Saturday, July 7, 2012

அரசியல் - மஜீதின் முதல் பார்வை

பள்ளிக்கொடத்துக்கு எப்பதான் போகப்போறனோன்னு மூனு வயசுல இருந்தே காத்துக் கெடந்தவனாக்கும் நான்.

சரியா அஞ்சு வயசானதுக்கப்புறமா ஒன்னாங்கிலாசுல அத்தா கூட்டிட்டுப்போய்ச் சேக்கும்போது, குண்டுவாத்தியார் என் வயசுல  9 நாள் கொறையுதுன்னு அடம்புடிச்சார்.

ஏற்கனவே நான்ஆர்வக்கோளாறால - அத்தா படிக்கும் குமுதம் ஆனந்தவிகடனப் பாத்து, பொறகு கடைகளோட போர்டுகளப்பாத்து - கத்துக்கிட்ட தமிழ் எழுத்துக்கள அவர்ட்ட சொன்னபொறகும் கூட, சோத்தாங்கையால வல்லாங்கைப் பக்கம் இருக்குற காதை உச்சந்தலை வழியா தொட்டுக்காட்டுன பொறகுதான், பொறந்தநாள அட்ஜஸ்ட் பண்ணி சேத்துக்கிட்டார்.

இடையில இந்த ரெண்டுவருசத்துல ஏதாவது அண்ணன்கூடவோ இல்ல அக்காகூடவோ - ட்ரஸ்பண்ணிகிட்டு, பவுடர்லாம் போட்டுக்கிட்டு -  எலிமெண்டரி ஸ்கூலுக்குப் போய் அவுக கிலாஸ்ல கடைசி வரிசைல அமைதியா உக்காந்துட்டு வந்ததும் உண்டு.

அப்பவே எனக்கு வெக்கேசன்லாம் இருந்துச்சு.  

ஆமாங்க, துரூ பஸ்ல ஏத்திவிட்டா 40 மைல்ல இருந்த சிவகங்கைக்கு தனியாவே  நன்னி (பாட்டி) வீட்டுக்குப் போய்ருவேன். கமர்ஷியல்னு ஒரு ப்ரைவேட் கம்பெனி பஸ்தான் அப்ப த்ரூபஸ் விட்ருந்துச்சு. அதுல ஓட்டுன டிரைவர்கள் (நாகு மற்றும் குண்டு நாயினா) ரெண்டுபேரும் எனக்கு நல்ல பழக்கம்.. 3 மணி நேரப்பயணம்.  பாதுகாப்பா இருக்கட்டும்னு மொத ஸீட்டுதான் எனக்கு எப்பவும்.

அவுக ரெண்ட்பேருமே என்னைய மாமான்னுதான்  கூப்டுவாங்க

==எழுத்துப்பிழையெல்லாம் இல்ல, அவுங்க என்னைய மாமான்னுதான் கூப்டுவாங்க. ஏன்னா நான் முசுலிம்ல்ல?  அவுக நாயக்கர்மாராம். ரெண்டு சாதிக்கும் அதான் உறவுமொறையாம், இன்னிக்கு வரைக்கும் ==

அங்கெ போனாலும் என்னங்கிறீங்க? ஆவரங்காட்டுல ஆதம்பள்ளிக்கு பக்கத்துல இருந்த நன்னிவீட்டுக்கு அடுத்தவீட்டுப் போஸ்ட்மேன் மகன் ரெண்டாப்பு மனோகரனோட கருவாட்டுப் பள்ளிக்கொடத்துக்கு போயும் உக்காந்துருக்கேன். அதுனால தமிழ் எழுத்துகள்ல நெறயத் தெரியுமாக்கும் எனக்கு.

அதுபோக,  மூக்குப்பொடி விளம்பரம் மூலம் எனக்கு 3 இங்கிலீஸ் எழுத்துகளும் தெரியும். அந்த T.A.S. ங்கிற 3 எழுத்துக்களத்தவிர எனக்கு இன்னம்ரெண்டு எழுத்துக்களுங்கூடதெரியும் அப்ப.

சிவகங்கை மதுரை ரூட்ல ஓடுன ஒரு பஸ்ல 3 இங்கிலிஸ் எழுத்து போட்ருக்கும்ஒருநாள்  எங்க நன்னிட்ட அத காமிச்சு அதுல என்ன எழுதிருக்குன்னு கேட்டேன்.

தெரியலயேடா, மொதல்ல இருக்குறதுஎம்மு”, கடசில இருக்குறது “டி”, நடுவுல இருக்குறது என்னன்னு தெரியலடான்னு சொல்லிருச்சு.  

அன்னிக்கு சாயந்தரமே  ரோட்டோரமா கூட வெளயாடிக்கிட்ருந்த இன்னொரு மொட்டக்குண்டிப் பயல்ட்ட (ஆமா ஒண்ணு நான், இன்னொன்னு அவன்) கேட்டேன்:  அப்பல்லாம் ஆவரங்காட்ல இருந்து அரமணைவாசல் வரைக்கும் அப்டியே நன்னிகூட போய்ட்டுவர்ற தைரியம் இயற்கையாவும், சுதந்திரம் நன்னிட்டயிருந்தும் எனக்கு கெடச்சிருந்துச்சு  

இது என்ன பஸ்டா?

அட்ச்சான் பாருங்க: M D T எஸ்ப்பிரஸ்

ஆக அன்னிக்கு குண்டுவாத்தியார்ட்ட எனக்கு இங்கிலிசும் தெரியும்னு சொல்லாததுல எனக்கு இப்பவும் வருத்தம்

இப்டில்லாம் ஆர்வக்கோளாறா இருந்ததுனால பள்ளிக்கொடத்துல சேந்த ரெண்டுமாசத்துலயே வேகவேகமா தமிழ் படிப்பேனாக்கும்.

ஒண்ணாப்பு சேந்த கொஞ்ச நாள்லயே எலக்சன் வந்துச்சுங்க. அதனாலயே ஒடனே அரசியலும் தெரிய ஆரம்பிச்சிருச்சு;

(கூட்டம் கூட்டமா லாரில பல கலர்ல கொடிகளப் புடிச்சுக்கிட்டுக் குய்யோமுறையோன்னு கத்திக்கிட்டுப் போறதுதான் எலக்சன்னு அப்ப நான் நெனச்சுக்கிட்டேன்.)

எனக்கு அரசியல் அரிச்சுவடி சொல்லிக்குடுத்தது ரெண்டு சொவர் வெளம்பரமும் ஒரு தட்டி வெளம்பரமும்தான்.

1.       ரகுமாக்கா வீட்டு சொவத்துல ஒரு நாலஞ்சு வரி; செவ்வகமா வெள்ளயடிச்சு அதுல நீலத்துனால எழுதிருந்தாக:

//  கூட்டணிப் புரட்டர்களை, குழப்ப வாதிகளை, கொள்கை அற்ற  கோமாளிகளை நாட்டுக்கு அடையாளம் காட்டிட காளைச் சின்னத்தில் முத்திரை இடுங்கள். நன்றி //  ## பக்கத்துல ரெண்டு மாடு படம் ##

ராஜாஜி-திமுக கூட்டணியை வெடக்கிறாகலாம் காங்கிரஸ்காரவுக – இது எனக்கே(!) ரொம்ப வருசத்துக்கப்புறந்தான் தெரிஞ்சுச்சு. படிக்கத்தெரியாதவுகளுக்கு?

2.       கொஞ்சம் தள்ளி சின்னமுத்து ராவுத்தர் அய்யா வீட்டுச் சொவத்துல, இதே மாதிரியே இன்னொன்னும் எழுதிருந்தாக

// காகிதப்பூ மணக்கிறதா காமராசரே? கானல் நீர் இனிக்கிறதா கருத்திருமனே? கற்கண்டு கசக்கிறதா கக்கனே? உங்கள் வாக்கு உதயசூரியனுக்கே. நன்றி //       ## கீழே உதயசூரியன் படம் ##

எனக்கு தமிழ் வேகமா படிக்கவரும்கிற சந்தோசத்துல இந்த ரெண்டு விளம்பரத்தையும் அடிக்கடி போய்ப் படிச்சுப்பாப்பேன். இல்லைன்னா இப்பவும் அதெல்லாம் ஞாபகத்துல இருக்குமா? சமயத்துல அந்த வழியா பக்கத்து கிராமங்களுக்கு நடந்தேபோற சிலபேர் எங்கிட்ட வந்து, உனக்கு படிக்கத்தெரியுமா தம்பி? எங்க, என்ன எழுதிருக்குன்னு சொல்லு பாப்போம்னு கேக்க, அவுகளுக்கும் படிச்சுக்காட்டுவேன். படிக்கத்தெரியாத அவுகளுக்கு இந்த அடுக்குமொழி தத்துவமெல்லாம் புரிஞ்சிருக்குமான்னு எனக்கு இப்பவரைக்கும் தெரியாதுங்க. அதனால என்ன?  ஓட்டுபோட்றதுக்கு தெரியும்ல அவுகளுக்கு?

3.       பஸ்ஸ்டாண்டுக்குப் பக்கத்துல நின்ன ஒரு பூவரச மரத்துல வட்டமா ஒரு தட்டி தொங்குச்சு (அது சைக்கிள் டயர்ல செய்றதுன்னு எனக்கு ரொம்ப காலத்துக்கு அப்பறந்தான் தெரியும்)

அதுல, ஒரு வயசானவரும் ஒரு நடுவயசுக்காரரும் கையால் வரஞ்ச படத்துல இருந்தாங்க. நடுவயசுக்காரர் வயசானவர்ட்ட கேப்பாரு, ரூபாய்க்கு மூனுபடி அரிசின்னு சொல்றிகளே, எப்படி போடுறதுன்னு; அதுக்கு வயசானவரு சொல்லுவாரு: ஆழாக்குதான் படின்னு சட்டம் கொண்டுட்டு வந்துருவோம்னு. எனக்கு ஒண்ணும் புரியல. அதனால விடுவேனா என்ன? அந்தப்பக்கம் போகும்போது அத்தாட்ட காட்டி இதுல இருக்குறது யாரு? இதுக்கு என்ன அர்த்தம்?னு ரெண்டு கேள்வியப் போட்டேன். இது அண்ணாவும் கருணாநிதியும்னு சொன்னார். என்ன அர்த்தம்னேன். போடா இது காங்கிரஸ்காரய்ங்க வச்சிருக்காய்ங்க, களவானிப்பயலுகன்னார். (திமுககாரர் பின்ன எப்டி சொல்லுவார்?)

நானும் விடலை, வீட்ல அம்மாட்ட போய்  ஆழாக்குன்னா என்னன்னு மீண்டும் விசாரணை; இதுதாண்டா ஆழாக்குன்னுச்சு அம்மா ஒரு வஸ்துவைக் காமிக்க, அய்ய, இது ‘ஒலக்கு’ல்லன்னு என சந்தேகத்தக் கேக்க, இதத்தான்டா அப்டி சொல்வாகன்னவுடனேயே எனக்கு புரிஞ்சுபோச்சு - அரசியல்.

(உலக்கு: பக்காப்படியின் எட்டில் ஒருபகுதி – திரவம்: +/- 200 மில்லி. திடம்: அரிசின்னா 187.5 கிராம். உத்தேசமா ஒண்ணரை கிலோ அரிசி ஒரு பக்காப்படி; பக்காப்படின்னா தஞ்சைமாவட்ட பகுதிகளில் அரை மரக்கா; செட்டிநாட்டுப்பகுதிகளில் ஒரு படின்னா கால் மரக்காதான். அதை சின்னப்படின்னு சொல்லுவாக. ஆனாலும் இந்த வித்தியாசம் எப்போதும் குழப்பவே குழப்பாது. ஏன்னா எப்ப எங்க பகுதிகள்ல யாரு ஒருபடின்னு சொன்னாலும், ஒடன்ன்ன்…னே ஒரு கேள்வி பொறந்துருமே - பெரியபடியா, சின்னப்படியான்னு)

இப்டி அரசியலை முளுசா கத்துக்கிட்ட கொஞ்ச நாளக்கி அப்பறம், பள்ளிக்கொடத்துல பயலுகள்லாம் பேசிக்கிட்டாய்ங்க பாருங்க,  எம்ஜியார் கட்சி செயிச்சுருச்சுன்னு, அப்ப நான் மேலும் தெளிவாய்ட்டேன் – அரசியல்ல.

அப்டியே இன்னும் ரெண்டு முக்கியத் தகவல்களும் சொன்னாய்ங்க.

அவையாவன:
1.       எம்ஜியாரு தோக்கவே மாட்டாரு.
2.       எம்ஜியாரு சாகவே மாட்டாரு.

இப்பத்தான் எனக்கு புல்லரிச்சுச்சு

ஏன்னா நான் அப்பத்தான் ஜிவாஜி கச்சில இருந்து எம்ஜியார் கச்சிக்கு மாறி இருந்தேன். கொஞ்ச நாளக்கி முன்னாலதான் நானும் என் தம்பியும் நன்னி வீட்டுக்கு காப்பருச்சை லீவுக்கு போயிருக்கும் போது ஒரு புது வெளயாட்டு கத்துக்கிட்டு வந்துருந்தோம். எங்கள விட கொஞ்சம் பெரியபய ஒருத்தனோட வெளயாண்டுக்கிட்டு இருக்கும்போது அவன் கத்துக்குடுத்த வெளயாட்டு அது. அதாவது நானும் என் தம்பியும் சண்டை போடனும்; அதுல நான் ஜிவாஜியாம். தம்பி எம்ஜியார். கடைசில நாந்தான் செயிக்கனுமாம். (காங்கிரஸ்காரப் பயபுள்ள போல்ருக்கு அது) செயிச்சு செயிச்சு வெளயாண்டு ஊருக்குத் திரும்பி வந்தபொறகு, வீட்ல அத்தாட்ட வெளாண்டு காமிச்சா, அவர் பாத்து சிரிச்சுட்டு, கடேசியா வெளயாட்டே தப்புன்னு சொல்லிட்டார்.

சண்டைனா எம்ஜியார்தான் செயிக்கனும்ட்டார். ஏன் அப்டி சொன்னார்னு அப்ப எனக்கு வெளங்கல.

(ரெண்டு காரணம்தான் இருக்கணும்.
1.        
  1. சண்டைனா எம்ஜியார் நெறய படத்துல நல்லா போட்ருக்கார், சிலம்பம்- கத்திச்சண்டை “நல்லா” கத்துக்கிட்டவர்னு லாஜிக் காரணமா இருக்கணும்
2.      
 2. அவர் திமுக காரர்ங்கிறதால இருக்கனும்)

அப்ப எனக்கு இதெல்லாம் தெரியாதுல்ல? அதனால, நான் பாத்தேன்; சரின்னு சொல்லிட்டு அன்னைக்கே அப்பவே நான் எம்ஜியாரா மாறிட்டேன்; தம்பிய ஜிவாஜியா மாத்திட்டேன்.

புல்லரிச்சது சரிதானே?

ஆனா ஒண்ணுங்க, அண்ணாவுக்கு அப்புறமா திமுகவுல யாரு முதலிடத்துக்கு வருவான்னு யாருக்குத் தெரிஞ்சுதோ இல்லயோ, எங்க ஊரு காங்கிரஸ்காரய்ங்களுக்கு, திமுக ஜெயிக்கிறதுக்கு முன்னாலயே, தெரிஞ்சிருச்சு பாத்தியல்ல? அதெ நெனச்சா எனக்கு இப்பவும் புல்லரிக்கும்.

அரசியல்ல எனது அடுத்தடுத்த பரிணாம வளர்ச்சிய, சொல்லணும்னு ஆசயாத்தான் இருக்கு, உங்கள மேக்கொண்டு படுத்தவேணாம்னு இத்தோட விட்டுற்ரேன். நல்லா இருங்க…..

***



நன்றி : மஜீத் (http://majeedblog.wordpress.com/ ) | E-Mail :  amjeed6167@yahoo.com

4 comments:

  1. மஜீது....
    பிரமாதம் போ!!!

    இந்த ழுதுனது பெரிதல்ல.
    எழுத்துல Childnes-யை கொண்டுவந்ததுதான் பெரிசு!

    ஏன் இத ரியாத்துல சொல்லல?
    போகட்டும்.
    உங்கலோட கிடந்த
    உங்க வீட்டு நாயப்பற்றி எழுது.
    கட்டாயம்.
    -தாஜ்

    ReplyDelete
  2. எப்போதும் இன்டலக்சுவலாக இருப்பது பெரும் சுமை. அறிந்தும் அறியாத இளமையின் கற்பனை படைக்கும் வினோத உலகங்கள் எத்தனை இனிமையானவை. இளைப்பாற இதமளிக்கும் உங்கள் அழியா கோலங்களை அவ்வப்போது எழுதுங்கள் மஜீத் பாய்.

    ReplyDelete
  3. போதும்டா சாமி, ஆளை இத்தோடு விட்டீங்களே..! அது சரி வாத்தியார் நாக்காலிலே குண்டூசி வக்கலே?

    ReplyDelete
  4. பார்வைகள் பலவிதம் !!!

    ReplyDelete