Saturday, June 22, 2013

எந்த சமுதாயத்தில் சர்வாதிகாரி தோன்றுகிறான்?

M.Z. முஹம்மத் இஸ்மாயீல் எழுதிய 'ஷஹீத் செய்யித் குதுப்' எனும் நூலிலிருந்து (வெளியீடு : இலக்கியச் சோலை) நன்றியுடன் பதிவிடுகிறேன்,  'ஃபீழிலாலில் குர்ஆன்'  எனும் திருக்குர்ஆன் விளக்க உரையில் இவ்வாறு போராளி செய்யித் குதுப் அவர்கள் சொல்லியிருப்பதாக ஆசிரியர் சொல்கிறார்.உலகெங்கும் ஏகாதிபத்தியத்திற்கெதிராக எண்ணங்களாலும் எழுத்துக்களாலும் போராடும் போராளிகளுக்கு இச்சிறுநூல் சமர்ப்பணம் செய்யப்பட்டிருக்கிறது. 'அப்பாடா, நமக்கல்ல’ என்று நீங்கள் ஆறுதல் அடையலாம். 

அரபுநாட்டிலிருந்துகொண்டு இப்படியெல்லாம் பதிவிடக் கூடாதுதான். ஆனால் , ஷார்ஜா புத்தகக் கண்காட்சியில் வாங்கிய நூல் என்று சொல்லி தப்பித்துக் கொள்ளலாம்! - ஆபிதீன்

***
எந்த சமுதாயத்தில் சர்வாதிகாரி தோன்றுகிறான்?
 
எப்பொழுதுமே கொடுங்கோலர்களிடம் பொதுமக்களின் அப்பாவித்தனமும், தாழ்வு மனப்பான்மையும், கட்டுப்பாடும், கீழ்ப்படிதலும்தான் ஏமாறச் செய்கின்றன. தங்கள் முதுகுகளை அவர்கள் சவாரி செய்வதற்கேற்ப நீட்டிக்கொண்டு தங்கள் தலைகளை அவர்கள் மேலே ஏறுவதற்கேற்ப தாழ்த்திக்கொண்டும், மானம் மரியாதை போன்ற தங்களின் உரிமைகளை அவர்கள் அடக்குமுறை செய்வதற்கும், கொடுங்கோன்மை புரிவதற்குமேற்ப விட்டுக் கொடுத்துக் கொண்டுமிருக்கும் தாழ்வு மனப்பான்மை கொண்ட அப்பாவி மக்கள்தான் எப்போதுமே சர்வாதிகாரியின் சக்தியாகவும், பலமாகவும் இருந்து வருகிறார்கள். இல்லையென்றால் கொடுங்கோலர்கள் என்பவர்கள் உண்மையில் எந்த ஆற்றலும் வலிமையுமற்ற தனி மனிதர்கள்தான்.

பொதுமக்கள் இப்படிப்பட்ட அப்பாவித்தனங்களுக்கு ஒருபுறம் அச்சத்தாலும் மறுபுறம் ஏமாற்றப்படுவதாலுமே பலியாகின்றார்கள்.

இந்த அச்சம் அவர்களின் கற்பனையினால் விளைவதே ஆகும். உண்மையில் கொடுங்கோலன் பல்லாயிரக்கணக்கான மக்களைவிட எந்த விதத்திலும் மேலதிகமான ஆற்றலில்லாத ஒரு தனி மனிதன்தான்!

மனிதத்துவம், சுதந்திரம், மானம், மரியாதை ஆகியவற்றில் யாரும், யாருக்கும் தாழ்ந்தவரில்லை! ஒவ்வொரு மனிதனும் ஆற்றலிலும், வலிமையிலும் கொடுங்கோலர்களுக்குக் கொஞ்சமும் சளைத்தவர்களில்லை. ஆயினும் அவர்கள் மக்களைத் தங்களுக்கு அவர்களைவிட ஏதோ ஒரு ஆற்றல் இருப்பதாக நம்ப வைத்து ஏமாற்றிக்கொண்டிருப்பார்கள். தன்  சுயமரியாதையை இழக்கத் துணியாத ஒரு சமுதாயத்தில் ஒரு தனிமனிதன் அடக்குமுறை செய்துவிட முடியாது!

நேர்மையும் ஒழுக்கமும் மிக்க சமுதாயத்தில் ஒருக்காலும் தனிமனிதன் ஒருவன் கொடுங்கோன்மை புரிந்துவிட முடியாது! தனதிறைவனைப் பற்றிய ஞானமும் அவன் மீதுள்ள நம்பிக்கையும் மிகுந்து, தனக்கு லாபமோ, நட்டமோ, நன்மையோ, தீமையோ செய்துவிட முடியாத அவன் படைப்புக்களில் ஒருவனுக்கு தலல குனிய மறுத்து வாழும் சமுதாயத்தில் தனிமனிதன் ஒருவன் என்றுமே ஆதிக்கம் செலுத்திவிட முடியாது.

இறைநம்பிக்கையும், சுயமரியாதையும், பாதுகாப்புணர்வும் கொண்ட சமுதாயமாகவும், அற்பமான ஒருவன் தங்களை எதுவும் செய்துவிட முடியாது. ஒரு கொசு அவனிடமிருந்து ஒன்றைப் பறித்துச் சென்றால் கூட அதனிடமிருந்து அதை அவனால் பறித்துவிட முடியாது; என்று புரிந்து சமுதாயமாகவும் இருந்தால் ஒருக்காலும் எந்த சமுதாயத்திலும் சர்வாதிகாரி தோன்ற முடியாது.

***

நன்றி : M.Z. முஹம்மத் இஸ்மாயீல், இலக்கியச் சோலை

No comments:

Post a Comment