Tuesday, January 8, 2013

ஓஷோ, துணிவு என்பது என்ன?

'துணிவு' என்னும் சொல்லை நான் பயன்படுத்தும்போது படைவீரனின் துணிவை குறிப்பதில்லை. அது துணிவல்ல, சுத்த மடத்தனம். அது வெறும் மூர்க்கம்; துணிவல்ல. அது வெளியில் இருந்து திணிக்கப்பட்டதே. அவன் மந்தமாகுமாறு அவனை நீங்கள் பயிற்ற வேண்டி உள்ளது. அது புத்தியின்மை; புத்தி அல்ல. எனவேதான் படைவீரர்கள் மடையர்களாக இருக்கிறார்கள். அதிக பதக்கங்கள் பெறப்பெற அதிக மடையர்களாக அவர்கள் ஆகி இருக்கிறார்கள் என நீங்கள் உறுதியாக அறிய முடியும். அவர்கள் தோளில் இருக்கும் விருதுகளை எண்ணியே அவர்கள் எத்தனை முட்டாள்கள் என நீங்கள் அறியலாம்.

படையின் மொத்த வேலையுமே புத்திசாலித்தனத்தை நாசமாக்குவதுதான். ஏனெனில் புத்தியுள்ள மனிதனால் கொல்ல முடியாது. காரணமே இல்லாமல் ஒருவரைக் கொல்ல வேண்டி வரும்போது புத்திசாலி 1001 கேள்விகளைக் கேட்பான்.

ஒரு இந்தியன் ஒரு பாகிஸ்தானியை கொல்லுகிறான். அவனை அதற்கு முன் சந்தித்ததே இல்லை. அவனை அதற்கு முன் பார்த்ததே இல்லை. அவனுடன் அவனுக்கு எந்த பகைமையும் இல்லை. அவ்வாறே ஒரு பாகிஸ்தானியும் இந்தியனைக் கொல்கிறான். எந்தக் காரணமும் இல்லாமலேயே.. அவனுக்கு எந்த தீங்கும் செய்யாதவனைப் போய் கொல்கிறான்...

கொஞ்சமாவது அறிவிருந்தால் அவர்களால் அதை செய்ய முடியுமா? தன் மனைவி தனக்காக வீட்டில் காத்துக்கொண்டிருப்பது போலவே அவன் மனைவி அவனுக்காக அவன் வீட்டில் காத்துக் கொண்டிருப்பாள் என்பதையும், தன் குழந்தைகள் தன்னை எதிர்பார்த்திருப்பார்கள் என்பது போலவே அவன் குழந்தைகளும் அவனை எதிர்பார்த்திருப்பார்கள் என்பதையும் தன் வயதான தாய்தந்தையர் தன்னைச் சார்ந்திருப்பது போலவே அவனுடைய தாய் தந்தையர் அவனைச் சார்ந்திருக்கிறார்கள் என்பதையும் எண்ணிப் பார்த்தால் எந்த இந்தியனோ பாகிஸ்தானியோ அதை செய்ய முடியுமா? கொல்லவோ கொல்லப்படவோ செய்கிற இந்த மடமையை செய்ய முடியுமா?

படைவீரர்கள் நுண்ணறிவுள்ளவர்களாயிருக்க அனுமதிக்கப்பட்டால் பூமியிலிருந்து போர்கள் மறைந்து விடும்.

- ஓஷோ -  'ஸென்னுடன் நடந்து ஸென்னுடன் அமர்ந்து' நூலிலிருந்து (தமிழாக்கம் : சிங்கராயர்)

***

குறிப்பு : துணிவு பற்றி விரிவாக ஓஷோ சொல்வதை பிறகு தொடர்கிறேன். உஷார், அரபியிடமிருந்து ·போன் வருகிறது...! என்ன, ஓஷோ ஜோக் உடனே வேண்டுமா? ஒரேயொரு வெஜிடேரியன் ஜோக்தான் கைவசம் இருக்கிறது, பரவாயில்லையா?

'நுண்ணறிவுள்ள' சிறுவன் (நதீம்?)  தன் நண்பனிடம் சொல்லிக்கொண்டிருந்தானாம் : 'பெற்றோர்கள் இவ்வளவு தொல்லையானவர்கள் என்பதை நான் தெரிந்துகொள்ள முடிந்திருந்தால், ஒரு போதும் அவர்களைப் பெற்றிருந்திருக்க மாட்டேன்!'

**

நன்றி : கவிதா பப்ளிகேஷன்

No comments:

Post a Comment