Tuesday, November 13, 2012

டால்ஸ்டாய் இருக்காரா ? - சென்ஷி


காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட ’என் பெயர் சிவப்பு’ நாவலின் [ஓரான் பாமுக்-ன் My Name Is Red (Benim Adım Kırmızı)] மொழிபெயர்ப்பை வாங்கி அனுப்புகிறேன் என்று சொன்ன நண்பர் தாஜ் , பயங்கரமான ஃபேஸ்புக் போராளியாக இப்போது மாறிவிட்டதால் நாமாவது ஷார்ஜா புத்தகக்கண்காட்சிக்கு போகலாம் என்று தோன்றியது. அஸ்மாவுக்கும் உம்மாவுக்கும் மாதச் செலவுக்கு அனுப்பியது போக பாக்கெட்டில் இருந்த 13 திர்ஹத்தின் உறுத்தல் வேறு தாங்க இயலவில்லையே... ஆனால் , அங்கே போனால்.....

கூகிள்+-ல் தம்பி சென்ஷி நேற்று பதிவிட்டதை இங்கே மீள்பதிவு செய்கிறேன். அவர் எழுதியிருப்பதில்,  ‘அசல் இலக்கியவாதிகளாக’ என்னையும் மஜீதையும் குறிப்பிட்டதைத் தவிர மற்றதெல்லாம் உண்மை. இனி, சென்ஷியைப் படியுங்கள். - ஆபிதீன்

***


ஷார்ஜாவில் புத்தகக் கண்காட்சிக்கு போன கதை

சென்ஷி

புத்தகத் திருவிழா வருடா வருடம் ஷார்ஜாவுக்கு வந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் என்னை கொண்டு போகத்தான் ஆளில்லை என்ற குறை போன வருடம் வரை எனக்கு இருந்திருக்கும் போல.  அடுத்த வருடம் இந்த குறையிருந்திடக்கூடாதென அசல்/அமீரக/இலக்கியவாதிகளான ”ஹாரிபிள் ஹஜரத் புகழ்” மஜீத் மற்றும் சாதிக்குடன் எழுத்தாளர் ஆபிதின் அண்ணனும் என்னைக் கூட்டிச் செல்ல வந்திருந்தார்.

காலச்சுவடு பதிப்பகம் இம்முறை ஷார்ஜா புத்தகக்கண்காட்சியில் ஸ்டால் போடுகிறார்களாமே! உனக்குத் தெரியுமா? என்று அவர் தொலைபேசியில் கேட்டதில் இருந்துதான் இந்த நிகழ்வை ஆரம்பித்திருக்க வேண்டும்.   உங்களின் நல்ல நேரம் இது இரண்டாம் பத்தியாகிவிட்டது.

வருடா வருடம் ஷார்ஜாவில் புத்தகக் கண்காட்சி நடக்கிறது என்பதை செய்தித்தாளில் தெரிந்து கொள்கிற அளவு மாத்திரமே இலக்கிய அறிவு கொண்டவனிடம் காலச்சுவடு பதிப்பகத்தினர் இம்முறை ஷார்ஜா புத்தக கண்காட்சியில் கடை விரிக்கிறார்களாமே!? உனக்குத் தெரியுமா என்று கேட்டவரிடம் என்ன பதில் தந்துவிட முடியும்..!  தவிர  நான்கைந்து சிறந்த சிறுகதைகளை தட்டச்சிவிட்ட தைரியத்தில், இணைய இலக்கியவாதியெனும் சித்திரத்தில் பங்கும்/பரிமளித்தும் கொண்டிருக்கும் என்னிடம் புத்தகக் கண்காட்சியில் தமிழ்ப் புத்தகங்கள் என்றால் முதன்முறையாகவா? வருடா வருடம் தமிழ்ப்பதிப்பகத்தினர் புத்தகங்களை விற்கக் கொண்டுவருகிறார்களா? இம்முறை காலச்சுவடு அடியெடுத்தலில் அடுத்தடுத்து எல்லாப் பதிப்பகங்களுக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்குமா என்ற தீவிரத்துவமான கேள்விகள் அரித்துக் கொண்டிருந்தாலும் மனதை அமைதியாக்கி, ”வெள்ளிக்கிழமைதானே... ஆமாண்ணே.. ஒண்ணும் வேலை இல்லைண்ணே.. போயிடலாமுண்ணே.. மதியம் சாப்பிட்டப்புறம் கெளம்பிடலாமா.. சரிண்ணே” என்று வியாழன் மதியம் தொலைபேசியில் ஹா.ஹ. புகழ் மஜீத் அண்ணனிடம் சொல்லியாகிவிட்டது.

வெள்ளி...

கிளம்பிய பிறகு சரியாய்ப் பூட்டினோமா என்ற சந்தேகமெழுவதைப் போல, காலச்சுவடு நெசம்மாவே இங்க ஸ்டால் போடுறாங்களா? என்று ஆபிதீன் சந்தேகப் பிரகடணத்தைக் கொண்டு வர, எனக்குத் தெரிந்த ஒரே ஒரு உலகந்தெரிந்த உத்தமரான ஆசிப் அண்ணாச்சியிடம் கேட்டால் ஆச்சு என்ற யோசனை பரிசீலனைக்குட்படுத்தப்படாமலேயே மற்ற மூவரும் ஆமோதித்த தருணத்தில் அண்ணாச்சிக்கு தொலைபேசி உறுதி செய்து கொள்ளவியன்ற முயற்சி தோல்வியுற்றது. காரணம் அவருக்கு அதைப் பற்றி யாரும் ஒன்றும் கூறவில்லையாம். அண்ணாச்சிக்கே அழைப்பில்லாத இடத்தில நாம என்ன செய்ய என்று சிகரெட் புகையோடு வெடைத்தவனை காரில் தூக்கிப் போட்டு ஷார்ஜா புத்தகக் கண்காட்சிக்கு சென்றாயிற்று.

சாண் ஏறினால் முழம் சறுக்கும் என்பதில் சாண் அளவாவது ஏறிய சந்தோசம் கிடைக்கட்டுமே என்ற மகானின் வாக்குக் கிணங்க காலச்சுவடு இல்லாவிட்டால் ஷார்ஜா கூட்டத்தையாவது கண்டு வரலாமென்று உள்ளே நடைபோட்டோம்.  ஐந்து அரங்குகள். முதல் நான்கில் அரபி புத்தகங்களை மொய்த்தபடி சுமாரான கூட்டமிருக்க, ஐந்தாம் அரங்கான இந்திய வாயிலில் சூப்பர் கூட்டம். முன்னால் இரண்டடி கூட நகர விடாது, முன்னேயுள்ளோர் வழிவிடாது புத்தக அரங்கினை மொய்த்திருந்தனர். அரங்கின் முதல் கடை அமர்சித்ர கதா கதைப்புத்தகங்கள்.. பெரும்பாலும் மலையாளம், கொஞ்சம் ஆங்கிலமென்று இருந்த கூட்டத்தில் தஸ்தோவாஸ்கி இருக்காரா? காஃப்கா இருக்காரா என்றெல்லாம் குரல்கள் எழுந்து வந்தது. என் பங்கிற்கு டால்ஸ்டாய் இருக்காரா என்று கேட்டுவிட்டு நகர்ந்துவிட்டேன். புத்தகம் வாங்குபவர்களுக்குத்தானெ பதிலின் அவசியம் முக்கியம்.. ஐந்தாம் அரங்கின் மத்தியில் இருந்த கும்பல் இல்லாத நேஷனல் புக் டிரஸ்டின் உள்ளே நுழைய, காண்டெம்ப்ரரி ஆஃப் ஆர்ட் இன் இந்தியா புத்தகத்தை விருப்பமாய் ஆபிதின் அண்ணன் எடுத்து விலை விசாரிக்க, அங்கிருந்த மேற்பார்வையாளர் இவையெல்லாம் விற்பனைக்கில்லை.. பார்வைக்கு மாத்திரமே வைத்துள்ளோம். பார்த்துவிட்டு வைத்துவிடுங்கள் என்று கொஞ்சமும் அனுதாபமின்றி கூறினார். புத்தக விற்பனைக்கான கண்காட்சியில் விற்பனை செய்யப்படாது, புத்தகத்தையே கண்காட்சியாக வைத்திருக்கும் அவர்களின் பாங்கு வியப்பில் திக்குமுக்காட வைத்தது. ஒரு பெரும் நன்றியை உதிர்த்துவிட்டு தென்னிந்திய தேசியக்கடலை நோக்கி நகர்ந்தோம்.

காலச்சுவடு அரங்கு பார்வைக்குக் கிடைக்கவில்லையென்பது ஒரு புறம் இருக்கட்டும். அங்கு காணக் கிடைத்த தமிழ் பொக்கிஷங்கள் அனைத்தும் இரண்டு எழுத்தாளர்களின் எழுத்தாக மாத்திரமே இருந்தது. அதிலும் ஒருவர் ஐந்து புத்தகங்கள் எழுதியவராயும் இன்னொருவரின் ஒரு புத்தகமும் கிடைத்தது. சாவு வீட்டில் சொல்லிட்டுப் போகக்கூடாதென்ற சாங்கியமிருப்பது போல புத்தக கண்காட்சிக்கு வந்து எதையும் வாங்காமல் செல்லக்கூடாதென்ற சாங்கியமும் சேர்ந்து கொண்டது போல. மஜீத், இப்பி ஃபக்கீர் மற்றும் வேர்கள் மொழிபெயர்ப்பை எடுத்துக் கொண்டார். வேர்கள் மொழிபெயர்ப்பின் மூலமான ரூட்ஸ் தொலைக்காட்சித் தொடர் என்னிடம் இருப்பது நினைவுக்கு வந்து ஆபிதின் அண்ணனிடம் சொல்லி வைத்தேன். இன்றுவரை அந்தத் தொடரைப் பார்க்காமல் இருப்பதை மறைத்துவிட்டேன். எங்களின் வருகை நினைவுக்காக எடுக்கப்பட்ட நான்கைந்து புகைப்பட முன்நிற்றலுக்குப் பின் தமிழ் அரங்கை விட்டு நகர்ந்தோம்.

அன்றைய இரவு எட்டு முப்பது மணிக்கு நிகழவிருந்த அருந்ததி ராயின் உரையாடலைக் கேட்கவும் காணவும் அங்கிருந்த நாற்காலிகள் இந்தியப்பெண்களால் கைப்பற்றப்பட்டுக் கொண்டிருந்தன. கூட்டத்தின் பின்னால் நின்று கொண்டே அருந்ததிராயின் உரையாடலைக் கேட்கும் ஆர்வமில்லாததால் புத்தகக் கண்காட்சியை விட்டு வெளியேறினோம். இரவு உணவிற்காக சென்ற அப்பா ஹோட்டலும், அதன்பின்னான டீக்கடைக்கு முன்னால் நின்று ஆபிதின் அவர்களுடனான உரையாடலும் என்னுடைய அந்த நாளை முழுமையாக்கின.

***

நன்றி : சென்ஷி | E-Mail : me.senshe@gmail.com

தலைப்பு உதவி : ரா.கிரிதரன் 

***




No comments:

Post a Comment