Sunday, May 19, 2013

சுந்தர ராமசாமியின் 'மந்த்ரம்'


மந்த்ரம் 
சுந்தர ராமசாமி


ட்யூப்லைட் சுந்தராச்சி உபயம்
குத்துவிளக்கு கோமுட்டிச்செட்டி உபயம்
உண்டியல்பெட்டி தெ.கு.வே. உபயம்
பஞ்சதிரி விளக்கு ஆண்டி நாடார் உபயம்
குண்டுச்சட்டி பால்பாயச உருளி த்ரிவிக்ரமன் நாயர் உபயம்
சூடன்தட்டு ரீஜென்று மகாராணி உபயம்
தகரடப்பா ஆறு நித்யானந்தா உபயம்
அலுமினியப் போணி வமு.சல.பெ.ம.
அரிகரபுத்திரன் செட்டியார் உபயம்
ஸ்க்ரு ஆணி நட்டு பட்டு அம்மாள் உபயம்
தீபத்தட்டு பெரியன் தாத்தாச்சாரி உபயம்
சின்னத்தட்டு ஒரு டஜன்
வைரங்குளம் மிட்டாதார் உபயம்

வைரங்குளம் மிட்டாதார்
    அவர் அப்பா உபயம்
அவர் அப்பா
    அவர் அப்பா உபயம்
அவர் அப்பா
    அவர் அம்மா உபயம்
அவர் அம்மா
    அவர் அப்பா உபயம்
அவர் அப்பா
அவர் அம்மா
அவர் அம்மா
அவர் அப்பா

நீ
நான்
அவள்
இவன்
அவன்
பூனை
புண்
பூ
புழு
பூச்சி
குண்டூசி
குத்தூசி
கடப்பாரை
லொட்டு லொடக்கு
எல்லாம்
ஸ்வாமி
உபயம்
ஸ்வாமி
சிற்பி
உபயம்

சிற்பி
அவர் அப்பா உபயம்
அவர் அப்பா
அவர் அப்பா உபயம்
அவர் அப்பா
அவர் அம்மா உபயம்

அவர் அப்பா அவர் அம்மா
அவர் அம்மா அவர் அப்பா
எல்லாரும் ஸ்வாமி உபயம்

ஸ்வாமி
நம்ம உபயம்
நாம
ஸ்வாமி உபயம்
நம்ம பேரு சாமிமேலே
சாமி பேரு நம்மமேலே.

**
இலக்கியவட்டம் செப்டம்பர் 1964


***
நன்றி : தாஜ்
***
மேலும் : கதவைத்திற காற்றுவரட்டும்...

1 comment:

  1. :) இந்தக் கவிதை தாஜ் உபயம்...

    ReplyDelete