Monday, April 1, 2013

மருத்துவ இளவரசர் இப்னு சீனா

மஞ்சக்கொல்லை மன்னர் ஹமீதுஜாஃபரின் தொகுப்பில்...

அருட்கொடையாளர் - 15

பள்ளிப் பருவம், குமுதம், கல்கண்டு என்று தொடங்கி கல்கி வரை எல்லா வாரப் பத்திரிக்கைகளில் வரும் சிறுகதை முதல் தொடர்கதை வரை அனைத்தையும் படித்து முடித்துவிடுவேன். அதிலும் சாண்டியல்னின் தொடர் என்றால் உயிர். இதல்லாமல் மு.வா, கி.வா.ஜ., வல்லிக்கண்ணன், ரா.கி. ரங்கராஜன் படைப்புக்களையும் பாக்கி வைப்பதில்லை. இதுமட்டுமல்ல ஹஸன் எழுதிய ‘மஹ்ஜபீன்’, ‘சிந்து நதி கரையினிலே’, முதல் சுதந்திரப் போராட்ட வீரர் ‘குஞ்சாலி மரைக்காயர்’ (ஆசிரியர் நினைவில்லை) ஆகியவற்றையும் விட்டுவைக்கவில்லை. இப்படி புத்தகப் பைத்தியமாக இருந்த காலத்தில் கிடைத்த செவி வழிச் செய்தி, இப்னு சீனா என்பவர் மிகப் பெரிய வைத்தியர். அவரிடம் மூலிகைகள் பேசுமாம், அவர் குணமாக்காத வியாதியே இல்லை என்றெல்லாம் கேள்விப்பட்டேன். அப்போதல்லாம் எல்லாவற்றையும் உள்வாங்கும் பருவம், அலசிப் பார்க்கும் திராணி கிடையாது. வேறு வார்த்தையில் சொன்னால் நான் வெகுளி.

ஹஜ்ரத் அவர்களிடம் மாணவனாக சேர்ந்தபிறகு, ஒரு நாள் பாடம் நடத்திக்கொண்டிருக்கும்போது சொன்னார்கள், ஒரு மருந்தை நாவின் நுனியில் வைத்த மாத்திரத்திலேயே அதன் தன்மைகளை சொல்லும் ஆற்றல் படைத்தவர் இப்னு சீனா, ஒரு முறை ஒரு மாத்திரையை இரண்டுமுறை சுவைத்துப் பார்த்துவிட்டு இதில் இருபத்தேழு வகை மூலிகைகள் இன்னென்ன விகிதத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. கடைசி இரண்டு எத்தனை விகிதம் என்ற சந்தேகம் வந்ததால் மீண்டும் சுவைத்துப் பார்த்து கண்டுபிடிக்க வேண்டியதாயிற்று என்றாராம்.

இப்படி கேள்விப்பட்டிருந்ததால் இந்த கட்டுரையை எழுதும் வரை இப்னு சீனா ஒரு தலைசிறந்த வைத்தியர் என்று மட்டுமே தெரியும்.  ஆனால் அவர் பல ஆற்றல் படைத்தவர் என்பது இப்போதுதான் தெரிய வந்தது. மருத்துவத்துறையில்  ஆற்றல் பெற்றிருந்த அதே வேலையில் தத்துவத்திலும் சிறந்தவராக விளங்கியிருக்கிறார். மேலும் கணிதத்திலும் இசையிலும் வானசாத்திரத்திலும் போதிய ஆய்வுகள் நடத்தியிருக்கிறார். என்றாலும் இன்றுவரை மருத்துவராகவே கருதப்படுகிறார். அத்தகைய ஆற்றல் படைத்த மருத்துவரை மேற்கத்திய உலகம் அறிந்து வைத்திருக்கிற அளவுக்கு நம் தமிழ் உலகம் அறிந்திருக்கிறதா என்பது கேள்விக்குறி. ஆனால் அவரால் மேற்கத்தியவர்கள் பெற்ற பயன்கள் எண்ணிலடங்கா. சோதனை நிறைந்த பாதையில் சளைக்காமல் சாதனை படைத்தவர்களில் இவரும் ஒருவர்.


மருத்துவ இளவரசர்                                       
இப்னு சீனா (980-1037)                         

அபு அலி அல் ஹுசைன் இன்பு அப்துல்லா இப்னு சீனா என்ற முழுப்பெயரை உடைய இவர் உலகம் முழுவதும் அறியப்படுவது Avicenna என்ற லத்தின் மொழிப் பெயர். இஸ்லாமிய உலகில் அறியப்படும் இப்னு சீனா இன்றைய உஸ்பெக்கிஸ்தான் தலைநகரான புக்கராவில்  Kharmaithen (The Land of the Sun) க்கு அருகிலுள்ள Afshana என்ற ஊரில் ஆகஸ்ட்  980 (சஃபர் 370)ல் பிறந்து ஈரானிலுள்ள ஹமதான் நகரில் கிபி.1037 ஜூனில் மரணமடைந்தார்.

இப்னு சீனாவைப் பற்றி கூறும்போது பல் வேறு விதமான கருத்துக்கள் தொனிக்கின்றன. அவர் பிறப்பையும் இறப்பையும் மாற்றமில்லாமல் கூறுபவர்கள் அவர் Brethren Purity (اخوان‌الصفا) என்ற பிரிவைச் சேர்ந்தவர் என்றும், வேறு சிலர் ஹனஃபி பிரிவை சேர்ந்தவர் என்றும், இன்னும் சிலர் ஷியா பிரிவை சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுகின்றனர். அவரது தந்தையைப் பற்றி தெளிவான செய்தி இல்லை, இவர் இரண்டாவது மகன் என்ற செய்தி உண்டு. அவர் துருக்கி அல்லது அரபி அல்லது பாரசீக வம்சம் என பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. ஆனால் அவரது தாயார் அஃப்ஷானா கிராமத்தைச் சேர்ந்தவர், சித்தாரா (star) என்ற பாரசீகப் பெயரை உடையவர் என்றும் எனவே அவர் பாரசீகர் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

வாழ்க்கைச் சுருக்கம்

கிபி. 900 த்தில் இஸ்லாமிய வெற்றிக்குப் பிறகு Transoxiania வும் கொரஸானும் சாமனித்தின் ஆளுமைக்கு உட்பட்டது. புக்கரா தலைநகராகவும் சமர்கந்து முக்கிய கலாச்சார நகராகவும் விளங்கின. பத்தாம் நூற்றாண்டின் மத்தியில் சாமனித் ஆட்சி வலுவிழக்கத் தொடங்கியது. அச்சமயத்தில் இப்னு சீனா பிறந்தார். அவர் பிறந்திலிருந்து மரணிக்கும் வரை வாழ்வின் பெரும்பகுதி நிலையற்ற அரசியல் சூழல்களினால் பாதிப்புக்குள்ளானது.

ஆரம்பக் கல்வியை தன் தந்தையிடம் கற்றார். விளையும் பயிர் முளையிலேயே தெரியுமல்லவா,  இப்னு சீனா சிறுவனாக இருக்கும்போதே மற்ற சிறுவர்களைக் காட்டிலும் வித்தியாசமானவராகத் திகழ்ந்தார். நூஹ் பின் மன்சூருடைய ஆட்சி காலத்தில் அவருடைய தந்தை அப்பகுதியின் ஆளுநராக இருந்தமையால் தினமும் மாலைப் பொழுது பல அறிஞர்கள் கூடுவது வழக்கமாக இருந்ததால் அவர் வீடு ஒரு கல்விச்சாலை போல் அமைந்திருந்தது. விளையாடும் பருவத்திலிருந்த  அறிவின் தேடல், அங்கு குழுமிய அறிஞர்களிடமிருந்து பல்வேறு அறிவுகள் பெறும் வாய்ப்பு அமைந்தது. இயற்கையிலேயே அபரிமிதமான நினைவாற்றல் கொண்டிருந்த இப்னு சீனா தனது பத்தாவது வயதில் திருக்குர்ஆனை மனனம் செய்ததோடு தான் படித்த அனைத்து அரபுப் பாடல்களையும் மனனம் செய்தார். பதிமூன்றாம் வயதில் மருத்துவம் படிக்கத் தொடங்கியவர் பதினாறாம் வயதில் அதில் நிபுணத்துவம் பெற்று வைத்தியம் செய்யத் தொடங்கினார்.

சிறுவனாக இருந்த காலத்தில்  அவரது தந்தையும் சகோதரரும் ஆன்மா அதன் ஆற்றல் பற்றியும், தத்துவம், இந்திய கணிதம் பற்றியும் விவாதிப்பதை தொடர்ந்து கவனித்து வந்ததாகவும்,  பின்பு தந்தையின் உதவியால் ஒரு வணிகரிடமிருந்து (greengrocer) இந்திய எண் கணிதத்தையும் (arithmetic), இஸ்மாயில் அல் ஜாஹித் என்ற அறிஞரிடம் ஹனஃபி சட்டங்களையும் (ஃபிக்ஹ்) பயின்றதாகவும், அக்காலத்தில் வாழ்ந்த சில அறிஞர்களிடம் தர்க்கம், றைமெய்இயல் (metaphysics) ஆகியவற்றை கற்றதாகவும், சில நெருக்கடியான சூழலில் உதவி பெற்றதைத் தவிர பெரும்பாலும் தன் சுய ஆற்றலால் பல்வேறு அறிவுகளைப் பெற்றதாகவும் தன்  வாழ்க்கைக் குறிப்பில் குறிப்பிடுகிறார் என சில ஆய்வாளர் குறிப்பிடுகின்றனர்.

ஆனால், ஒருமுறை புக்கராவுக்கு வந்திருந்த Natali என்ற தத்துவஇயல் அறிஞரை தம் இல்லத்திற்கு அழைத்து வந்து தன் மகனுக்கு தத்துவஇயல் கற்கவைத்ததார் என்றும்,  பாடம் தொடங்கிய சில நாட்களிலேயே இவருடைய ஆறிவாற்றலைக் கண்ட Natali இப்னு சீனாவை கல்வியைத் தவிர வேறு எவற்றிலும் ஈடுபடுத்தவேண்டாம் என்று அவரது தந்தையிடம் ஆலோசனை வழங்கியதாகவும், சிறிதளவே ஆசிரியரிடம் தத்துவமும், கூடவே தர்க்கமும் கற்றபின் தாலமி, ஈகுலிட், அரிஸ்டாட்டில் ஆகியோரின் தத்துவங்களை ஆசிரியர் உதவி இல்லாமல் கற்றதாகவும், Natali புக்கராவை விட்டு குர்கன்ஞ் சென்றபிறகு இயற்கை அறிவியலும் மெட்டஃபிசிக்ஸும் தானாகவே கற்றதாகவும் 'AVICENNA - his life and  works' என்ற புத்தகத்தில் Soheil M Afnan குறிப்பிடுகிறார்.

தர்க்கம், இறைமெய்இயல் (metaphysics) இவைகளைப் பற்றி கற்கும்காலை அரிஸ்டாட்டிலின் இறைமெய்இயலை (metaphysics) புரிவதில் பெரும் குழப்பம் இருந்தது. சுருங்கச் சொன்னால் அல் ஃபராபியின் விளக்கஉரை கிடைத்தபின்பே அது புரியத் தொடங்கியது. தத்துவஇயலை மேலும் கற்க தொடங்கியபோது இறைமெய்இயலில் ஏற்பட்ட குழப்பமே இங்கும் நீடித்தது. அவருடை குழப்பத்தைத் தீர்த்துவைக்கக்கூடியவர் எவருமில்லை. எனவே  குழப்பமான தருணங்களில் கையிலெடுத்துள்ள நூற்களை வைத்துவிட்டு ஒலு செய்து பின் மஸ்ஜிதுக்குச் சென்று தனது குழப்பத்திற்கு தீர்வு கிடைக்கும் வரை தொழுதுக்கொண்டிருப்பார். இரவு வெகு நேரம் வரை படித்துவிட்டு அதே சிந்தனையில் உறங்கிவிடுவதும் வாடிக்கை. புரியாதவற்றிற்கு கனவுகள் மூலம் தீர்வு கிடைத்ததுண்டு. "அரிஸ்டாட்டிலின் இறைமெய்இயலை நாற்பது முறை வாசித்து அதன் வார்த்தைகள் நினைவில் நின்றாலும் சரியான பொருள் விளங்காமலிருந்தபோது ஒரு புத்தகக் கடையிலிருந்து மூன்று திர்ஹம் கொடுத்து  வாங்கிவந்த அல்ஃபராபியின் புத்தகம் விளக்கம் கொடுத்தது" என்கிறார்.

16ம் வயதில் மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு தன் சுய முயற்சியால் பல்வேறு வகையான மருத்துவமுறையைக் கண்டுபிடித்தார். 18ம் வயதில் முழுப் பயிற்சிப் பெற்ற மருத்துவராக பரிணமித்தார். மாறுபட்ட அணுகுமுறையால் பல வியாதிகளை குணப்படுத்தினார். “மருத்துவத்தில் முழு பயிற்சி ஏற்பட்டபின் நான் நல்ல மருத்துவனானேன். பெரும்பாலோருக்கு இலவசமாக சிகிச்சை செய்தேன், எனது புகழ் அரண்மனைவரை சென்றது." பல போராட்டங்களுக்கிடையே  ஆட்சியை தக்கவைத்துக்கொண்டிருந்த  சுல்தான் நூஹ் இப்னு மன்சூர் (997ல்) நோயுடன் போராடிக்கொண்டிருந்தார். பலரின் வைத்தியம் பலன் அளிக்க மறுத்தது. இறுதியாக இப்னு சீனாவின் சிகிச்சை பலனளித்தது. அதன் பயன் அரண்மனை நூலகம் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. இது அவருக்கு பெரிதும் உதவியது. அங்கு கிடைத்த அரிய நூல்கள் மேலும் தன் அறிவை வளர்த்துக்கொள்ளும் பெரும் வாய்ப்பாக அமைந்தது.

21ம் வயதில் முதன்முறையாக ’மஜுமு’(Compendium) என்ற நூலை எழுதினார், பின் அயலத்தாரின் வேண்டுகோளுக்கிணங்க இருபது தொகுதிகள் கொண்ட ‘அல் ஹாஸில் வல் மஹ்சூல் (the Importance and the Substance) என்ற நூலையும் நன்னெறிகளைப் பற்றி ‘அல் பி(B)ற் வல் இதம்' (Good work and Evil) என்ற நூலையும் எழுதினார். ஆனால் அந்நூல்களின் மூலப்பிரதியையே சக அறிஞர்களிடம் அளித்துவிட்டதால் அவை மறைந்துவிட்டது என்கின்றனர்.


22 வயதாகும்போது  தந்தையின் மரணத்தால் ஏற்பட்ட பேரிழப்பு இப்னு சீனாவின் வாழ்க்கைப் போக்கையே மாற்றியது. சுயமாக சம்பாதிக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். எனவே தந்தை செய்த பணியை இவர் தொடர்ந்ததோடு மருத்துவப் பணியும் செய்துவந்தார். துருக்கியர்கள் புக்கராவைக் கைப்பற்றி சமனித் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்தனர். மஹ்மூது கஜினி ஆட்சிபொறுப்பில் அமர்ந்தபின் இப்னு சீனாவின் நிலமை இன்னும் மோசமாக ஆகியது.  ஆட்சியருக்கும் இவருக்கும் இடையே ஏற்பட்ட பனிப்போரினால் புக்கராவை விட்டு நீங்கி கொரஸான் பகுதியில் பல்வேறு நகர்களில் சுற்றித் திரிந்தார். சென்ற நகர்களிலெல்லாம் மருத்துவராகவும், ஆசிரியராகவும், வாழ்க்கை நடத்தினார்.  ஒவ்வொரு நாள் மாலையிலும் தன் மாணவர்களுடன் தத்துவம் மற்றும் அறிவியல் பற்றி விவாதங்கள் நடத்துவார். 1012ல் குவாரிஜம் அருகிலுள்ள குர்கான் நகரில் சட்ட நிபுணராகப் பணியாற்றிக்கொண்டிருந்தபோது  ஜுஜானி (Juzjani) என்பவர் மாணவராக சேர்ந்தார். அது குரு சீடர் உறவாக பரிணமித்து இறுதி வரை அவருடனேயே இருந்தார். ஜுஜானி வெறும் மாணவராக மட்டுமில்லாமல்  இப்னு சீனாவின் வாழ்க்கை சரிதையையும் (autobiography) எழுதினார்.

கிபி. 925 முதல் ராய் (தற்போது டெஹ்ரானில் ஒரு பகுதி) யைத் தலைநகராகக்கொண்டு புயீத் வம்சத்தினர் ஆட்சி புரிந்து வந்தனர்.  அது ஒரு தலைசிறந்த இஸ்லாமிய நகராக விளங்கியது. அங்கு ஒரு மிகப் பெரிய நூலகம் ஒன்று இருந்தது, அங்கு ஆட்சிபுரிந்த ஃபக்கீர் அல் தௌலா அறிஞர்களை கண்ணியப்படுத்திவந்தார்.   1012/1013ல் ராய் வந்தபோது சுல்தான் இறந்து விட்டார். பட்டத்துக்கு வரவேண்டிய மகன் மஜித் அல் தௌலா சிறுவனாக இருந்ததால் அவர் மனைவி செய்யிதா ஆட்சியைப் பிடித்துக்கொண்டார். இப்னு சீனாவால் அங்கு ஓரிரு வருடமே இருக்க முடிந்தது. மஜித் அல் தௌலாவின் சகோதரர் ஷம்ஸ் அல் தௌலாவின் ஆக்கிரமிப்பால் ராயை விட்டு நீங்கி ஹமதான் சென்றார். அங்கு ஷம்ஸ் அல் தௌலாவுக்கு ஏற்பட்டிருந்த குடல் நோயை(Colic) குணப்படுத்தியபின் அரசவை மருத்துவராகவும் பின்பு அமைச்சராகவும் பணியாற்றினார்.  1021ல் ஷம்ஸ் அல் தௌலாவின் மறைவுக்குப் பின் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தின் விளைவாக இஸ்ஃபஹான் சென்றார் அங்கு ஆலா அல் தௌலாவின் அரசவையில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது அவருக்கு குடல் நோய்(Colic) கடுமையாகத் தாக்கியது. தனக்குத் தானாக வைத்தியம் செய்யத் தொடங்கியதாகவும் ஒரு நாள் எட்டு முறை மருந்து உட்கொண்டதாகவும் அதனால் சிறு குடல்  பாதிக்கப்பட்டதாகவும் இருந்தாலும் தொடர்ந்து தனக்குத் தானே சிகிட்சை செய்து வந்ததாகவும் ஒரு நாள் ஒரு பங்கு கூடுதலாக சிவரிவிதை (Celery seed)யில் செய்யப்பட்ட மருந்தை இரு முறை உட்கொண்டதாகவும், ஆனால் சக வைத்தியர் ஐந்து பங்கு மருந்து கொடுத்ததாகவும் இது மேலும் சீர்கேடு செய்தது என்று ஜுஜானி கூறுகிறார். 

இருந்தாலும் இவர் எடுத்துக்கொண்ட சுய வைத்தியம் ஓரளவு பலனளித்தாலும் மிகவும் பலவீனமானார். சிறிது சுகம் கிடைத்தபின் மீண்டும் அரசவைக்குச் செல்லத் தொடங்கினார்.  பூரண சுகம் கிடைப்பதற்கு முன்பே அலா அல் தௌலாவின் நிர்பந்தத்தால் அவருடன்  ஹமதான் படை எடுப்பில் கலந்துக்கொண்டபோது மீண்டும் நோய் தாக்கியது. நிற்பதற்குக்கூட சக்தியற்ற நிலைக்குத் தள்ளப்பட்டார். கடினமான நிலையிலேயே ஹமதான் அடைந்தார்.  தன் நிலையை உணர்ந்துக்கொண்ட இப்னு சீனா சிகிட்சைக்கான முயற்சி எதுவும் எடுத்துக்கொள்ளவில்லை. நண்பர்களின் வேண்டுகோளுக்கு செவிசாய்க்கவில்லை தன்னிடமிருந்த செல்வங்களை ஏழைகளுக்கு கொடுத்தார், தனது அடிமைகளுக்கு சுதந்திரம் கொடுத்தார், மரணம் வரை குர்ஆன் ஓதுவதில் கவனத்தை செலுத்தினார். கிபி. 1037 ஜூன் (ஹிஜ்ரி 428 ரமலான்) தனது 58 ம் வயதில் மரணத்தைத் தழுவினார். (ஹமதான் செல்லும் வழியில் மரணமடைந்ததாகவும் ஹம்தானுக்கு வெளியே அடக்கம் செய்யப்பட்டதாகவும் சிலர் தெரிவிக்கின்றனர்)

(தொடரும்)
***
சில முக்கிய தகவல்:

•    980: Avicenna is born in Afschana in the today's Usbekistan
•    981-989: Ibn Sinas family pulls after Bukhara in the today's Usbekistan
•    990: With 10 years it knows the Koran by heart
•    990-996: Ibn Sina is informed by different teachers and begins to study medicine
•    997: It becomes the body physician of Nuh Ibn Mansur
•    1002: Ibn Sina loses his father Abdullah
•    1004: The samanidische dynasty dies out Ibn Sina is unemployed
•    1005-1024: Avicenna serves different princes and begins its most famous works "the canon "and "the healing "
•    1025-1036: Ibn Sina works as a body physician of the ruler of Isfahan
•    1037: The large physician dies in Hamadan at the age of 57 years at the Ruhr
•    12. Jhdt: Gerhard of Cremona translates the canon of the medicine into latin - thus he applies to in 17. Jhdt. as the most important text book of the medicine
•    1470: In the entire evening country there is 15 - 30 latin expenditures of the canon
•    1490: A part of the aluminium-Shifa appears in Pavia
•    1493: In Neapel a Hebrew version of the canon appears
•    1493, 1495, 1546: In Venice three latin versions of the Metaphysica are printed
•    1593: As one of the first Arab works the canon of the medicine in Rome is printed
•    1650: The canon is used for the last time in the universities by luffing and Montpellier

Sources:

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE
http://idrees.lk/?p=883
http://kalvianjal.blogspot.com/2013/01/blog-post_5254.html
http://en.wikipedia.org/wiki/Avicenna
http://www.iep.utm.edu/avicenna/
http://www-groups.dcs.st-and.ac.uk/history/Biographies/Avicenna.html
http://ddc.aub.edu.lb/projects/saab/avicenna/contents-eng.html     (Canon of Medicine complete) 1953 edition
http://books.google.ae/books?id=B8k3fsvGRyEC&printsec=frontcover&dq=biography+of+ibn+sina&hl=en&sa=X&ei=VbkfUe-zIoaK4ASj54DYCw&ved=0CDQQ6AEwAQ#v=onepage&q=biography%20of%20ibn%20sina&f=false
http://www.iranicaonline.org/articles/avicenna-index
http://en.economypoint.org/a/avicenna.html      
http://sharif.edu/~hatef/files/abu%20ali%20sina%2022.pdf
https://www.princeton.edu/~achaney/tmve/wiki100k/docs/The_Book_of_Healing.html
http://en.wikipedia.org/wiki/The_Book_of_Healing
http://www.ontology.co/avicenna.htm
http://www.muslimphilosophy.com/sina/art/ibn%20Sina-REP.htm#is6
***

நன்றி : ஹமீது ஜாஃபர் ( http://hameedjaffer.blogspot.com/ ) | E-Mail : manjaijaffer@gmail.com

3 comments:

  1. ரா.கி.ரங்கராஜனின் கதை போல் விறுவிறுப்பாக சென்றது சட்டென முடிந்து விட்டதே இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதியிருக்கலாமே என தோனியது. நன்றி நானா!

    ReplyDelete
  2. அமீன்பாய், இன்னும் இரண்டு பகுதிகள் உண்டு. விரைவில் வரும், இன்ஷாஅல்லாஹ்

    ReplyDelete
  3. // மருத்துவ இளவரசர் இப்னு சீனா (980-1037) //
    குறித்து நான் கூட
    பழைய இஸ்லாமிய இதழ்களில்
    வாசித்து மலைத்ததாக ஞாபகம்.

    மிக விரிவான தளத்தில்
    மருத்துவ இளவரசர் இப்னு சீனாவினைப் பற்றி
    ஹமீதுஜாஃபர் நாநா சிறப்பாக எழுதியுள்ளார்.
    நாநாவுக்கு என் வாழ்த்தும் சந்தோஷமும்.





    ReplyDelete