Wednesday, June 20, 2012

நமது ஜனாதிபதி தேர்தலும் விசேச கூத்துகளும்! - தாஜ்


பேசாமல் , நம்ம தாஜையே இந்திய ஜனாதிபதி ஆக்கிவிட்டாலென்ன?பகைநாடுகளுக்குச் சென்று கவிதை சொல்லியே பழிதீர்த்துவிடுவார்.  ஆபிதீன் . 

***

நமது ஜனாதிபதி தேர்தலும்
நடைபெறும் விசேச கூத்துகளும்!

-தாஜ்

மனித வாழ்க்கைக்கு அதிகமும்
தேவைகளில் ஒன்று நகைச்சுவை..
சகல முடங்கல்களுக்கும்
கைக்கண்ட நிவாரணி அது!

பொதுமக்களுக்கு
அதனை வழங்கி வந்த
கூத்து/ நாடகம்/ சினிமா/
இன்னும், இதர மீடியாக்களென்று
அத்தனையும் இன்றைக்கு
நகைச்சுவை வழங்குவதில் இருந்து
வற்றிக் கருவாடாக காய்ந்து கிடக்கிறது!

இன்றைப் பொழுதுக்கு
அந்த இடத்தை அதிர்ஷ்டவசமாய் நிரப்பி
நம்மை மகிழ்விக்க முனைகிறது
அரசியல் அரங்கில்
புதிய ஜனாதிபதி தேர்வெனும் ஆட்டம்!

இந்திய ஜனாதிபதி தேர்வின்
எழுதப்படாத மரபென்பது...
இந்திய ஆளுங்கட்சி/ எதிர்க்கட்சி மற்றும்
மாநில பெரிய கட்சித் தலைகள் எல்லாம்
கூடி ஆலோசனை செய்து
'பெத்த'ப் பெயர் கொண்ட/
தன்னிச்சையாக இயங்க முடியாத (கூடாத)
பூங்கிழத்தை
அப்பதவியில் அமர்த்துவதென்பதுதான்!

ஏன் அப்படி கூடிப் பேசி
இப்படியானதோர் தேர்வை செய்கிறார்களாம்?

ஜனாதிபதி என்பவர்...
எல்லோருக்கும் பொதுவான
நபராக இருக்க வேண்டும்..

யோசித்தால்...,
அது அதனால் மட்டுமல்ல.
எந்தக் கட்சி அவரை சந்தித்து
கோரிக்கைவைக்கிற போதும்
தட்டாமல், மறுக்காமல் அவர் தலையாட்ட வேண்டும்.
அவரே தலையாட்ட மறுக்கிற போதும்
அவர் தலை தானே கட்டாயம் ஆடவேண்டும்.

தவிர, முப்படைகளுக்கும்
தான் தலைவர் என்கிற கோதாவில்
ஜனாதிபதியானவர்
ராணுவத்தைக் கையில் எடுத்து கொண்டு
அரசியல்வாதிகளான தங்களின் பதவிகளுக்கு
உலைவைத்துவிடக் கூடாதென்கிற கவனம்
எல்லாவற்றையும்விட தேர்வு செய்யும்
அரசியல்வாதிகளுக்கு மிக முக்கியம்.

இந்த சிந்தையோடுதான்
ஜனாதிபதியாக நிறுத்தப்படுகிறவரை
தீர கூடிப்பேசி தேர்வு செய்யணும் என்கிறார்கள்.
அப்படியேதான் தேர்வு செய்யவும் செய்கிறார்கள்.
அவர்கள் ஒற்றுமையாய் கை கொள்ளும்
மரபின் மூல அர்த்தமே இதன் வழிப்பட்டதுதான்!

*
அதிமுக்கியமான இந்த மரபை விட்டும்
புதிய ஜனாதிபதிக்கான ஓர் நபரை...
அவசர அவசரமாக அறிவித்தார் ஜெயலலிதா!
அவரது பெயர் கூட...
முன் எப்பவும் அத்தனைக்கு
பிரபலமாக அறியப்படாத பெயர்தான்.

'சங்மா'வை
காட்டுவாசி (நாகரீகமாய்..., 'பழங்குடி') என்கிற
பெரும் அடையாளத்துடன்
ஓராண்டில் நூறாண்டு பேசும் சாதனைகளை
நிகழ்த்திக் காட்டியிருக்கும்
நம் முதல்வர் ஜெயலலிதா அறிவித்த போதே
நான் எழுதினேன்...,
'அம்மா யாரையும் கலக்காமல்
தன் இஷ்டத்திற்கு
புதிய இந்திய ஜனாதிபதியை அறிவிக்கிறார்!
எத்தனைக்கு கூட்டிப் பெருக்கினாலும்
இது சரியாக வரும் என்று
தோன்றவில்லையே' என்றிருந்தேன்.
அந்த அளவில்தான்
அவர் தேர்வு குறித்த நிலை
தடுமாற்றம் கொண்டிருக்கிறது. .

அம்மாவின் ஜனாதிபதி வேட்பாளரை
நேற்றுவரை
இந்தியக்கட்சிகளில் எதுவும்
பெரிதாக அக்கறை காட்டவில்லை.
அதுமட்டுமல்ல,
சங்மா சார்ந்திருக்கும்
தேசியவாத காங்கிரஸ் கட்சியும் கூட
அவரை ஆதரிப்பதாக பெரிதாக
குரல் கொடுக்கவில்லை.

சட்டசபைத் தேர்தலில் வென்ற பிறகு
ஜெயலலிதா ஈடுபாடு கொண்ட
அகில இந்திய அரசியல் செயல்பாடு இது.
இப்படி அது பல்லிளித்துப் போவதில்
ஜெயலலிதாவுக்கு
கவலை இருப்பதாக தெரியவில்லை.
தன்னால் ஆகுமான காரியமான
1006-ஜோடிகளுக்கான திருமணத்தில்
உடனடியாக அவர் முனைப்பாகிவிட்டார்.
இத்தனை ஜோடிகளுக்கு
திருமணம் செய்விப்பதென்பது
நினைத்ததை முடிக்கும் காரியத்திற்கான
பரிகாரமாகக் கூட இருக்கலாம்.

*
அங்கே...
மேற்குவங்கத்தில் மம்தா அம்மாவும் இப்படித்தான்
புதிய ஜனாதிபதிக்கான தனது தேர்வாக
இன்றைய இந்தியப் பிரதமரான
மன்மோகன் சிங்கை அறிவித்தார்.
அப்புறம் அவருக்கு நினைவிற்கு வந்ததோ என்னவோ
நாம் அறிவித்த வேட்பாளர் மன்மோகன் சிங்
பிரதமராக இருக்கிறார் என்று!
உடனே, முன்னால் ஜனாதிபதி
டாக்டர் அப்துல் கலாமை
புதிய ஜனாதிபதியாக அறிவிக்கிறேன் என்கிறார்.
உத்திரப் பிரதேச ஆளும் கட்சித் தலைவரான
முலாயம் சிங்கும் ஆதரவும் உண்டு என்கிறார்.
தடலடியான இந்த அறிவிப்பு வந்த நாழிக்கு
கலாமும் ஓ.கே.சொல்லிவிட்டார்.

கலாம் ஓ.கே. சொன்ன மாலையே
முலாயம் சொல்கிறார்...
'நான் மம்தாவுடன் இல்லை' என்று!
மறுநாளைக்கும் மறுநாள்...
கலாமும் 'இந்தப் பழம் புளிக்கும்' என்றுவிட்டார்!
மம்தா இப்போதைக்கு
அடுத்து என்ன முடிவெடுப்பார் என்று
யாராலும் சொல்ல முடியாது.
தன்னையே அவர் ஜனாதிபதி வேட்பாளராக
அறிவித்துக் கொண்டாலும் ஆச்சரியமில்லை.

இத்தனைக் கூத்துகளுக்கும் இடையில்
இந்தியாவின் ஆளும் கட்சியும்/எதிர்க்கட்சியும்
ஜனாதிபதி வேட்பாளரை
அத்தனை சீக்கிரம் அறிப்பதாக இல்லை.
மாநிலக் கட்சிகள் ஆடிமுடித்த
இரண்டு நாள் கழித்து
காங்கிரஸ் வாய்திறந்து 'பிரணாப்' என்றது.
தொடர்ந்து பாரதிய ஜனதாவிடமும்
கையேந்தி நின்றது.
சுஸ்மா இரக்கம் காட்டுவார் என்று
அவரைப் பார்க்கிறது.

பாரதிய ஜனதாவோ இன்னும் யோசிக்கிறது.
நாளை (20.6.12) அது அறிவிக்க இருப்பதாக
இன்றைய செய்திகள் சொல்கின்றன.
ஜெயலலிதா அறிவித்த வேட்பாளரை
அவர்களது தலையில் கட்ட
அங்கே பெரிய ஒரு கூட்டமே வேலை செய்கிறது.
அந்தக் கட்சி எந்த வேட்பாளரை
அறிவித்தாலும், அல்லது ஆதரித்தாலும்
ஒருங்கிணைந்த ஆதரவாக
அது அமையும் என்பதற்கு
எந்த உத்தரவாதமும் இருப்பதாக தெரியவில்லை.

*
சந்தடி சாக்கில்
இந்தியக் கட்சிகள் ஒன்றைத் தெரிந்தே மறக்கிறார்கள்.
ஜனாதிபதி தேர்தல் குறித்த பேச்சு எழுந்த போதே
அப்பதவிக்கு பேசப்பட்ட நபர்களின் பட்டியலில்
கலைஞர் கருணாநிதியின் பெயரும் இருந்தது.
இன்றைக்கு அவரை யாருமே
அப்பதவிக்கு பேசாதது ஆச்சரியமே!
'பாவம் மனிதர், அதையும் அனுபவிக்கட்டுமே' என்று
ஒருவருக்காவது தோன்றியிருக்க வேண்டாமோ!?

ஒரு தமிழ்ப் பத்திரிகை
இதுபற்றி குறிப்பிட்டு எழுதியிருந்த போது...
'மூப்பனாரின் ஆவி பழிதீர்த்துவிட்டதாக!'
உண்மையாக இருக்குமாயென்ன?
எனக்கு நம்பிக்கை இல்லை.

***

நன்றி : தாஜ் | http://www.tamilpukkal.blogspot.com/  | satajdeen@gmail.com

3 comments:

  1. நல்ல அலசல். அன்னா ஹஸாரே பிரனாப்புக்கு எதிராக கிளப்புவது பூதமா? இல்லை புஸ்வானமா? தெரியவில்லை.

    ReplyDelete
  2. ஃபேஸ்புக்ல swathi swami கேட்டதுபோல, ஒரு ரப்பர்ஸ்டாம்ப்ப தேர்ந்தெடுக்க இத்தினி ஆர்ப்பாட்டமான்னு கேக்கத் தோனுது.

    ReplyDelete
  3. சோனியா அம்மாவுக்கு,
    அம்மா! நீங்க இப்படி எல்லாம் கஷ்டப்பட்டுக்கிட்டிருக்க வேண்டாம். பிரானாப்ஜீ அப்படியே இருக்கட்டும். பேசாம எங்க தாஜை ஜனாதிபதியாகவும், ஆபிதீனை துணை ஜனாதிபதியாகவும், என்னை அவங்க ரெண்டுபேருக்கும் சக்கரட்டரியாகவும், மஜீது காக்காவை ஆஸ்தான வைத்தியராகவும் நியமிச்சிடுங்க, பிரச்சினை தீர்ந்துவிடும்.

    குறிப்பு: நாங்க வந்தோம்டு வச்சுக்குங்க அன்னா தலைவலி ஒங்களுக்கு இல்லாமெ போயிடும்

    ReplyDelete