர் குற்றமற்றவர். அவர்மீது சட்டநடிவடிக்கைகள் எடுக்கப்படவேண்டிய வகையில் முங்கா சாகவில்லை. இந்தமாதிரி உதாரணங்களை இந்திய தண்டனைச் சட்டத்திலுங்கூட  காணமுடியாது. முன்ஷியும் அவர் மனைவியும் தங்களுக்குள் இப்படிச் சொல்லிக்கொண்டுதான் தங்களைத் தேற்றிக்கொண்டனர். ஆனால் மாலை வந்தவுடன் அவர்களின் பகுத்தறிவுச் சமாதானங்கள் நீர்த்துப் போக ஆரம்பித்தன. இரவு வந்ததும் பயமும் பற்றிக்கொண்டது. நேரம் ஆக ஆக இந்தப்பயம் கூடிக்கொண்டே போனது. வீட்டின் முன்கதவை அவர்கள் மூடமறந்துவிட்டபடியால் அது திறந்தே கிடந்தது. எழுந்து சென்று அதை மூடுவதற்கான தைரியம்கூட அவர்களில் யாருக்கும் இல்லை. கடைசியில் நாகின் ஒரு விளக்கை எடுத்துக்கொள்ள, முன்ஷி ஒரு கோடரியையும், ராம்குலம் அரிவாளையும் எடுத்துக்கொண்டு, மூவரும் ஒன்றாக நடுங்கிக்கொண்டும் பதுங்கிக்கொண்டும் கதவருகே சென்றனர். கதவை மூடியபிறகு மூவரும் சமையலறைக்குச் சென்று ஏதோ சமைக்கத் தொடங்கினர்

ஆனாலும் முங்கா அவர்களது உணர்வுகளுக்குள் முழுதாய் நிறைந்திருந்தாள். அவர்கள் தங்களது நிழலைப் பார்த்தால்கூட நிச்சயமாய் அது முங்காதான் என்று பயந்து தாவிக் குதித்தனர். ஒவ்வொரு இருட்டு மூலையிலும் அவள் உட்கார்ந்திருப்பதாய் அவர்களுக்குத் தோன்றியது. சமையலறையில் மாவு, பருப்பு போன்றவற்றை வைத்திருக்கவேண்டி பெரியபெரிய மண்பாண்டங்கள் இருந்தன. அங்கங்கே சில பழைய பிடிதுணிகளும் இறைந்துகிடந்தன. அப்போது பசியெடுத்த சுண்டெலி ஒன்று இரைதேடி அந்தப்பக்கமாய் துணிகளுக்கிடையே ஊர்ந்துவரவே, சரசரவென்று சத்தம் கேட்க, அங்கே பரப்பிக்கிடந்த துணிகளும் முங்காவில் ஒல்லியான கால்கள் மாதிரியே தெரிய, அதைக்கண்ட நாகின் பயத்தில் குதித்து அலறி ஆர்ப்பாட்டம் செய்துவிட்டாள். என்ன நடந்ததென்று அறியாத முன்ஷி கதவை நோக்கிப் பாய, திடீரென்று ஓட ஆரம்பித்த ராம்குலம் தன் தந்தையின் கால்களுக்கிடையில் சிக்கிக்கொண்டான். அப்போது சுண்டெலி வெளிப்பட, அதைக் கண்டபின்னரே அவர்கள் இந்தக் களேபரத்தில் இருந்து மீண்டனர்.

சாப்பிட்டு முடித்துவிட்டு மூவரும் படுக்கையறைக்கு வந்தனர். ஆனால் அங்கும் அவர்களை முங்கா நிம்மதியாய் இருக்க விடவில்லை. அவர்கள் பேசிக்கொண்டு சந்தோஷமாகத்தான் இருந்தனர். என்னதான் அவர்கள் மறக்கமுனைந்தாலும் அவர்களின் மனத்திரையை விட்டு முங்கா அகலவில்லை. ஒரு சிறிய அதிர்வுகூட அவர்களைத் திடுக்கிடவைத்தது. இலைகளின் சலசலப்புகளைக் கேட்டாலும் அவர்களின் ரோமக்கால்கள் குத்திட்டு நின்றன.

நாகின் தூங்கிக்கொண்டிருக்குப்போது, முங்கா சிவந்த கண்களோடும், கூரியபற்களோடும், தனது மார்பில் அமர்ந்துகொண்டு அரற்றியதுபோலத் தோன்றியதால், அவளுக்குத் தூக்கிவாரிப் போட்டது. நாகின் பெருங்குரலுடன் அலறிக்கொண்டு, முற்றத்தை நோக்கி பைத்தியக்காரி போல ஓடினாள். பிறகு சடாரென சுயநினைவை இழந்து தரையில் விழுந்தாள். வியர்வை தெப்பலாக நனைத்துவிட்டிருந்தது. அவளது அலறலைக் கேட்டு முன்ஷி விழித்துக்கொண்டாலும் அச்சத்தில் கண்களைத் திறக்கவில்லை. குருடனைப் போல் தட்டுத்தடுமாறி, தடவிக்கொண்டே சென்று, நீண்டநேரத்திற்குப் பிறகு கதவைக் கண்டுபிடித்தார். பிறகு ஒருவழியாக அவர் முற்றத்தை அடைந்தார். அங்கே நாகின் தரையில் விழுந்து கிடந்தாள். முங்காவின் பயம் அவளைக் கொன்றுவிட்டிருந்தது. உயிரோடிருக்கும்போது முங்கா, நாகினின் சீற்றத்துக்கு எப்போதும் பயந்துகொண்டிருந்தாள். தன் உயிரைத் துறந்தபிறகு, நாகினின் சீற்றத்தை எதிர்கொள்ள இப்போது அவளால் முடிந்தது!

நாகினின் கதையை முடித்துவிட்டாலும், முங்கா முன்ஷிஜியை வெறுமனே விட்டுவிடப் போவதில்லை. ஓவ்வொரு கணமும் அவளது உருவம் அவரது கண்முன்னே தெரிந்துகொண்டுதான் இருந்தது. அவர் எங்கே இருந்தாலும் அவரது நினைவு மட்டும் அவளைச் சுற்றியே எப்போதும் வட்டமிட்டது. தனியறைச்சிறையில் அகப்பட்டதைப் போல எப்படியோ பத்துப் பன்னிரென்டு நாட்களைக் கழித்துவிட்டார். இரண்டு வாரங்களுக்குத் துக்கம் அனுசரித்தபின், ஒருநாள் தன் உடைகளை மாற்றிக்கொண்டு, தான் உட்காரும் பாய் மற்றும் தோளில் மாட்டும் பெட்டியுடன் பஞ்சாயத்துப் பொட்டலுக்குச் சென்றார்.

அவரது தோற்றம் கொஞ்சம் பிரகாசமாகத் தெரிகிறது. அன்றைக்கு நிறைய வாடிக்கையாளர்கள் அவரை மொய்க்கப்போகிறார்கள்; நிறைய துக்கவிசாரிப்பெல்லாம் நடக்கும். தாம் சிறிது கண்ணீர் சிந்தவேண்டிக்கூட வரலாம் என்றெல்லாம் நிறைய எதிர்பார்ப்புடன் சென்றார். தொழிலிலும் அன்று முன்கூட்டி மீட்கப்படும் கடன்களும், புதிய அடமானங்களும், ஒப்பந்தப்பத்திரங்களும் மிகுதியாக வரும்; நாம் பணத்தில் கொழிக்கலாம் என்றெல்லாம் கணக்குப் போட்டார். இதே எண்ணங்களுடனேயே அவர் பொட்டலை அடைந்தார்.

ஆனால் அங்கே நடந்ததோ வேறு; மிகுதியான அடமானங்கள், முன்கூட்டிய கடனடைப்புக்கள், வாடிக்கையாளர்களின் சந்தோஷமான வாழ்த்துக்கள், இவைகளுக்குப் பதிலாக மோசமான ஏமாற்றத்தைத்தான் அவர் எதிர்கொண்டார். தனது பெட்டியைத் திறந்துவைத்துக்கொண்டு மணிக்கணக்கில் அமர்ந்திருந்தும் யாரும் அவர் அருகில் வரவில்லை; ஒருவரும் அவர் இத்தனை நாள் எப்படி இருந்தார் என்று விசாரிக்கக்கூட முன்வரவில்லை. புது வாடிக்கையாளர்கள்தான் வரவில்லையென்றால், காலங்காலமாக முன்ஷிஜி குடும்பத்தாரால் நிர்வகிக்கப்பட்டு வந்த பழைய வாடிக்கையாளர்கள் கூட தங்கள் முகங்களை அவரிடம் இருந்து மறைத்துக்கொண்டனர். முழுநாளையும் இவ்வாறு பொட்டலில் வீணாய்க் கழித்தபின் வீட்டுக்குச் சென்று, கவலையிலும் ஏமாற்றத்திலும் மூழ்கினார். வீட்டுக்கு அருகில் வந்தவுடன் முங்காவின் உருவம் அவர் முன்னே தோன்றியது. கதவைத் திறந்தவுடன் ராம்குலம் அடைத்துவைத்திருந்த இரண்டு நாய்கள் பாய்ந்தோடி வெளியேற, மிகுதியான பயத்தால் தன்னுணர்வை முற்றிலும் இழந்த அவர் ஓலமிட்டு அலறி, சுயநினைவற்றுத் தரையில் சரிந்து விழுந்தார்.

இதற்குப் பிறகு முன்ஷிஜிக்கு என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியவில்லை. பல நாட்களாக அவர் பொட்டலுக்குச் செல்வதையும் வாட்டத்துடன்ன் திரும்பி வருவதையும் பலரும் பார்த்தனர். பிற்பாடு அவர் பத்ரிநாத் கோவிலுக்குப் புறப்பட்ட பிறகு பலமாதங்களுக்கு அவர் யார் கண்ணிலும் தென்படவில்லை.  ஒருநாள் அக்கிராமத்துக்கு ஒரு சாமியார் வந்தார். நெற்றியில் விபூதிப்பட்டையுடனும், நீண்ட சிக்குப்பிடித்த சடைமுடியுடனும் இருந்த அவர் கையில் ஒரு தண்ணீர் வைத்துக்கொள்ளும் மண்கலயம் இருந்தது. அவரது முகவெட்டு ஏறக்குறைய ராம்சேவக்கை ஒத்திருந்தது. அவரது பேச்சும்கூட ராம்சேவக்கிடம் இருந்து அத்தனைக்கு மாறுபடவில்லை. ஒரு மரத்தடியில் அமர்ந்து தியானம் செய்தார். அன்று இரவில் ராம்சேவக்கின் வீட்டில் இருந்து புகை கிளம்பியது; பிறகு நெருப்பின் ஒளிர்வும் தென்பட்டது;; அதன்பின் தீ பற்றிக்கொண்டு கொளுந்துவிட்டு எரிந்தது.

முன்ஷிஜி காணாமல் போனவுடன், ராம்குலம் தனது உறவினர் வீட்டுக்குச் சென்று, அவர் வீட்டில் சிறிதுகாலம் காலந்தள்ளினாலும், அவனது குணங்களுக்கு யாரும் ஒத்துப்போக முடியவில்லை. ஒருநாள் இன்னொருவரின் முள்ளங்கிகளைத் தோண்டியெடுக்க, தோட்டத்தின் உரிமைக்காரர் அவனைப்பிடித்து அறைந்துதள்ளிவிட்டார். இது அவனது கோபத்தைக்கிளறவே, அவரது களஞ்சியத்துக்குச் சென்று அதற்குத் தீவைத்துவிட்டான். களஞ்சியம் முற்றிலும் எரிந்து, ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்பில் பொருள்கள் சாம்பலாகிவிட்டன. போலிஸ் வந்து விசாரித்து ராம்குலம் கைது செய்யப்பட்டான். இந்தக் குற்றத்துக்காக, இப்போது அவர் சுனாரில் உள்ள சீர்திருத்தப் பள்ளியில் இருக்கிறான்.
***
நன்றி : நண்பர் மஜீத் |  amjeed6167@yahoo.com
***
தொடர்புடைய ஒரு பதிவு :
Sadgati (The Deliverance) - Hindi film, primarily made for TV, by Satyajit Ray, based on a short story of same name by Munshi Premchand.

1 comment:

  1. கதைத் தேர்வும் / மொழியாக்க நேர்த்தியும் மிகச் சிறப்பானது.

    நம்பிக்கைத் துரோகம் அவலமானது. துரோகிப்பவனை அது தூங்கவிடாது. அதுவே அவனுக்கு சத்துருவாகும் என்பதும் சரியானதே.

    மிக பெரிய இந்தியப் படைப்பாளியின் கதை இது என்பதிலும் அதனை... நீ மொழியாக்கம் செய்திருக்கிறாய் என்பதிலும் தனி சந்தோஷம் உண்டு.

    சிறப்பான வரவேற்க்கத்தக்க இந்தப் பணி தொடந்தும் தொடரணும். சந்தோஷம் -தாஜ்

    *

    ReplyDelete